சென்னை: ''தி.மு.க.,- அ.தி.மு.க., ஆகிய கட்சிகளை ஒழிக்க வேண்டும் என்பதுதான் எங்கள் கொள்கை. கிழக்கே உதிக்கும் சூரியன் மேற்கே உதித்தாலும் திராவிட கட்சிகளுடன் இனி கூட்டணி இல்லை,'' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறினார்.
பா.ம.க., சார்பில், 'மாதிரி பட்ஜெட்' நேற்று சென்னையில் வெளியிடப்பட்டது. அதை வெளியிட்ட அக்கட்சி, நிறுவனர் ராமதாஸ் கூறியதாவது:பா.ம.க., சார்பில், 11 ஆண்டுகளாக, தமிழக அரசு பட்ஜெட் தாக்கல் செய்தவற்கு முன், மக்கள் மன்றத்தில் 'மாதிரி பட்ஜெட்' வெளியிட்டு வருகிறோம். இந்த நடைமுறை மேற்கத்திய நாடுகளில் உள்ளன. நாங்கள் வெளியிட்டது 12வது பட்ஜெட்இதில் முக்கிய அம்சங்கள்அனைத்து குழந்தைகளுக்கும் கட்டாய, கட்டணமில்லா கல்வி; தரமான கல்வி வழங்குவது. மத்திய அரசு பாடத்திட்டங்களுக்கு இணையான, பாடத் திட்டங்களை அறிமுகப்படுத்துவது. ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான தேர்ச்சி மதிப்பெண்களை மாற்றி அமைப்பது. முதுநிலை ஆசிரியர் பணிக்கான போட்டி தேர்வை ரத்து செய்வது. தற்காலிக, பகுதிநேர ஆசிரியர்களை நிரந்தரம் செய்வது. பள்ளி கல்வித்துறைக்கான நிதி ஒதுக்கீட்டை, 30 ஆயிரம் கோடியாக உயர்த்துவது.அரசு மருத்துவமனைகளை தரம் உயர்த்தி, அனைத்து சிகிச்சைகளையும் தரமாகவும், இலவசமாகவும் வழங்குவது. டாக்டர்கள் பணி நியமனத்தில் இடஒதுக்கீடு முறையை கடைபிடிப்பது. இந்த துறைக்கு ரூ. 18 ஆயிரம் கோடி நிதி ஒதுக்குவது.
விவசாயிகளுக்கு தரமான விதைகள், மரம், பூச்சிக்கொல்லி மருந்து இலவசமாக வழங்குவது. விவசாயத்துக்காக, ஊராட்சிகளுக்கு, ஒரு டிராக்டர் இலவசமாக வழங்குவது. இந்த துறைக்கு, 10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்குவது. எருமைப்பால் லிட்டருக்கு, 40 ரூபாய்; பசும்பால், 30 ரூபாய் வீதமும் கொள்முதல் விலையை உயர்த்துவது.
பூரண மதுவிலக்கை அமுல்படுத்துவது. ஊழலை ஒழிக்க, 'லோக் அயுக்தா' அமைப்பை ஏற்படுத்துவது. பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாவதை தடுக்கவும், 'நாடகக் காதலால்' பெண்கள் பாதிக்கப்படுவதை தடுக்கவும், பெண் ஐ.ஏ.எஸ்., அதிகாரி தலைமையில், தனிப் பிரிவை ஏற்படுத்துவது.புதிய தொழிற்சாலைகளுக்கு, ஒற்றை சாளர முறையில் அனுமதி வழங்குவது. மதுரை, கோவை, திருச்சியில் 'மெட்ரோ ரயில்' திட்டத்தை அமுல்படுத்துவது. கிடப்பில் போடப்பட்டுள்ள, 12 ஆயிரம் மொகவாட் மின் உற்பத்தி திட்டங்களை, விரைந்து செயல்படுத்துவது. உள்ளாட்சி, அரசு பணிகளில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது.பிளஸ் 2 வரை, தமிழை ஒரு பாடமாக எடுத்து படித்தவர்களுக்கு மட்டும் அரசு வேலை வழங்குவது. எம்.எல்.ஏ., க்கள் தொகுதி மேம்பாட்டு நிதியை, 3 கோடி ரூபாயாக உயர்த்துவது. அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் நாளிலேயே, அனைத்து பலன்களும் கிடைக்க வகை செய்வது என்பது உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.
பின், கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்:
கூட்டணி குறித்து உங்களுக்கு தெரியாமல் எதுவும் நடக்காது. 'கத்தரிக்காய்' முற்றினால் கடைத்தெருவுக்கு வந்துதான் தீரும்?எல்லா கட்சிகளும், 'கத்தரிக்காய்' பயிரிட்டிருக்கின்றன. நாங்களும் பயிரிட்டிருக்கிறோம். நாங்களும் பேசி வருகிறோம்.பா.ஜ., வுடன் பா.ம.க., கூட்டணி அமைக்குமா என்பது குறித்து பா.ஜ., தலைவர் பொன்.ராதாகிருஷ்ணனிடமே கேளுங்கள். எதுவாக இருந்தாலும் உரிய நேரத்தில் அறிவிப்போம். ஏற்கனவே, 10 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்து விட்டோம். அதை ஏன் விட்டுக் கொடுக்க வேண்டும்?இவ்வாறு ராமதாஸ் கூறினார்.மாநில தலைவர் ஜி.கே.மணி, பசுமைத் தாயகம் அமைப்பாளர் அருள்
உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE