கோதுமைக்கு இல்லாத சேவை வரி அரிசிக்கு மட்டும் ஏன்?| Dinamalar

கோதுமைக்கு இல்லாத சேவை வரி அரிசிக்கு மட்டும் ஏன்?

Added : பிப் 10, 2014 | கருத்துகள் (3)
கோதுமைக்கு இல்லாத சேவை வரி அரிசிக்கு மட்டும் ஏன்?

"அரிசியை, வேளாண்மை விளைபொருள் பட்டியலில் இருந்து நீக்கி இருக்கும், மத்திய நிதித்துறை சட்டம், கோதுமைக்கு அதிலிருந்து விதிவிலக்கு கொடுத்து, அரிசிக்கு மட்டும் சேவை வரி விதித்து, உத்தரவிட்டிருக்கிறது. இப்படி பொதுமக்கள் விரும்பாத, ஏற்றுக் கொள்ளாத, பல அறிவிப்புகளை, தொடர்ந்து, மத்திய அரசு வெளியிட்டுக் கொண்டிருக்கிறது' என, மத்திய அரசை கடுமையாகத் தாக்கி, அறிக்கை விட்டிருக்கிறார், தி.மு.க., தலைவர் கருணாநிதி. அத்தியாவசியப் பொருட்கள் மீது, மத்திய அரசு இப்படி வரி விதித்திருப்பது, மக்களை பெரிய அளவில் பாதிப்புக்குள்ளாக்கி இருப்பதாக தகவல் இருக்க, அது தொடர்பாக, இரண்டு பிரபலங்கள் நடத்திய கருத்து மோதல்கள் இங்கே:

பிரதமர் மன்மோகன் சிங்கை, மூன்றாவது முறையாக பிரதமராக அறிவிக்க, காங்கிரஸ் தயாராக இல்லை. நிதி அமைச்சராக இருக்கும் சிதம்பரத்தையும், பிரதமராக்க கட்சித் தலைமை விரும்பவில்லை. அதனால், இந்த இருவரும் சேர்ந்து, காங்கிரசை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என, கங்கணம் கட்டிக் கொண்டு, சாதாரண மக்களின் வயிற்றில் அடிக்கும் முடிவுகளை எடுத்து வருகின்றனர்.
இருவரும் பொருளாதார நிபுணர் கள். ஆனால், இவர்கள் வழிநடத்தும் அரசு, சாதாரண மக்களுக்கோ, தொழிலாளர்களுக்கோ, வணிகர்களுக்கோ, உற்பத்தியாளர்களுக்கோ நன்மை செய்ததாகத் தெரியவில்லை. காங்கிரஸ் தலைமையில், 10 ஆண்டு ஆட்சி என, சொல்வதை ஏற்க முடியாது. காங்கிரஸ்
தலைமையில், 2004 - 09 வரையிலான ஆட்சி, கூட்டணி ஆட்சி தான். 2009 - 14 வரையிலான இரண்டாவது ஐந்தாண்டு ஆட்சி, கூட்டணி ஆட்சியல்ல. காங்கிரஸ் ஆட்சி. கூட்டணிக் கட்சிகள் எதையும் கலந்தாலோசிக்கவில்லை. குறிப்பாக, முதல் ஐந்தாண்டு ஆட்சி யின் போது, பொது செயல் திட்டத்தை வகுத்தனர். இரண்டாவது ஐந்தாண்டு ஆட்சியின் துவக்கத்தின் போதே, பொது செயல் திட்டத்தை வகுத்து செயல்பட முடியாது என, அறிவித்து விட்டனர். இதனால், மக்களின் வெறுப்பை சம்பாதித்து, வரும் லோக்சபா தேர்தலில், வெற்றி பெற முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. காங்கிரசின் தன்னிச்சையான போக்கால் தான், கூட்டணிக் கட்சிகள் எல்லாம், ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலிருந்து வெளியேறும் சூழல் ஏற்பட்டது.
ஆட்சியின் கடைசி நாள் வரை கூட, மக்கள் விரோத நடவடிக்கையை கைவிடும் எண்ணத்தில் காங்கிரஸ் இல்லை. அதன் வெளிப்பாடே, அரிசிக்கு சேவை வரி விதித்து உள்ளது. வட மாநிலங்களில் வென்று விடாலம் என்ற எண்ணத்தில், கோதுமைக்கு அந்த வரியை விதிக்காமல் விட்டு விட்டனர் போல் தெரிகிறது.

ரவிக்குமார், பொதுச் செயலர், விடுதலை சிறுத்தைகள்

சேவை வரியை விதித்தபோது, கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால், துவக்கத்தில் மிகக் குறைவான வருவாயை, மத்திய அரசுக்கு இவ்வரி அளித்தது. இப்போது, சேவை வரி வருவாய், அரசின் மொத்த வருவாயில், மிகப்பெரிய பங்கைப் பெற்றுள்ளது. அதற்குக் காரணம், சேவை வரியை, மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். சேவை வரி விதிப்பதன் நியாயத்தையும், அறிந்து உள்ளனர் என்றே தெரிகிறது.
சேவை வரி மூலம் திரட்டப்படும் நிதி, நாட்டின் பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும், மக்கள் வளர்ச்சித் திட்டங்களுக்குத் தான் செலவிடப்படுகிறது. மக்கள் தொகை அதிகரிப்பின் மூலம், அதிகரிக்கும் தேவைகளை பூர்த்தி செய்வதும், சமூக பாதுகாப்புத் திட்டங்களை செயல்படுத்த வேண்டியதும், ஒரு அரசின் கடமை. அதற்காகத் தான், வரி வருவாயை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இந்நிலையில், சேவை வரியை தவறு என்றோ. சேவை வரியை வசூலிப்பதன் மூலம், மக்கள் விரோத செயல்களில் அரசு ஈடுபடுகிறது என்றோ குற்றம் சாட்டுவது தவறானது. எந்த ஒரு அரசும், தன்னைத் தானே தோற்கடித்துக் கொள்ளும் முடிவுகளை எடுக்காது. சேவை வரிப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள, சில பொருட்கள் குறித்து, முனங்கல்கள் அவ்வப்போது எழத்தான் செய்யும். இப்போது, அரிசிக்கு சேவை வரி விதிப்பது குறித்து, கருத்து வெளியிடுகின்றனர். தேர்தலுக்காக என்றில்லாமல், விலைவாசியை உயர்த்தும், அத்தியாவசியப் பொருட்கள் மீது, எப்போதும் வரி விதிக்கக் கூடாது என்பதே, காங்கிரசின் கருத்து.
எனவே, சேவை வரி விதிப்பதன் மூலம், அரிசி விலை உயரும். அதனால், சாதாரண மக்கள் பாதிக்கப்படுவர் என்ற நிலை ஏற்படும் என்றால், அரிசிக்கு விதிக்கப்பட்டுள்ள, சேவை வரியை ரத்து செய்ய வேண்டும் என, தமிழக காங்கிரஸ் சார்பில், மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வோம்.அரிசிக்கு விதித்துள்ள சேவை வரியை ரத்து செய்ய நடவடிக்கை எடுப்போம்.

ஞானதேசிகன், தமிழக காங்., தலைவர்

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X