"அப்பாடா... எப்படியோ, தங்கம் கொடுத்துட்டாங்க. பொம்பளைங்க ரொம்ப சந்தோஷமா இருக்காங்க,'' என்று விவாதத்தை துவக்கியபடி, ஷோபாவில் வந்தமர்ந்தாள் மித்ரா.
""எதுக்கு தங்கம் கொடுத்தாங்க. கொஞ்சம் விளக்கமாத்தான் சொல்லேன்,'' என்று ஆர்வமாக கேட்க தயாரானாள் சித்ரா.
"எலக்ஷன் தேதி அறிவிக்கிறதுக்குள்ள நலத்திட்ட பணிகளை வேகமாக முடிக்க உத்தரவிட்டிருக்காங்க. கட்டுமான பணிகளை வேகமா முடிக்க முடியாதுங்கிறதுனால, இலவச பொருட்கள் கொடுக்கிறதை வேகப்படுத்தியிருக்காங்க. ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி தாலிக்கு தங்கம் திட்டத்துல ஏகப்பட்ட பேரு மனு கொடுத்திருந்தாங்க. இப்ப, விழா நடத்தி, ஒரே நேரத்துல 2,000 பேருக்கு தங்கம் கொடுத்திருக்காங்க. ஆனா, கார்ப்பரேஷன் டிரைவருங்கதான் பாவம்,'' என்று பொடி வைத்தாள் மித்ரா.
"ஏன், அவங்களுக்கு என்ன குறை. கவர்மென்ட் வேலைதானே பார்க்குறாங்க?,'' என்றவாறு, முந்திரி பக்கோடாவை தட்டில் வைத்தாள் சித்ரா.
"கார்ப்ரேஷன் பொது சுகாதாரப்பிரிவு டிரைவர்கள் யூஸ் பண்ற மாதிரி, ஏதாச்சும் ஒரு எடத்துல ரெஸ்ட் ரூம் இருக்கும். போர்த் ஜோன் டிரைவர்களுக்கு மாட்டுக்கொட்டகை "ரெஸ்ட் ஹவுஸ்' மாதிரி இருந்துச்சு. அங்க பாத்ரூம், டாய்லெட் கூட இல்லை. ஓட்டல், பேக்கரி அதிகமாக இருக்கறதால, போர்த் ஜோன்ல, நைட் "ஷிப்ட்' டியூட்டி இருக்கு. நைட்டுல குப்பை வாங்கும் லேபர்களும், டிரைவர்களுக்கும் ரோட்டையே யூஸ் பண்றாங்க. மாட்டுக்கொட்டகை காம்பவுன்டில் வண்டியை நிறுத்திட்டு ஒக்கார்ந்திருந்தா, உதவி கமிஷனருக்கு தகவல் தெரிஞ்சு, வெளுத்து வாங்கிடுறாராம். கொஞ்சமாவது மனுஷனா மதிக்கலாம் இல்லீங்களான்னு புலம்பிட்டு இருக்காங்களாம்,'' என்றாள் மித்ரா.
"வெளுத்து வாங்கறதுன்னு சொன்னதும் எனக்கொரு தகவல் ஞாபகத்துக்கு வருது. மங்கலம் ரோடு சுத்துவட்டாரத்துல அனுமதியில்லாம சாயப்பட்டறைங்க ஓடுதாம். நைட்ல சாயமிட்டு, தண்ணியை வெளியேத்திட்டு, ஈரத்தோடு வேனில் எடுத்துட்டு போயிடுறாங்க. மங்கலம் ரோட்டில் காலை நேரத்தில் போற டையிங் வேனை பார்த்தா, ஈரத்துணியில் இருந்து தண்ணி ஒழுகிட்டே இருக்கும். அதிகாரிகள், கவனிக்கிறதே இல்லை,'' என்று புலம்பினாள் சித்ரா.
"ஏதாவது அரசியல் மேட்டர் இருக்கா,'' என மித்ரா ஆர்வமாய் கேட்க, ""ஆளுங்கட்சி தரப்புல, ரெண்டு கம்யூ., கட்சிகளோடு கூட்டணியை உறுதிப்படுத்திட்டாங்க. அதுனால, ஓட்டுச்சாவடி வாரியா எவ்வளவு பர்சன்டேஜ் ஓட்டு இருக்கு? இப்ப இருக்கிற சூழ்நிலையில், பிளஸ், மைனஸ்ன்னு ஆளுங்கட்சிக்காரங்க கணக்கு போட ஆரம்பிச்சிட்டாங்க. எதிர்க்கட்சி கூடாரத்துல, இன்னும் கூட்டணி இறுதியா முடிவாகாம இருக்கிறதால, ரொம்ப சோர்ந்து போயிருக்காங்க,'' என்றார் சித்ரா.
ஒடனே மித்ரா, எனக்கு ஒரு அரசியல் மேட்டர் தெரியும் என்றவாறு, ""கடந்த ஆட்சிக்காலத்துல, உள்ளூர் அமைச்சரா இருந்தவருக்கு, அவர் சார்ந்த துறையை சேர்ந்த ஒருத்தர் பி.ஏ.,வா இருந்தார். அவர், துறை சார்ந்த அலுவலக பணிகளை விட, அமைச்சர் பணியையும் சேர்த்து பார்த்தாரு. கட்சிக்காரங்க மினிஸ்டர்கிட்ட நெருங்காம பார்க்கறது இவரோட முக்கிய வேலையா இருந்துச்சு. இப்போ, தஞ்சையில் போஸ்டிங் போட்டிருக்கு. ஆனாலும், வார லீவுக்கு தவறாம திருப்பூர் வந்திடுறாரு. திருப்பூர் மாவட்ட தி.மு.க., அலுவலகமே கதியா இருக்காரு. கட்சிக்காரங்க இவரை பார்த்தா, "பிளேடு' போட ஆரம்பிச்சுடுவாரோன்னு பயந்து எஸ்கேப் ஆயிடுறாங்க,'' என்றவாறு, முந்திரி பக்கோடாவை சுவைக்க ஆரம்பித்தாள்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE