லோக்சபா தேர்தலில், தே.மு.தி.க., சார்பில், போட்டியிட, 'சீட்' கேட்டு விருப்ப மனு கொடுத்தவர்களிடம், அக்கட்சியின் தலைவர், விஜயகாந்த், நேற்று நேர்காணல் நடத்தினார். அப்போது, 'எந்த கட்சியுடன் கூட்டணி வைத்தால், வெற்றி பெறலாம்' என, அதிரடி கேள்வி எழுப்பியுள்ளார்.
லோக்சபா தேர்தலில், தே.மு.தி.க., சார்பில், போட்டியிட விரும்பும், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடமிருந்து, ஜனவரி, 23ம் தேதி முதல், விருப்ப மனுக்கள் பெறப்பட்டன.விருப்ப மனு தாக்கல் மூலம், 1 கோடி ரூபாய் வசூல் செய்ய வேண்டும் என, தே.மு.தி.க., தலைமை இலக்கு நிர்ணயித்தது. அதனால், விருப்ப மனு சமர்ப்பிப்போர், அதற்கான, கட்டணமாக, பொது தொகுதிக்கு, 20 ஆயிரம் ரூபாயும், தனி தொகுதிக்கு, 10 ஆயிரம் ரூபாயும் செலுத்த வேண்டும் என, தெரிவிக்கப்பட்டது. விருப்ப மனு தாக்கல் செய்ய, நேற்று தான் கடைசி நாள்.
அடையாள அட்டை:
அதேநேரத்தில், விருப்ப மனு, கொடுத்தவர்களிடம், தே.மு.தி.க., தலைவர், விஜயகாந்த், நேற்று முதல் நேர்காணலை துவக்கினார். தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகை, சிதம்பரம், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை ஆகிய, 10 தொகுதிகளுக்கான, நேர்காணல் நேற்று நடந்தது.காலை, 11:00 மணி முதல் மதியம், 1:00 மணி வரையும், மதிய உணவு இடைவெளிக்குப் பின், 2:30 மணி முதலும், நேர்காணல் நடந்தது.
விருப்பமனு தாக்கல் செய்தவர்களிடம், அவர்களின் கட்சி உறுப்பினர் அடையாள அட்டை, கல்வி சான்றிதழ், தனி தொகுதி யில் போட்டியிட விரும்புவர்களிடம், அவர்களின் ஜாதி சான்றிதழ் ஆகியவற்றை வாங்கி, விஜயகாந்த் சரி பார்த்தார். முன்னர் நடந்த தேர்தல்களில், தே.மு.தி.க., சார்பில் போட்டியிட்டு உள்ளீர்களா? போட்டியிட்டிருந்தால், எவ்வளவு ஓட்டுகள் பெற்றீர்கள்? லோக்சபா தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளித்தால், எவ்வளவு செலவு செய்வீர்கள்? அதற்கான, நிதி ஆதாரங்கள் உள்ளனவா? என்பன போன்ற கேள்விகளை, நேர்காணலின் போது, விஜயகாந்த் கேட்டு உள்ளார். அத்துடன், 'எந்த கட்சியுடன் கூட்டணி அமைத்தால், தே.மு.தி.க.,விற்கு வெற்றி வாய்ப்பு நன்றாக இருக்கும்' என்றும், வினவியுள்ளார்.
நேர்காணலில், பங்கேற்ற பலர், விஜயகாந்திடம் இருந்து, இந்த கேள்வியை எதிர்பாராததால், என்ன சொல்வது என, தெரியாமல் விழித்துள்ளனர்.உடன், விஜயகாந்த், 'கட்சியின் வளர்ச்சியில், அனைவருக்கும் பங்குள்ளது. உங்களுக்கு எது சரிஎன, தோன்றுகிறதோ, அதை தைரியமாக சொல்லுங்கள்' என, கூறியுள்ளார்.அதற்கு, நேர்காணலில் பங்கேற்றவர்களில் பலர், தி.மு.க., - -தே.மு.தி.க., - -பா.ஜ., இணைந்து கூட்டணி அமைக்க வேண்டும். இல்லையெனில், பா.ஜ., அணியில் தே.மு.தி.க., இடம்பெற வேண்டும்' என, கருத்து தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில், இது, தங்களின் தனிப்பட்ட கருத்து எனக்கூறிய அவர்கள், கட்சித் தலைமை எடுக்கும் முடிவுக்கு, கட்டுப்படுகிறோம் என்றும் தெரிவித்துஉள்ளனர்.
வேண்டுகோள்:
ஒவ்வொருவரும் தெரிவித்த கருத்துக்களை, விருப்ப மனுக்களில், விஜயகாந்த் குறித்து கொண்டுள்ளார். இறுதியாக, 'உங்களுக்கு, 'சீட்' கிடைக்கா விட்டாலும், கட்சி அறிவிக்கும் வேட்பாளரின் வெற்றிக்கு பாடுபட வேண்டும்' என, வேண்டுகோள் விடுத்து உள்ளார்.நீலகிரி, கோவை, பொள்ளாச்சி, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர், சேலம், திருச்சி மற்றும் பெரம்பலூர் தொகுதிகளுக்கான, வேட்பாளர்களை தேர்வு செய்ய, இன்று நேர்காணல் நடக்கிறது. நேற்றைய நேர்காணலின் போது, கட்சியின் மாநில நிர்வாகிகள், பார்த்த சாரதி, சந்திரக்குமார், சுதீஷ் ஆகியோர்உடனிருந்தனர்.
- நமது சிறப்பு நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE