'சட்டசபையில், பட்ஜெட் கூட்டத்தொடர் முடியும் வரை, குடியிருப்புகளுக்கு, சீராக மின் வினியோகம் வழங்க வேண்டும். அதனால், அனல்மின் நிலையங்களில், மின் உற்பத்தியை குறைக்க வேண்டாம்' என, மின் வாரிய அதிகாரிகளுக்கு, தமிழக அரசு, உத்தரவிட்டுள்ளது.
வரும், 13ம் தேதி, சட்டசபை கூடுகிறது. அப்போது, எதிர்க்கட்சிகள், மின்தடை குறித்து, பிரச்னை எழுப்ப திட்டமிட்டுள்ளனர். இதனால், சட்டசபை முடியும் வரை, குடியிருப்புகளுக்கு, மின்தடை செய்யாதவாறு, மின் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மின் வாரிய அதிகாரிகளுக்கு, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து, எரிசக்தி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:மேட்டூர் விரிவாக்கம் தவிர, மற்ற அனைத்து மின் நிலையங்களிலும், மின் உற்பத்தி செய்யப்படுகிறது. மேட்டூரில், பராமரிப்பு பணி காரணமாக, ஜன., இரண்டாவது வாரத்தில், மின் உற்பத்தி நிறுத்த முடிவு செய்யப்பட்டது.கடந்த 30ம் தேதி, சட்டசபை கூடியதால், மின் உற்பத்தி நிறுத்தப்படவில்லை. பிப்., முதல் வாரத்தில் தான், மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதனால், அங்கு, மீண்டும் மின் உற்பத்தி துவங்குவதில், தாமதம் ஏற்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.
'9:00 மணிக்கு ஆஜர்':
சட்டசபை நடக்கும் நாட்களில், மின் வாரிய ஊழியர்கள் அனைவரும், காலை 9:00 மணிக்கு அலுவலகம் வர வேண்டும் என்றும், இரவு 7:30 மணிக்கு, திரும்ப செல்ல வேண்டும் எனவும், உத்தரவிடப்பட்டு உள்ளது.
- நமது நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE