அ.தி.மு.க.,வில் நேற்று முன்தினம் இரவு, இரண்டு மாவட்ட செயலர்கள் மாற்றப்பட்டதன் பின்னணி வெளியாகி உள்ளது. இதில், ஒரு மாவட்ட செயலர், மாற்று கட்சியுடன் தொடர்பில் உள்ளவரை நேர்காணலுக்கு அனுப்பியதால், பதவியை இழந்து உள்ளார். மற்றொருவர், கேபிள் 'டிவி' நிர்வாக குழப்பத்திற்காக, பதவியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார். இதன் தொடர்ச்சியாக, 'மேலும் சிலர் மாற்றப்படுவர்' என, தகவல் வெளியாகி உள்ளது.
காஞ்சிபுரம் மத்திய மாவட்ட செயலராக இருந்தவர், சிட்லபாக்கம் ராஜேந்திரன்; இவர், தென்சென்னை எம்.பி.,யாகவும் உள்ளார் இவர் சமீபத்தில், 'கோப்ரா போஸ்ட்' இணைய தள பத்திரிகை நடத்திய, 'ஸ்டிங் ஆப்ரேஷன்' என்ற ரகசிய கேமரா பதிவு நடவடிக்கையில் சிக்கினார். பரிந்துரை கடிதம் கொடுக்க, பணம் பெற்றதாக, இவர் மீது புகார் எழுந்தது. இவருடன், பொள்ளாச்சி தொகுதி, அ.தி.மு.க., - எம்.பி., சுகுமார் மீதும், இதே குற்றம் சுமத்தப்பட்டது.
விளக்க கடிதம்:
ஆனால், 'தவறு செய்யவில்லை' என, கட்சி தலைமைக்கு இருவரும், விளக்க கடிதம் கொடுத்தனர். எனவே, அப்போது, அவர்களின் பதவி பறிக்கப்படவில்லை. அ.தி.மு.க.,வில், லோக்சபா தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து, 3,000 பேர் விருப்ப மனு கொடுத்தனர். இதில், மாவட்டச் செயலர்கள் பரிந்துரை செய்த பட்டியலில் இடம் பெற்றவர்கள், நேர்காணலுக்கு அழைக்கப்பட்டனர். காஞ்சிபுரம் தொகுதிக்கான நேர்காணலில், பங்கேற்ற பெண் ஒருவரின் கணவர், புதிய பாரதம் கட்சியில் இருந்துள்ளார். இதை அறியாமல், அவரது பெயரை, மாவட்ட செயலர், சிட்லபாக்கம் ராஜேந்திரன் பரிந்துரை செய்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, நேற்று முன்தினம் இரவு, அவர், மாவட்டச் செயலர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டார். 'புதிய நபர் நியமிக்கப்படும் வரை, காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட செயலராக உள்ள, அமைச்சர் சின்னையா, கூடுதல் பொறுப்பாக, கவனித்து கொள்வார்' என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
பல்வேறு முறைகேடு:
இத்துடன், திருப்பூர் புறநகர் மாவட்டச் செயலர், உடுமலை ராதாகிருஷ்ணன், கட்சி பதவி பறிக்கப்பட்டு உள்ளது. இவர் தமிழ்நாடு அரசு கேபிள் 'டிவி' கார்ப்பரேஷன் தலைவராக உள்ளார். 'கேபிள் 'டிவி' ஆப்ரேட்டர்கள், அரசு வழங்கும் ரசீது புத்தகத்தைக் கொண்டு, வாடிக்கையாளர்களிடம், மாத சந்தா கட்டணமாக, 70 ரூபாய், வசூலிக்க வேண்டும்' என, இவர் உத்தரவிட்டார். இதற்கு, கேபிள் ஆப்ரேட்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், அரசு கேபிள் 'டிவி' நிர்வாகத்தில், பல்வேறு முறைகேடு நடைபெறுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், 'ராதாகிருஷ்ணன், மாவட்டத்திற்கு வருவதில்லை' என, கட்சியினர் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில், அவரது கட்சி பதவி பறிக்கப்பட்டு உள்ளது. அவருக்கு பதிலாக, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், மாவட்டச் செயலராக நியமிக்கப்பட்டு உள்ளார். இவர்கள் இருவரை தொடர்ந்து, மேலும், சில மாவட்டச் செயலர்கள் மாற்றப்படுவர் என, தகவல் வெளியாகி உள்ளது. அப்போது, காலியாக உள்ள பதவிகளுக்கு, புதியவர்கள் நியமிக்கப்படுவர் என்பதால், பலர் பதவி ஆசையில் காத்திருக்கின்றனர். தற்போது மாவட்ட செயலர் பதவியை இழந்திருக்கும் இருவரும், வரும் லோக்சபா தேர்தலுக்கு 'சீட்' எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்த அதிரடி மாற்றம் மூலமாக, இருவரும் அந்த வாய்ப்பை இழந்து விட்டதாக, கட்சியினர் கருத்து சொல்கின்றனர்.
- நமது சிறப்பு நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE