தொழிலதிபர்களை மிரட்டுகிறாரா அரவிந்த் கெஜ்ரிவால்?| Dinamalar

தொழிலதிபர்களை மிரட்டுகிறாரா அரவிந்த் கெஜ்ரிவால்?

Added : பிப் 13, 2014 | |
கிருஷ்ணா - கோதாவரி ஆற்றுப்படுகையில் இருந்து எடுக்கப்படும் இயற்கை எரிவாயுவுக்கு, விலை நிர்ணயம் செய்வதில், பெரும் முறைகேடு நடந்திருக்கிறது. அந்த முறைகேட்டில் ஈடுபட்ட, மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி, "ரிலையன்ஸ்' நிறுவன அதிபர் முகேஷ் அம்பானி, முன்னாள் பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோரா ஆகியோர் மீது கிரிமினல் வழக்குத தொடுக்கப்படும் என, டில்லி
தொழிலதிபர்களை மிரட்டுகிறாரா அரவிந்த் கெஜ்ரிவால்?

கிருஷ்ணா - கோதாவரி ஆற்றுப்படுகையில் இருந்து எடுக்கப்படும் இயற்கை எரிவாயுவுக்கு, விலை நிர்ணயம் செய்வதில், பெரும் முறைகேடு நடந்திருக்கிறது. அந்த முறைகேட்டில் ஈடுபட்ட, மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி, "ரிலையன்ஸ்' நிறுவன அதிபர் முகேஷ் அம்பானி, முன்னாள் பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோரா ஆகியோர் மீது கிரிமினல் வழக்குத தொடுக்கப்படும் என, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்தார். இந்த அறிவிப்பு, மோசமான அணுகுமுறை என ஒரு தரப்பாரும், யார் மீதும் நடவடிக்கை எடுப்பதில் தவறில்லை என வேறொரு தரப்பும் கூறுகையில், அது குறித்து இரண்டு அரசியல் பிரபலங்களின் கருத்து மோதல்கள்:

"ஆம் ஆத்மி' கட்சியில் உள்ள பல எம்.எல்.ஏ.,க்கள், தொழிலாளர்களிடமும், நில உரிமையாளர்களிடமும், கட்டப் பஞ்சாயத்து நடத்தி, பணம் பறித்த கும்பல் என்பதற்கு, பத்திரிகைகளில் வெளியான பல ஆதாரங்கள் இருக்கின்றன. ஆனால், தங்களை புத்தர் போலவும், புனிதர்கள் போலவும் வெளிக்காட்டிக் கொள்ள, கெஜ்ரிவால் முயற்சிக்கிறார். அதனால் தான், இயற்கை எரிவாயு எடுத்தல், இறக்குமதி செய்தல், விலை நிர்ணயித்தல் ஆகியவற்றில் ஊழல் நடந்ததாக, அம்பானி, மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி உள்ளிட்டோர் மீது, வழக்கு தொடர உத்தரவிட்டதாக கூறியுள்ளார். இவர்கள் மீது வழக்கு தொடரும் அதிகாரமே, கெஜிரிவாலுக்கு இல்லை என்பது தான் உண்மை. நாள்தோறும் ஏதாவது ஒரு போராட்டம், அதிரடி நடவடிக்கை என நடத்தி, மக்களை திசை திருப்ப நினைக்கிறார். சட்டசபை தேர்தலில், அவர் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற என்ன செய்தார் என்பதே, இப்போதைய கேள்வி. ஆனால், அதிலிருந்து தப்பித்துக் கொள்ளவே, இதுபோன்ற வேலைகளை கெஜ்ரிவால் செய்கிறார். லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில், கார்ப்பரேட் நிறுவனங்கள், அவற்றின் நிர்வாகிகளை மிரட்டுதல், அவர்கள் மீது வழக்கு தொடருதல் போன்ற வேலைகளை செய்து பணம் பறிக்க, கெஜ்ரிவால் நினைக்கிறார். அதற்காகத் தான், அம்பானி உள்ளிட்டோர் மீது வழக்கு தொடர உத்தரவிட்டதாகக் கூறுகிறார். அவரைப் பொறுத்தவரை, டில்லி ஆட்சிப் பொறுப்பிலிருந்து எப்படியாவது வெளியேறி, தனக்கு அளித்த பொறுப்பிலிருந்து தப்பித்துக் கொள்ள வேண்டும் என, நினைக்கிறார். அரசில் இருந்து வெளியேறுவதை தானாக செய்யக் கூடாது. தனக்கு ஆதரவு அளிக்கும், காங்கிரசை ஆத்திர மூட்டினால், அரசுக்கு அளிக்கும் ஆதரவை, காங்கிரஸ் தானாக வாபஸ் பெற்றுக் கொள்ளும். தன்னைத் தொடர்ந்து ஆட்சி செய்ய, காங்கிரஸ் விடவில்லை என பழி சுமத்தி, லோக்சபா தேர்தலில், மக்களின் ஆதரவை பெற வேண்டும் என்பது தான், அவர் எண்ணம்.

எச்.ராஜா, துணைத் தலைவர், தமிழக பா.ஜ.,

இந்தியாவின் இயற்கை வளங்களை, பன்னாட்டு நிறுவனங்களுடன் இணைந்து, உள்ளூர் கார்ப்பரேட் நிறுவனங்கள் கொள்ளையடித்து வருகின்றன. பெட்ரோலியத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லியின் கருத்து, இதற்கு ஆதாரமாக உள்ளது. இயற்கை எரிவாயுவை உற்பத்தி செய்ய ஆகும் செலவுக்கும், அதற்கு நிர்ணயிக்கப்படும் விலைக்கும் தொடர்பில்லை. சர்வதேச சந்தையில் நிலவும் விலையை அடிப்படையாகக் கொண்டு, எரிவாயுவுக்கு விலை நிர்ணயிக்கப்படுகிறது என, மொய்லி கூறுகிறார். அப்படியானால், உள்ளூரில் மிகக் குறைந்த விலைக்கு எரிவாயு கிடைத்தாலும், அதற்கு, சர்வதேச விலை நிர்ணயம் என்பது, உள்ளூர் மக்களிடமிருந்து கொள்ளைஅடிக்கும் செயல்தானே. இதைத் தான், அம்பானி செய்துள்ளார். பெட்ரோலியத் துறையும், அதற்கு உடந்தை யாக இருந்துள்ளது. இந்த கொள்ளை குறித்து, நடவடிக்கை எடுக்கும் அதிகாரம், டில்லி முதல்வருக்கு உள்ளதா, இல்லையா என்பது ஒருபுறம் இருந்தாலும், கொள்ளையடித்த குற்றவாளிகளை அடையாளம் கண்டு, வெளிக்கொண்டு வந்த கெஜ்ரிவாலுக்கு, தார்மீக ஆதரவு அளிக்க வேண்டிய கட்டாயம் எல்லாருக்கும் உள்ளது. டில்லி அரசு, மைனாரிட்டி அரசாக உள்ள நிலையில், முதலாளிகளை மிரட்டி, பணம் பறிக்கும் வேலையைச் செய்யுமா என்ற சந்தேகம் எழுகிறது. மேலும், காங்கிரசுக்கு ஆத்திரமூட்டி, வாபஸ் வாங்க வைக்க வேண்டிய அவசியம், கெஜ்ரிவாலுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. ஏனென்றால், மைனாரிட்டி அரசாக இருக்கும் தனக்கு, நிபந்தனை இன்றி ஆதரவு அளிக்க வேண்டும். அப்போது தான், காங்கிரஸ் ஆதரவை ஏற்போம் என, முன்கூட்டியே கெஜ்ரிவால் கூறியுள்ளார். மேலும், முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் மீது, நடவடிக்கை எடுக்கும் வேலையை, கெஜ்ரிவால் அரசு ஏற்கனவே துவங்கிவிட்டது. எனவே, கெஜ்ரிவால் அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு, உள்நோக்கம் கற்பிக்க வேண்டிய அவசியமில்லை.

குணசேகரன், எம்.எல்.ஏ., - இந்திய கம்யூ.,

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X