அரசு ஊழியர்களுக்காக போடப்பட்ட தமிழக பட்ஜெட்!

Added : பிப் 16, 2014 | கருத்துகள் (15)
Share
Advertisement
கடந்த, 13ம் தேதி, சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட தமிழக பட்ஜெட்டில், 'ஞாலங் கருதினுங் கைகூடுங் காலம் கருதி யிடத்தாற் செயின்' என்ற, சிறப்பான திருக்குறள் இடம் பெற்றிருந்தது. காலத்தையும், இடத்தையும் அறிந்து, அதற்கேற்ப செயல்பட்டால், உலகமே கைகூடும் என்பது, அதன் பொருள்.குறளுக்கு ஏற்ப, இந்த கால கட்டத்தில், தமிழகத்திற்கு தேவையானதை அறிந்து தான், பட்ஜெட் தயாரிக்கப்பட்டு
 அரசு ஊழியர்களுக்காக போடப்பட்ட தமிழக பட்ஜெட்!

கடந்த, 13ம் தேதி, சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட தமிழக பட்ஜெட்டில், 'ஞாலங் கருதினுங் கைகூடுங் காலம் கருதி யிடத்தாற் செயின்' என்ற, சிறப்பான திருக்குறள் இடம் பெற்றிருந்தது. காலத்தையும், இடத்தையும் அறிந்து, அதற்கேற்ப செயல்பட்டால், உலகமே கைகூடும் என்பது, அதன் பொருள்.

குறளுக்கு ஏற்ப, இந்த கால கட்டத்தில், தமிழகத்திற்கு தேவையானதை அறிந்து தான், பட்ஜெட் தயாரிக்கப்பட்டு உள்ளதா என்றால், இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.தமிழகத்தில், 7.50 கோடி பேர் உள்ளனர். 2014 - 15ம், நிதி ஆண்டில், 1.02 லட்சம் கோடி ரூபாயை, தமிழக அரசுக்கு, நாம் வரியாகச் செலுத்த உள்ளோம். இந்தப் பணம், ஏழை மக்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்தவும், நம் நலனுக்காகவும் செலவிடப்பட உள்ளது என்ற நம்பிக்கையில், நாம் வரி செலுத்துகிறோம். அவ்வாறு நடக்கிறதா?


சம்பளத்திற்கே செலவாகிறது:


பட்ஜெட்டில், 40 சதவீத பணம், தமிழக அரசு ஊழியர்களின் சம்பளத்திற்காகச் செலவிடப்படுகிறது; இவர்களின் எண்ணிக்கை, 10 - 12 லட்சம்.மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது, அரசு ஊழியர்களுக்காகச் செலவிடப்படுவது, தமிழகத்தில் தான் மிக அதிகம். (இதற்கு மேலும், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தால் மட்டுமே, பணிகள் நடக்கும் என்ற நிலை தமிழகத்தில் உள்ளது, பெரும் துரதிருஷ்டம்)மேலும், 17 சதவீத பணம், அரசு ஊழியர்களின் ஓய்வூதியத்திற்கு போய்விடுகிறது. இவர்களின் எண்ணிக்கை, ஏறத்தாழ, 7 லட்சம். அதாவது, 57 சதவீத வரிப் பணம், குறைந்த எண்ணிக்கையில் உள்ள, இவர்களுக்குப் போய் சேருகிறது.இது தவிர, 13 சதவீத பணம், அரசு வாங்கியுள்ள கடன்களுக்காக வட்டி செலுத்துவதற்கும், 10 சதவீத பணம், அரசு இயந்திரங்களை இயக்குவதற்கும் செலவிடப்படும். சுருக்கமாகச் சொன்னால், வரி வருவாயில், 80 சதவீத பணம் அரசை இயக்குவதற்கு மட்டுமே செலவிடப்படுகிறது.இதெல்லாம் போகத்தான், பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டு, மானியங்களுக்கு நிதி ஒதுக்கப்படுகிறது. அப்போது, எதிர்கால வளர்ச்சிக்குத் தேவையான சாலைகள், மின் நிலையங்கள், அணைகள், கால்வாய்கள் போன்ற உள்கட்டமைப்புகளை, எந்த நிதியில் இருந்து உருவாக்குவது? மக்களின் நலனைப் பேணத் தேவையான மருத்துவமனைகள், பள்ளிகள் உள்ளிட்டவற்றை எந்த நிதியில் இருந்து கட்டுவது?அத்தகைய தொலைநோக்கு திட்டங்களை, அரசு மறந்துவிட்டதாக நினைக்க வேண்டாம். 2014 - 15ம் நிதி ஆண்டில், 25 ஆயிரம் கோடி ரூபாய், மூலதன செலவு செய்யப்படும் என, பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது. இதற்காக, 21 ஆயிரம் கோடி ரூபாயை, தமிழக அரசு, கடனாக வாங்கப் போகிறதாம். வருமானத்தை புளிசேரி வைத்து, மூக்கு முட்ட சாப்பிட்டு விட்டு, உடுத்த உடை வாங்க கடன்.அடுத்த ஆண்டு, இந்த மூலதன செலவால் வருவாய் வருகிறதோ, இல்லையோ, வாங்கிய கடனுக்கு, கண்டிப்பாக வட்டி கொடுக்க வேண்டியிருக்கும்.


எங்கிருந்து வரும் நிதி?


இதுவரையில் பட்டியலிட்டதிலேயே கடன் வாங்கும் நிலை; இதற்கும் மேலாக, 52 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மானியங்களும், இலவசங்களும் வழங்க திட்ட மிடப்பட்டு உள்ளது. இதில் தான், உணவு மானியம், லேப்-டாப், கல்வி, சுகாதாரம், மிக்சி, கிரைண்டர், வேட்டி, சேலை உள்ளிட்டவை வழங்கப்படும். இதற்கு எங்கிருந்து நிதி வரப்போகிறது?மானியம், கட்டாய செலவு, கடன், வட்டி, பற்றாக்குறை, மேலும் கடன், மேலும் மானியம், மேலும் பற்றாக்குறை; இது, தமிழகத்தை, நீர்க்குமிழியில் சிக்க வைப்பதற்கு சமம். இந்த கட்டமைப்பு, 10 - 11 ஆண்டுகளாக மாறவில்லை. சென்ற அரசு, இலவசமாக, 'டிவி' கொடுத்தது; இந்த அரசு, மிக்சி, கிரைண்டர் கொடுக்கிறது.ஆனால், தமிழக மக்களின், வாழ்க்கை முறை மேம்படவில்லை. அதற்கு, அரசியல்வாதிகள் மட்டுமே குற்றவாளிகள் என, சொல்லி, நான் அரசியலை கொச்சைப்படுத்த விரும்பவில்லை. தமிழக மக்கள், இலவசத்திற்கு அடிமையாகி விட்டனர்.அதனால் தான், நம் வாழ்க்கையை, வாழ்வாதாரத்தை மேம்படுத்தக்கூடிய பெரிய தொலை நோக்கு திட்டங்கள் அறிவிக்கப்படுவதில்லை. மாறாக, தமிழக மக்களை, பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், விவசாயிகள், மீனவர்கள், தமிழ் ஆர்வலர்கள், பெண் குழந்தைகள், மாணவர்கள், ஆண் - பெண் என, எண்ணற்ற பிரிவுகளாகப் பிரித்து, ஒவ்வொரு பிரிவினருக்கும்
தனித்தனியாக, 'நல திட்டங்கள்' வகுக்கப்படுகின்றன.இது தேர்தல் நோக்கோடு செய்யப்படும் விஷயம். அதனால், சம்பந்தப்பட்ட பிரிவினரின் வாழ்க்கை மேம்பட்டதா என்பது, அரசுக்கு முக்கியம் அல்ல, மாறாக, 'அரசு எனக்காக, என்னுடைய பிரிவினருக்காக செய்திருக்கிறது' என்ற எண்ணத்தை, திட்டப் பயனாளிகள் மத்தியில் உருவாக்குவது தான் அரசுக்கு முக்கியம்.ஜாதி, மதம், இனம், மொழி போன்றவற்றுக்கு அப்பாற்பட்ட, அற்புதமான ஓட்டு வங்கி, அரசு ஊழியர்கள். அவர்களும், அவர்களது குடும்பத்தாரும் சேர்ந்து, 50 லட்சம் ஓட்டுகளுக்கு உரிமையாளர்கள். அதனாலேயே, பட்ஜெட்டில், அவர்கள் கணிசமாகக் கவனிக்கப்படுகின்றனர்.


'பஞ்சுமிட்டாய்' வேண்டாம்:


அரசு ஊழியர் ஓட்டு வங்கியை உருவாக்கிய பெருமை, முன்னாள் முதல்வர் கருணாநிதியை மட்டுமே சாரும். இப்படி குறைந்த சதவீத அளவில் உள்ள மக்களுக்காக போடப்படும் பட்ஜெட் மாற வேண்டுமானால், சராசரி, தமிழன் சிந்திக்க வேண்டும். பெரும் வளர்ச்சிக்கு, தமிழன் ஆசைப்பட்டால், பஞ்சு மிட்டாய் போல் தரப்படும், இலவசங்களை தூக்கி எறிய வேண்டும்.இதில், அரசியல்வாதிகளை குற்றம் சொல்வதில் பயன் இல்லை. மக்கள் தான் திருந்த வேண்டும். தமிழகம், முன்னேற்ற பாதையில் செல்வதற்கு பெரும் தொலைநோக்கு திட்டங்களும், மூலதன செலவுகளும் தேவை. அவற்றுக்கு முக்கியத்துவம் தரும் அரசை, உருவாக்குவதற்கான கடமை ஒவ்வொரு தமிழனுக்கும் உண்டு.

எம்.ஆர். வெங்கடேஷ் ,
பட்டய கணக்காளர் மற்றும் பொருளாதார நிபுணர்,
mrv10000@gmail.com

Advertisement


வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nagesh Perumal Mutharaiyar - Sembawang,சிங்கப்பூர்
16-பிப்-201407:11:52 IST Report Abuse
Nagesh Perumal Mutharaiyar எனக்கு ஒரு சின்ன சந்தேகம்.... இந்த கட்டுரை எழுதும் நீங்கள் ஒரு அரசு அதிகாரியாய் இருந்தால் இப்படி எழுதுவீர்களா..?? ஒருவேளை அரசு அதிகாரியாய் இருந்தால் இத அப்பாவி மக்கள் மேல் அக்கறைகொண்டு இந்த சலுகைகளை வேண்டாம் என்பீர்களா..??(எப்புடி...?? அசத்திட்டே நாகேஷ்)
Rate this:
Cancel
Samy Chinnathambi - rayong,தாய்லாந்து
16-பிப்-201406:40:57 IST Report Abuse
Samy Chinnathambi திமுக தான் அதிகமா அள்ளி தெளிப்பது...ஏன்னா அவங்க தான் தேர்தல் காலங்களில் தங்களுக்கு சாதகமாக இருப்பார்கள் என்று கருணாவின் கணக்கு...அவரின் சிஷ்யை அந்த டெக்னிக்கை தொடர ஆரம்பித்தார் பிறகு..
Rate this:
Cancel
Nagesh Perumal Mutharaiyar - Sembawang,சிங்கப்பூர்
16-பிப்-201406:31:48 IST Report Abuse
Nagesh Perumal Mutharaiyar "தமிழக மக்கள், இலவசத்திற்கு அடிமையாகி விட்டனர்.அதனால் தான், நம் வாழ்க்கையை, வாழ்வாதாரத்தை மேம்படுத்தக்கூடிய பெரிய தொலை நோக்கு திட்டங்கள் அறிவிக்கப்படுவதில்லை." -இந்த வரிகளை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது திரு.வெங்கடேஷ் அவர்களே.. மக்களாக எந்த ஒரு ஆரம்பகட்டத்திலும் எங்களுக்கு இலவசம் வேண்டும் என்று போராட்டங்கள் நடத்தியதில்லை... ஆட்சியாளர்களின் மூளையாக இருந்து செயல்படுத்தும் உங்களைப்போன்ற அரசு நிர்வாகிகளின் வரலாற்று பிழைதான் இந்த இலவசங்கள் என்பது என் ஆணித்தரமான கருத்து..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X