பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட்ட, ரயில்வே இடைக்கால பட்ஜெட்டில், தமிழகத்திற்கு பெரிய அளவில் லாபம் இல்லை. ரயில்வே நிலைக்குழு தலைவராக, தி.மு.க., - எம்.பி., டி.ஆர்.பாலு உள்ளார். பட்ஜெட் தாக்கலுக்கு இரண்டு நாட்களுக்கு முன், அவர் வெளியிட்ட அறிக்கையில், மன்னார்குடி - ஜோத்பூர் ரயில் விட, ரயில்வே அமைச்சரிடம் கோரிக்கை விடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதற்கு ஏற்றார் போல், பட்ஜெட்டிலும், அந்த ரயில் இடம் பெற்றது. பட்ஜெட்டில் இடம் பெறும் விஷயங்களை, முன்கூட்டியே அறிந்து கொண்டு, அதற்கு ஏற்றார் போல், அரசியல் செய்கிறார், டி.ஆர்.பாலு என்பது பரவலான குற்றச்சாட்டு. இத்துடன், தமிழகத்திற்கு தேவையான முக்கியமான ரயில்வே திட்டங்களை கேட்டு பெற, அவர் முனைப்புடன் செயல்படவில்லை என்றும் விமர்சிக்கின்றனர், மக்கள். இது குறித்து, இரு பிரமுகர்களின் கருத்து மோதல்கள் இதோ:
ரயில்வே துறையின் கேபினட் அமைச்சர்களாக இருந்த, ஜாபர் ஷெரீப், லாலு பிரசாத் யாதவ், நிதிஷ் குமார், மம்தா பானர்ஜி ஆகியோர், தாங்கள் சார்ந்த மாநிலங்களுக்கு, ரயில்வே திட்டங்களை கொண்டு செல்வதில், பெரும் முனைப்புக் காட்டினர். அதனால், அம்மாநிலங்கள், புதிய ரயில் பாதைகள், புதிய ரயில்கள், இரட்டை ரயில் பாதை, ரயில் பாதைகள் மின் மயமாக்கல் போன்ற திட்டங்களைப் பெற்றன. கேபினட் அமைச்சருக்கு இணையான, ரயில்வே நிலைக் குழுத் தலைவர் பதவியைப் பெற்றுள்ள, டி.ஆர்.பாலு, தமிழகத்தின் நலன் கருதி, ரயில்வே திட்டங்களை, நம் மாநிலத்திற்கு கொண்டு வந்ததாகவோ, தமிழகத்துக்காக அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கு, போதிய நிதியைப் பெற்றுத் தந்ததாகவோ தெரியவில்லை. ஆவடியிலிருந்து, ஸ்ரீபெரும்புதூருக்கு ரயில் பாதை அமைக்கும் திட்டம், சில ஆண்டுகளுக்கு முன் அறிவிக்கப்பட்டது. அதற்கு, ஆய்வுகளும் நடந்தன. பாதை அமைக்கப் பட்டுவிடும் என்ற நிலையில், ஸ்ரீபெரும்புதூர் லோக்சபா தொகுதியிலிருந்து தேர்வு செய்யப்பட்ட, டி.ஆர்.பாலு, அத்திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை. இத்தனைக்கும், ரயில்வே நிலைக்குழுத் தலைவராக அவர் இருக்கிறார்.
சொந்த தொகுதிக்குக் கூட, ரயில் திட்டங்களை கொண்டு வராத அவர், மன்னார்குடியை மையமாக வைத்து, புதிய ரயில்களை கொண்டு வந்து கொண்டிருக்கிறார். அதற்கேற்ற வகையில், வரும் லோக்சபா தேர்தலில், அவர் தொகுதி மாறி போட்டியிடப் போவதாக, தி.மு.க., வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது.
இதை எல்லாம் கவனித்தால், ரயில்வே நிலைக்குழுத் தலைவர் பதவியை, தன் அரசியல் லாபங்களுக்கு டி.ஆர்.பாலு பயன்படுத்துகிறாரோ என்ற எண்ணம் தான், அனைத்துத் தரப்பினருக்கும் எழுந்துள்ளது.
ஆவடி குமார், தலைமை கழக பேச்சாளர், அ.தி.மு.க.,
மத்திய அரசின் ஒவ்வொரு துறைக்கும், ஒரு நிலைக்குழு இருக்கும். இக்குழுவில், அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் அங்கம் வகிப்பர். பார்லிமென்டில், ஒரு துறையின் அனைத்து விஷயங்களையும், கோரிக்கை
களையும் விவாதிக்க முடியாது. அதனால், பல கோரிக்கைகள் நிலைக் குழுவில் விவாதிக்கப்பட்டு, அரசுக்கு பரிந்துரைக்கப்படும். நிலைக்குழு அளிக்கும் பரிந்துரைகள் அனைத்தும், அப்படியே ஏற்றுக் கொள்ளப்படுவதும் இல்லை. பார்லிமென்ட் நிலைக்குழுவின் அதிகாரம் என்பது அவ்வளவு தான். ரயில்வே துறைக்கான நிலைக்குழுவுக்கு, டி.ஆர்.பாலு தலைவராக உள்ளார். இக்குழு, புதிய திட்டங்களை உருவாக்கவோ, அத்திட்டத்துக்கான நிதியை ஒதுக்கவோ முடியாது. நிலைக்குழுவின் அதிகாரம் என்ன, அதன் பணிகள் என்ன என்று, தெரியாதவர்களே, ரயில்வே நிலைக்குழுத் தலைவராக, டி.ஆர்.பாலு இருந்தும், தமிழகத்துக்கு ஒன்றும் செய்யவில்லை என, குற்றம் சாட்டுகின்றனர். அவர், தன் சொந்த ஊருக்கு, ரயில்களை கொண்டு சென்று விட்டார் என்றும், குறை சொல்லுகின்றனர். பாலுவுக்கு பார்லிமென்டில் உள்ள அனுபவம் மூலம், கடும் நெருக்கடி கொடுத்தே, தமிழகத்துக்கு தற்போது கிடைத்துள்ள புதிய திட்டங்கள், கூடுதல் ரயில்களை கொண்டு வந்துள்ளார். இதற்காக, அவரை பாராட்ட வேண்டுமே தவிர, குறை சொல்வது, அரசியல் ஆதாயம் தேடும் முயற்சியாகவே இருக்கும். நிலைக்குழுத் தலைவர் என்பவரும், ஒரு சாதாரண பார்லிமென்ட் உறுப்பினரே. அவருக்கு என, சிறப்பு அதிகாரங்களோ, கூடுதல் அதிகாரங்களோ இல்லை.
பார்லிமென்டின் மூத்த உறுப்பினர், அனுபவம் மிக்கவர் என்பதால், அவருக்கு நிலைக்குழுத் தலைவர் பதவி அளிக்கப் பட்டுள்ளது. அனுபவம் குறைந்தவர்களுக்கு இப்பதவி அளிக்கப்படுவதில்லை.
எனவே, ரயில்வே நிலைக்குழு தலைவராக ஒருவர் நியமிக்கப்பட்டாலே, அத்
துறையின் திட்டங்கள் அனைத்தையும் அவர் தான் வடிவமைக்கிறார். நிதி ஒதுக்குகிறார் என, அர்த்தம் செய்து கொண்டால், அது விவரம் தெரியவர்கள் கூறும் தகவலாகும்.
செல்வகணபதி, எம்.பி., - தி.மு.க.,
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE