"பிளஸ் 2 தேர்வு முடிவை, முன்கூட்டி வெளியிட வாய்ப்பு இல் லை' என, அண்ணா பல்கலை துணைவேந்தர் கூட்டிய கூட்டத்தில், தேர்வுத் துறை, திட்டவட்டமாக தெரிவித்து உள்ளது. இதனால், பி.இ., மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, கடந்த ஆண்டைப் போலவே, இந்த ஆண்டும் நடத்த, பல்கலை முடிவு செய்துள்ளது.
"ஆகஸ்ட், 1ல், பி.இ., முதலாம் ஆண்டு வகுப்பு துவங்க வேண்டும்' என, மத்திய அரசு கூறியுள்ளது. எனவே, ஜூலை இறுதி வரை கலந்தாய்வை நடத்தாமல், இந்த ஆண்டு, 10 நாள் முன்கூட்டியே, கலந்தாய்வை முடிக்கும் வகையில், அண்ணா பல்கலை ஆலோசித்து வந்தது. இதற்கு, பிளஸ் 2 தேர்வு முடிவை, மே, 10 வரை இழுக்காமல், 10 நாள் முன்கூட்டியே வெளியிட, தேர்வுத் துறைக்கு, கோரிக்கை வைக்க, திட்டமிடப்பட்டு இருந்தது. இந்த விவகாரம் குறித்து விவாதிக்க, பி.இ., மாணவர் சேர்க்கைக்கான ஒருங்கிணைப்பு குழு கூட்டம், பல்கலையில், நேற்று முன்தினம் நடந்தது. இதில், பல்கலை துணைவேந்தர், ராஜாராம் உள்ளிட்ட பல்கலை அலுவலர்களும், தேர்வுத்துறை இயக்குனர், தேவராஜன் உள்ளிட்ட அதிகாரிகளும், கலந்து கொண்டனர். பி.இ., மாணவர் சேர்க்கை கலந்தாய்வை, விரைந்து முடிப்பதற்கு ஏதுவாக, பிளஸ் 2 தேர்வு முடிவை, குறைந்தது, 10 நாட்கள் முன் வெளியிடுவதற்கான வாய்ப்பு குறித்து, குழு உறுப்பினர்கள் கேட்டனர். அதற்கு, தேர்வுத் துறை தரப்பில், "இந்த தேர்வில், பல புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. அவற்றில், எந்த பிரச்னையும் வராமல் இருக்க வேண்டும். அவசரகதியில், விடைத்தாளை திருத்த முடியாது. முன்கூட்டியே, தேர்வு முடிவை வெளியிட வாய்ப்பு இருக்காது. கடந்த ஆண்டு வெளியான தேதியை (மே, 9) ஒட்டி, முடிவு வெளியிட, நடவடிக்கை எடுக்கப்படும்' என, தெரிவித்ததாக, பல்கலை வட்டாரங்கள் தெரிவித்தன. இதனால், பி.இ., மாணவர் சேர்க்கையை, வழக்கம் போல், ஜூன் இறுதியில் துவக்கி, ஜூலை இறுதிக்குள் முடிக்க, பல்கலை திட்டமிட்டு உள்ளது.
- நமது நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE