மதுரை: "மத்திய அரசு தாக்கல் செய்த, இடைக்கால ரயில்வே பட்ஜெட்டில் தென் மாவட்டங்கள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளன. வளர்ச்சிக்கு உதவாக பட்ஜெட்,' என பல்வேறு தரப்பினர் கடுமையாக சாடியுள்ளனர். இப்பட்ஜெட்டில் தமிழகத்திற்கு ஒன்பது ரயில்கள், பயணிகள் மற்றும் சரக்கு கட்டணம் உயர்த்தப்படாதது போன்ற அம்சங்கள் இருந்தாலும், மதுரை உட்பட தென் மாவட்டங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து பயணிகளின் குமுறல்கள்...
புதிய ரயில் இல்லை : தண்டபாணி, ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல்., ஊழியர், மதுரை: நீண்ட காலமாக இழுபறியில் இருக்கும், மதுரை-கோவை அகல பாதை எப்போது பயன்பாட்டிற்கு வரும் என அறிவிக்கப்படவில்லை. தென் மாவட்டங்களுக்கு புதிய ரயில்கள் இல்லை. ஒதுக்கப்படும் ரயில் பெட்டிகளும் மோசமாக இருக்கின்றன. தென் மாவட்டங்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகின்றன.
மதுரைக்கு பலன் இல்லை : மைக்கேல்ராஜ், மதுரா கோட்ஸ் ஊழியர், மதுரை: மதுரையிலிருந்து வேளாங்கண்ணி, திருப்பதி, நாகூருக்கு நேரடி ரயில்களை இயக்க வேண்டும் என பக்தர்கள் நீண்டகாலமாக எதிர்பார்க்கின்றனர். மதுரை-போடி அகல பாதை பணிகள் கடந்த இரு ஆண்டுகளாக நிதியின்றி துவங்கப்படவேயில்லை. மதுரை வழியாக சென்னை, பெங்களூரு செல்லும் ரயில்களில் பயணிகள் நெரிசல்
அதிகம். மதுரை பயணிகளுக்கு, பட்ஜெட்டால் எள்ளளவும் பயனில்லை.
மொத்தத்தில் ஏமாற்றம் : பத்மநாதன், ரயில்வே பயணிகள் நலச்சங்கத் தலைவர், மதுரை: ரயில்வே இடைக்கால பட்ஜெட் மொத்தத்தில் ஏமாற்றமளிக்கிறது. சென்னை-நாகர்கோவில் இரட்டை பாதை இந்தாண்டும் முடியாது. கச்சகுடா-மதுரை ரயிலை தற்போது நெல்லை வரை நீடித்துள்ளதால், மதுரை பயணிகளுக்கு பயன் இருக்காது. அடிக்கடி ரயில் விபத்துக்கள் நிகழ்கின்றன. அதை நிரந்தரமாக தடுக்கவும், பெட்டிகளில் எலி, கரப்பான் பூச்சிகளை ஒழிக்கவும் அறிவிப்புகள் இல்லை. கடந்த பட்ஜெட்டில் அறிவித்த ரயில்கள் இயக்கப்படாத போது, தற்போதைய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட ரயில்கள் இயங்குமா என்பது சந்தேகமே.
மோகன், நுகர்பொருள் மொத்த வியாபாரிகள் சங்க செயலாளர், மதுரை: தமிழகத்திற்கு 10 ரயில்கள் அறிவித்தது வரவேற்கத்தக்கது. சென்னை-அசாம், புனலூர்-கன்னியாகுமரி ரயில் வசதி நல்லது. மொபைல் போன் மூலம் டிக்கெட் பதிவு, உணவு, முன்கூட்டியே ரயில்நிலையங்களை தெரிவது என வசதிகள் ஏற்படுத்தப்படுவது மகிழ்ச்சியே. இரட்டை ரயில்பாதை பணிகளை துரிதப்படுத்த அறிவித்து இருக்கலாம். மின்பாதைகளை விரைவுபடுத்தி முழுமை பெறச் செய்வது எப்போது என தெரியவில்லை.
கிடப்பில் சபரிமலை ரயில் : டி.கிருபாகரன், திண்டுக்கல் மாவட்ட தொழில் வர்த்தகர் சங்க தலைவர்: பயணிகள் ரயில் கட்டணத்தை உயர்த்தாதது. டிக்?கட் முன்பதிவு செய்து, காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களுக்கு, தற்போதைய நிலை குறித்து எஸ்.எம்.எஸ்., அனுப்புவது வரவேற்கத்தக்கது. தமிழகத்திற்கு ஒன்பது ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ரயில்களே இதுவரை முழுமையாக
இயக்கப்படவில்லை. மதுரையில் இருந்து சென்னைக்கு பகல் நேர பயணிகள் ரயில், "புல்லட்' ரயில், திண்டுக்கல்லில் இருந்து குமுளி வழியாக சபரிமலைக்கு செல்லும் திட்டம் போன்றவை கிடப்பில் போடப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அறிவிக்கப்படும் ரயில் திட்டங்கள் வெறும் கண்துடைப்பாகவே உள்ளன. ஆண்டிற்கு இரண்டு ரயில் திட்டம் வீதம் நிறைவேற்றி இருந்தாலே, தமிழகம் தன்னிறைவு அடைந்திருக்கும். ரயில் திட்டங்களை நிறைவேற்றுவதில், மக்கள் போராட்டம் மட்டும் போதாது. தமிழக எம்.பி.,கள் அனைவரும் ஒருமித்த குரலில் மத்திய அரசை வலியுறுத்தவேண்டும்.
தேனிக்கு பயன் இல்லை : ரா.சங்கரநாராயணன், தேனி, திண்டுக்கல்- குமுளி அகல ரயில் பாதை போராட்டக்குழு தலைவர், தேனி: செங்கற்பட்டில் இருந்து திருச்சி வரை, அங்கொன்றும், இங்கொன்றுமாக இரட்டை ரயில் பாதைக்கு வேலைகள் நடக்கின்றன. தமிழகத்தில் இரட்டை ரயில் பாதைக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. மதுரை, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் சென்னை செல்ல கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும், என்ற கோரிக்கை ரயில்வே பட்ஜெட்டில் புறக்கணிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் ரயில் போக்குவரத்து இல்லா மாவட்டம்,என்ற நிலை தொடர்கிறது. மக்கள் தொடர்ந்து போராடினாலும் பலன் இல்லை. தமிழக எம்.பி.,க்களின் ஒற்றுமையின்மையை, இயலாமையை, ரயில்வே பட்ஜெட் தெளிவாக காட்டுகிறது.
ராமேஸ்வரம் ரயில் ஏமாற்றம் : பி.ஜெகதீசன், ராமநாதபுரம் வர்த்தக சங்கத் தலைவர்:கடந்த சில ஆண்டு பட்ஜெட்கள் போல், இந்தாண்டு ரயில்வே பட்ஜெட்டிலும், ராமநாதபுரம் மாவட்டம் வழக்கம் போல் புறக்கணிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு பகல் ரயில் விட வேண்டுமென்ற கோரிக்கை பட்ஜெட்டில் நிறைவேற்றப்படவில்லை. புதிய ரயில்கள் அறிவிப்பு வெளியாகும் என, எதிர்ப்பார்த்த, ராமநாதபுரம் மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். வளர்ச்சி திட்டங்கள் பற்றிய அறிவிப்பு இல்லாததால், பயனில்லா இந்த பட்ஜெட் கண்டிக்கத்தக்கது.
இரண்டு அமைச்சர்கள் இருந்தும் பயனில்லை : எஸ். அரங்கசாமி, காரைக்குடி ரயில் பயணிகள் பாதுகாப்பு கழக தலைவர்: ராமேஸ்வரம் - பெங்களூருக்கு, காரைக்குடி வழியாக, புதிய ரயில் இயக்கப்படும் என எதிர்பார்த்தோம். சென்னை - திருவனந்தபுரம் ரயில், காரைக்குடி வழியாக இயக்க கோரிக்கை விடுத்தும், நிறைவேற வில்லை. காரைக்குடி - மதுரை, காரைக்குடி - ராமநாதபுரம் - தூத்துக்குடி, புதிய ரயில் பாதைக்கு ஆய்வு பணி முடிந்தும், இரண்டு மூன்று பட்ஜெட் கடந்தும், நிதி அறிவிக்கப்படாதது ஏமாற்றமளிக்கிறது.
காரைக்குடி - திருவாரூர் அகல ரயில் பாதை பணிகள், நிதியின்றி முடங்கி கிடக்கிறது. மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம், மத்திய தொழில் வர்த்தக துறை இணை அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் என இரண்டு அமைச்சர்கள் இருந்தும், சிவகங்கை மாவட்ட அளவில், சொல்வதற்கு கூட ஒரு திட்டமும் இல்லை. ராமேஸ்வரம் - கோவை, சென்னை - மானாமதுரை - செங்கோட்டை ரயில்கள் தினசரி ரயிலாக இயக்கப்படும், என்ற அறிவிப்பு இல்லை. ரயில் பெட்டிகளின், கட்டமைப்பு மோசமாக உள்ளது. பெட்டிகளை மேம்படுத்தவும், வசதிகளை செய்வதற்கும் உரிய நிதி ஒதுக்கவில்லை.பயணிகள், சரக்கு கட்டணம் உயர்த்தப்படாமல் இருப்பது ஆறுதல் அளிக்கிறது.
அகலப்பாதை அறிவிப்பாகவே உள்ளது : ரத்னவேல், நகர் நல அமைப்பு செயலர், விருதுநகர்: சென்னையில் இருந்து திண்டுக்கல் வரை, இரட்டை ரயில்பாதை அமைக்கப்பட்டுள்ளது. தென்மாவட்டங்களின் வளர்ச்சிக்காக, திண்டுக்கல்லில் இருந்து, மதுரை, விருதுநகர், நெல்லை, குமரி வழியாக கொல்லம் வரை இரட்டை ரயில்பாதை அமைக்கவேண்டுமென, நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வருகிறோம். ஆனால், அதுகுறித்து அறிவிப்பு இல்லை. திண்டுக்கல்லில் இருந்து கன்னியாகுமரிவரை, ரயில்பாதையை மின்மயமாக்கும் நடவடிக்கை குறித்து எதுவும் கூறப்படவில்லை. மம்தா ரயில்வே அமைச்சராக இருந்தபோது, மதுரையில் இருந்து பந்தல்குடி, அருப்புக்கோட்டை, விளாத்திகுளம் வழியாக, தூத்துக்குடிக்கு புதிய, அகலப்பாதை அமைக்கப்படுமென அறிவிக்கப்பட்டது. அப்பணியை விரைவு படுத்துவதற்கான அறிவிப்பும் இல்லை.செங்கோட்டையிலிருந்து மானாமதுரை வழியாக புதிய ரயில்கள் தொடர்பான அறிவிப்பும் இல்லை. மொத்தத்தில், இந்த பட்ஜெட் ஏமாற்றத்தையே தருகிறது.