லோக்சபா தேர்தலில் பழைய பஞ்சாங்கமான ஜாதி, மதம் ஆகியவை முக்கிய பிரச்னையாக இடம்பெறாது. ஆனால், காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் போன்ற கட்சிகள் இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீட்டில் சலுகை அளிப்பதாக வாக்குறுதி கொடுத்து, சிறுபான்மையினத்தவரின் ஓட்டுக்களை வாங்க முயற்சிக்கின்றன. ஆனால், அதெல்லாம் வாக்காளர்களை கவராது. நாட்டின் வளர்ச்சிதான், வரும் லோக்சபா தேர்தலில் முன்னிலைப்படுத்தப்படும் என, பா.ஜ., தரப்பினர் தேர்தல் வியூகத்தை வெளியிடுகின்றனர். இது குறித்து எதிர்ரெதிர் அரசியல் நிலைப்பாட்டில்இருக்கும் பிரபலங்களின் கருத்துக்கள், இதோ:
காங்கிரஸ் தலைமையிலான, கடந்த 10 ஆண்டு கால மத்திய ஆட்சி, நாட்டின் மிக முக்கியமான கால கட்டம். பொருளாதாரத்தில் நாட்டின் நிலையை முடிவு செய்யும் இக்கட்டான நிலையில் இருந்துள்ளோம். ஆனால், காங்கிரஸ் அரசு, அனைத்து துறைகளிலும் தோற்றுவிட்டது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 5 சதவீதத்துக்கும் கீழ் சென்றுவிட்டது. விலைவாசி உயர்வு சதவீதம் இரட்டை இலக்கத்தை எட்டியது. உணவு பொருள் விலைவாசி, எப்போதும் இல்லாத அளவாக, 18 சதவீதத்தை எட்டியது. ஒரு நாட்டில் போர் நடக்கும்போது ஏற்படும் நெருக்கடியை, கடந்த 10 ஆண்டுகளில் நாடு சந்தித்துள்ளது. இவ்வளவு பொருளாதார நெருக்கடி இருந்தபோதிலும், ஊழலுக்கும் மட்டும் பஞ்சமில்லை. நாட்டையே உலுக்கிய, 2ஜி ஊழல், நிலக்கரி சுரங்க ஊழல், காமன்வெல்த் போட்டி தொடர்பான ஆயத்த பணிகளில் ஊழல் என, அடுக்கடுக்கான ஊழல்கள் வெளிப்பட்டன. நம்பி ஆட்சி செய்ய அனுப்பியவர்கள், இப்படி நடந்து கொண்டனரே என்ற, தீராத மன காயத்தில் உள்ளனர், மக்கள். இன்று காங்கிரசுக்கு மாற்றாக, பா.ஜ., உள்ளது. அதன், பிரதமர் வேட்பாளர் மோடியை மக்கள் ஏற்றுக் கொண்டு உள்ளனர். இதிலிருந்து, தப்பிக்க பா.ஜ., மீது, மதவாத சாயம் பூசுகின்றனர். மோடி பிரதமரானால், நாட்டில் மத மோதல்கள் நடக்கும் என, பொய் பிரசாரத்தை அவிழ்த்து விடுகின்றனர். தொடர்ந்து நான்காவது முறையாக குஜராத்தில் முதல்வராகியுள்ள மோடியால், எல்லா துறைகளிலும் நாட்டின் முதல் மாநிலமாக குஜராத் திகழ்கிறது. இதை, மக்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். எதிர்க்கட்சிகள் தான் ஏற்க மறுக்கின்றன. நாட்டில் இப்போதைய முக்கியப் பிரச்னை, ஜாதியோ, மதமோ அல்ல. வளர்ச்சி தான். இதிலிருந்து மாறுபட்டு சிந்திக்க யாருக்கும் நேரம் இல்லை. குஜராத்தில் சாதித்துக் காட்டிய, வளர்ச்சியை, நாடு முழுவதும் பரவலாக்க வேண்டும் என, மோடி விரும்புகிறார். அதற்கு தான், ஆதரவும் கேட்கிறார்.
நாசரேத் துரை, துணை பொதுசெயலர், ம.தி.மு.க.,
நாட்டை வழி நடத்தப் போகிறோம் என, மோடியும், அவரது சகாக்களும் சொல்லும்போது, குஜராத்தில் அவர்கள் செய்த மத மோதல்கள் தான் முன்னுக்கு நிற்கிறது. குஜராத் மத கலவரத்தில் ஈடுபட்டதாக, அம்மாநில உயர் போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் சிறையில் உள்ளனர். டி.ஐ.ஜி., அந்தஸ்த்தில் உள்ள போலீஸ் அதிகாரி, ''எய்தவர் இருக்க அம்பை நொந்து கொள்வது ஏன்? ஆட்சியாளர்கள் சொன்னார்கள், நாங்கள் செய்தோம். ஆனால், ஆட்சியாளர்களை நிரபராதி என, விடுதலை செய்கின்றனர். எங்களை, சிறையில் அடைக்கின்றனர்,'' என, குஜராத் மதக் கலவரம் குறித்த, தன் மனக்குமுறலை வெளியிட்டுள்ளார். இந்நிலையில், மோடியும் அவரது சகாக்களும், லோக்சபா தேர்தலுக்கு தங்களை முன்னிறுத்தினால், அவர்கள் செய்த மத கலவரங்கள் தான், மக்கள் முன் நிற்கும். அதிலிருந்து தப்பிக்க வேண்டும் என்பதற்காக, நாட்டின் வளர்ச்சி தான், லோக்சபா தேர்தல் முன்னுள்ள முக்கிய அம்சம் என, கூறுகின்றனர். நாட்டின் வளர்ச்சி என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால், அதை செய்யப் போகிறோம் என, சொல்பவர்கள் யார் என்பது தான் பிரச்னை. குஜராத்தில் சாதித்துக் காட்டியதை, நாடு முழுவதும் செய்யப் போகிறார் என, மோடியை முன்னிறுத்துகின்றனர். குஜராத் எந்தத் துறையில் முன்னணியில் உள்ளது என்பதை முதலில் தெரிவிக்க வேண்டும். நூறு சதவீத கல்வியறிவைப் பெற்று, கேரளம் முதலிடத்தில் உள்ளது. குழந்தைகள் இறப்பு விகிதத்தில், நாட்டிலேயே மிகக் குறைந்த அளவை, தமிழகம் கொண்டுள்ளது. இதுபோல், எந்தத் துறையில், குஜராத் முன்னிலை வகிக்கிறது என, சொல்லவேண்டும். இதையெல்லாம் விட்டு விட்டு, கடந்த கால குற்றங்களை மறைக்க, வளர்ச்சி தான் முக்கியம். அது தான், லோக்சபா தேர்தலின் முக்கிய அம்சம் என, பா.ஜ.,வினர் கூறுவதை, கலவரத்தில் ஈடுபட்ட அவர்களின் முகத்தை மறைக்கும் முகமூடியாகவே கருத முடியும். அதில், நியாயம் இருப்பதாகத் தெரியவில்லை.
பாலகிருஷ்ணன், எம்.எல்.ஏ., மார்க்சிஸ்ட் கம்யூ.,
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE