தமிழகத்தில், பா.ஜ., தலைமையில், தேசிய ஜனநாயக கூட்டணி அமைக்கும் முயற்சிக்கு, பிள்ளையார் சுழி போட்டவர்,காந்திய மக்கள் கட்சி தலைவர் தமிழருவி மணியன். பா.ஜ., தலைவர்களுக்கும், தே.மு.தி.க., தலைவர் விஜய காந்துக்கும் இடையே, பாலமாக இருந்து, இரண்டையும் ஓரணியில் இணைக்க, அவர் பட்ட பாட்டை ஊரறியும்.
கொள்கையற்ற... : இரு மாதமாக நடந்த பேச்சுவார்த்தையில், இணக்கம் காட்டிய விஜய காந்த் இப்போது, எதிராளியான காங்கிரஸ் பக்கம் சாயத் துவங்கி விட்ட நிலையில், "தினமலர்' நாளிதழுக்கு, தமிழருவி மணியன் அளித்த சிறப்பு பேட்டி:
இரண்டு திராவிட கட்சிகளுக்கு மாற்றாக, விஜயகாந்த் அரசியல் இருக்கும் என்ற நம்பிக்கையில் தான், 10 சதவீத வாக்காளர்கள், அவரை ஆதரித்தனர். கொள்கையற்ற, முரண்பாடுகள் நிறைந்த கூட்டணிகளையே, இந்திய அரசியல் நீண்ட காலமாக சந்தித்து வருகிறது. இருந்தாலும், ஏதாவது ஒரு மையப் புள்ளியில், கட்சிகள் ஒன்றிணைந்து, களத்தில் நிற்க வேணடும். 1967ல், ராஜாஜியும், அண்ணாதுரையும் ஒன்றாக நின்றனர். கொள்கை அளவில் இருவரும் இரு துருவங்கள். ஆனால், காங்கிரசை வீழ்த்துவது என்ற ஒரு மையப் புள்ளியில் இணைந்தனர். ஊழலுக்கு அன்றாடம் உற்சவம் நடத்துகிற, காங்கிரசை வீழ்த்த வேண்டும் என, விஜயகாந்த் நினைத்திருந்தாலோ, அல்லது இரு திராவிட கட்சிகளுக்கு மாற்றாக, தன்னை நிலைநிறுத்த விரும்பியிருந்தாலோ, பா.ஜ., கூட்டணியில் இடம்பெறுவோம் என, அவர் வெளிப்படையாக
அறிவித்திருக்க வேண்டும். ஊழல் எதிர்ப்பு மாநாடு நடத்திய ஒருவர், தமிழ்நாட்டில் ஊழலின் ஊற்றுக்கண்ணாக விளங்கும் தி.மு.க.,வுடன் ஒரு பக்கம் பேசிக் கொண்டிருக்கிறார். அகில இந்திய அளவில், அன்றாடம் ஊழலுக்கு உற்சவம் நடத்தும் காங்கிரசுடன், இன்னொரு பக்கம் பேசிக் கொண்டிருக்கிறார் என, வரும் செய்திகள் ஆரோக்கியமானது அல்ல. அரசியலில், திரைமறைவில் சம்பவங்கள் நடந்தால், அவை தவறானவையாக மட்டுமே இருக்க முடியும். விஜயகாந்த் என்ன முடிவு எடுப்பார் என்பது, அவருக்கு ஓட்டுப் போட்ட வாக்காளர்களுக்கு தெரியவில்லை. கூட்டணி சேர விரும்பும் கட்சிகளுக்கும் புரியவில்லை. அவருடைய கட்சி சார்பில், போட்டியிட மனு கொடுத்துள்ளவர்களுக்கும் தெரியவில்லை. கட்சி தொண்டர்களுக்கும் தெரியாமல், வாக்காளர்களுக்கும் தெரியாமல், நாட்டில் உள்ள கட்சிகளுக்கும் தெரியாமல், ஒரு மனிதர் நடந்து கொள்கிறார் என்றால், அது, மாட்டுச் சந்தையில், அடுத்தவர் அறியாமல் பேரத்தை முடிப்பதற்கு, மூடிய துணியின் கீழே, விரல்களை மறைத்து, விலை பேசும் செயலாக தான் இருக்க முடியும்.
வீழ்ச்சியை சந்திப்பார் : மாட்டுச் சந்தையில் இருக்கும் தரகர்களை, நான் இழிவுபடுத்தவில்லை. அது, அவர்களது தொழில். மாட்டை விலை பேசுவதற்கான நியதி. அந்த நியதியை, அரசியல் சந்தையில் புகுத்துவது எந்த வகையிலும், பொருத்தமானதாக இருக்க முடியாது; யாராலும் ஏற்கவும் முடியாது. இதைத் தான் நான் விஜயகாந்துக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். தி.மு.க.,வுடனோ, காங்கிரசுடனோ, ஏதோ ஒரு கணக்கில் அவர் கை குலுக்கினால், வார்த்தைக்கும், அவரது அரசியல் வாழ்க்கைக்கும், எள்ளளவும் சம்பந்தமில்லை என்ற முடிவுக்கு, மக்கள் வந்து விடுவர். தேர்தலில் மிகப்பெரிய வீழ்ச்சியை, விஜயகாந்த் சந்திக்க நேரிடும். காலிழந்த ஒருவரும், கண்ணிழந்த ஒருவரும், கூட்டணி அமைத்தால், விரும்புகிற ஊருக்கு, ஒரு நாளும் போய் சேர முடியாது. "ஊருக்கும் தெரியாது; யாருக்கும் புரியாது' என, தனக்கு தானே தப்பான முடிவு செய்து, திரைமறைவு அரசியல் நடத்தலாம் என, அவர் எண்ணலாம். ஆனால், மக்கள், தன் ஒவ்வொரு அசைவையும், உன்னிப்பாக கவனிக்கின்றனர் என்ற உண்மையை, அவர் உணரும் காலம் வரும்.
இவ்வாறு, தமிழருவி மணியன் தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE