மதுரை: "லோக்சபா தேர்தல் கூட்டணிக்காக, தே.மு.தி.க.,விற்கு பா.ஜ., சார்பில் காலக்கெடு விதிக்கவில்லை. தற்போதைய நிலையில், கூட்டணி முடிவுக்கு எந்த அவசரமும் இல்லை," என, பா.ஜ., மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
மதுரையில் பா.ஜ., இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ்., உட்பட பல்வேறு இந்து அமைப்புகளின், மாநில நிர்வாகிகளின் தேர்தல் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன், தேசிய செயலாளர் தமிழிசை சவுந்திரராஜன், பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் உட்பட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்திற்கு பின், நிருபர்களிடம் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது: பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் சென்னை பொதுக் கூட்டம் காரணமாக, பிப்., 7 ம் தேதி முதல் கூட்டணி தொடர்பாக எந்த கட்சியுடனும் பேசவில்லை. வரும் 21ம் தேதி சென்னையில், தாமரையின் சமூக நீதி மாநாடு நடக்கிறது. அதுதொடர்பான பணிகளில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம். கட்சிப் பிரதிநிதிகள் மட்டும் பங்கேற்பார்கள். 'தாலி காக்கும் தாமரை; பூரண மதுவிலக்கு' என்பதை வலியுறுத்தி, பிப்., கடைசியில், பெருந்துறையில் பா.ஜ., மகளிரணி சார்பில் போராட்டம் நடக்கிறது. அதைத் தொடர்ந்து பா.ஜ., ஆதிதிராவிடர் மகளிரணி சார்பில் மதுரையிலும் போராட்டம் நடக்கிறது. தமிழகத்தில், 39 லோக்சபா தொகுதிகளிலும் மாநாடு நடத்தி, ஓட்டுச் சாவடி பொறுப்பாளர், உறுப்பினர்களுக்கு தேர்தல் பணிகள் குறித்து ஆலேசானை வழங்கப்படும். தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் குறித்து காந்திய மக்கள் கட்சித் தலைவர் தமிழருவி மணியனின், 'மாட்டுத் தரகு பேரத்தில் அவர் ஈடுபடுகிறார்' என்ற விமர்சனத்தில் எந்தளவு உண்மை என்று எனக்குத் தெரியவில்லை. பொதுவாக கட்சித் தலைவர்களை குறிப்பிடும்போது, மரியாதையுடன் குறிப்பிட்டால் கவுரவமாக இருக்கும். பிப்.,8க்கு முன் கூட்டணி முடிவு தெரிய அவசரம் காட்டினோம். சென்னையில் நரேந்திர மோடி பங்கேற்ற பொதுக் கூட்ட மேடையில், கூட்டணித் தலைவர்களை மேடையேற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் முயற்சி செய்தோம். இப்போதைய நிலையில், கூட்டணிக்கு எவ்வித அவசரமும் இல்லை. கூட்டணிக்காக எந்தக் கட்சிக்கும் காலக்கெடு ஏதும் விதிக்கவில்லை. தே.மு.தி.க., தனித்து போட்டியிட வேண்டும் என அக்கட்சி முடிவு செய்தால், அது அக்கட்சியின் உரிமை. அதில் யாரும் தலையிட முடியாது. ஒரு அரசியல் கட்சி தனித்து போட்டியிடவும், கூட்டணி அமைத்து போட்டியிடவும் முழு உரிமை உண்டு. கூட்டணி குறித்து தே.மு.தி.க., தான் முடிவு எடுக்க வேண்டும், என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE