நாட்டிலேயே மிகப்பெரிய மாநிலம், உத்தர பிரதேசம். 80 லோக்சபா தொகுதிகளை உடைய, இம்மாநிலத்தில், வரும் லோக்சபா தேர்தலில், அதிக இடங்களைப் பிடித்து விட வேண்டும் என்ற முனைப்போடு செயல்பட்டு வருகிறது, பாரதிய ஜனதா கட்சி. அதற்கேற்ற வகையில், தீவிர பிரசாரத்தையும் மேற்கொண்டுள்ளது. அதேபோல், காங்கிரஸ் கட்சியும், அதிக தொகுதிகளை கைப்பற்ற, திட்டம் வகுத்து செயல்படுகிறது.ஆனால், இந்த இரு தேசிய கட்சிகளின் பிரசாரத்தை முறியடிக்கும் வகையிலும், தங்களுக்கு சாதகமாக ஓட்டுகளைப் பெறவும், குறிப்பாக, தலித் ஓட்டுகளைப் பெறும் நடவடிக்கையில் இறங்கியுள்ளன, முலாயம் சிங்கின் சமாஜ்வாதி மற்றும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிகள்.
மத்திய அரசின் தாழ்த்தப்பட்டோர்பட்டியலில், புதிதாக, 17 ஜாதிகளை சேர்க்க வேண்டும் என்ற கோஷத்தை எழுப்பி, அதன் மூலம், அந்தப் பிரிவினரின் ஆதரவைப் பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.கடந்த, 2002 - 07ல், முலாயம் சிங் தலைமையிலான, சமாஜ்வாதி அரசு, உ.பி.,யில் ஆட்சியில் இருந்தபோது, இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள, 17 ஜாதிகளை, தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க முடிவு செய்தது. உ.பி., மாநில அரசின், தாழ்த்தப்பட்டோர் மற்றும் மலைவாழ் பழங்குடியினர் ஆராய்ச்சி நிறுவனம் அளித்த அறிக்கையின் அடிப்படையில், இந்தநடவடிக்கையை எடுத்தது.இருந்தாலும், பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருக்கும் ஜாதியினரை, தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் எனில், அதை, உ.பி., மாநில அரசு மட்டும், தன்னிச்சையாக செய்ய முடியாது. அதனால், குறிப்பிட்ட, 17 ஜாதியினரையும், தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற பரிந்துரையை, மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது.
ஆனாலும், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் பட்டியலில், புதிதாக சேர்க்கப்பட்ட, ஜாதிகள் குறித்த பட்டியலை, சில மாதங்களுக்கு முன், மத்திய அரசு வெளியிட்ட போது, அந்த பட்டியலில், உ.பி., மாநில அரசு பரிந்துரைத்தஜாதிகள் எதுவும் இடம் பெறவில்லை. அதுமட்டுமின்றி, இந்த, 17 ஜாதிகள், தற்போது, இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் மட்டுமின்றி, தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் பட்டியலிலும் இடம் பெறவில்லை. அதனால், இந்தப் பிரச்னையை, சமீப நாட்களாக, ஒவ்வொரு நிகழ்ச்சிகளிலும், பொதுக்கூட்டங்களிலும், சமாஜ்வாதி தலைவர்கள் பேசி வருகின்றனர். பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் நலன் விஷயத்தில், மத்திய அரசு பாரபட்சமாக செயல்படுகிறது என்றும் குற்றஞ்சாட்டுகின்றனர். அத்துடன், முந்தைய பா.ஜ., அரசும், இந்த விஷயத்தில் அக்கறை காட்டவில்லை என்றும், விமர்சிக்கின்றனர்.
தற்போது, இதே பிரச்னையை, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும், கையில் எடுத்து, மத்திய அரசு மற்றும் பா.ஜ.,வுக்கு, பிரசாரம் செய்து வருகிறது. சமீபத்தில், ராஜ்யசபாவில், இந்த பிரச்னையை, பூஜ்ஜிய நேரத்தின் போது, சமாஜ்வாதி தலைவர்களில் ஒருவரான, ராம்கோபால் யாதவ் எழுப்பி போது, அதற்கு, பகுஜன் சமாஜ் எம்.பி., சதீஷ் சந்திர மிஸ்ராவும் ஆதரவு தெரிவித்தார்.இரு கட்சியினரும், சபையின் மையத்திற்கு சென்று, பூஜ்ஜிய நேரத்தை ரத்து செய்து விட்டு, இப்பிரச்னை தொடர்பாக விவாதிக்க, அனுமதிக்க வேண்டும் என்றும், கோரிக்கை விடுத்தனர். அதனால், சபை நிகழ்ச்சிகளை, இரு முறை ஒத்திவைக்கவும் நேரிட்டது.அதனால், வரும் லோக்சபா தேர்தலில், இப்பிரச்னையை மையமாக வைத்து, மத்திய அரசு மற்றும் பா.ஜ.,வுக்கு எதிராக, இந்த இரு கட்சிகளும், பிரசாரம் செய்யலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு பிரச்னையையும் எழுப்பி, அந்த சமூகத்தினரின் ஆதரவையும் பெற திட்டமிட்டுள்ளன.
- நமது சிறப்பு நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE