வெயிலில்
செல்லும்போது
முகத்தை மூடாதே...
உன்னைப் பார்க்க
முடியாத ஏக்கத்தில்
எல்லோரையும் சுட்டெரிக்கிறது
சூரியன்...
====
பிறந்தநாள் பரிசாய்
என்ன வேண்டும்
என்றேன்....
உனக்குப் பிடித்த
ஒன்றைத் தா
என்கிறார்...
எப்படியடி கொடுப்பேன்
உன்னை உனக்கே...?
இந்த கவிதை வரிகளுக்கு சொந்தக்காரர் கவிதாயினி
யாத்விகா. "மல்லிகை நிலம்' நிலக்கோட்டை சொந்த ஊர். "உனக்காகவே மயங்குகிறேன்' என்ற இவரது காதல் கவிதைகள் புத்தகம், அண்மையில் கவிதை உலகில் அதிகம் அலசப்பட்டது. எழுத்து.காம் என்ற இணையதளத்தில் வெளியான இவரது "தாயின் குமுறல்' கவிதை, ஒரு லட்சம் வாசகர்களால் வாக்களிக்கப்பட்டு, சிறந்த கவிதையாக தேர்வு செய்யப்பட்டது.
கணவருடன் அவரது பணி காரணமாக, "தமிழ் சத்தம் கேட்காத' குஜராத் கிராமம் ஒன்றில் வசித்து வரும் யாத்விகா, குழந்தை, குடும்பம், அன்னியமொழி பேசும் இடம் என்ற சூழல்களை எல்லாம் கடந்து தமிழாய் வாழ்கிறார். சாதனை படைப்பாளியாய் திகழ்கிறார். பக்கத்து வீட்டு, குஜராத்தி தோழிகளுக்கு தமிழ் சொல்லித்தருகிறார். தமிழ் புத்தகங்களை அவர்களுக்கு தந்து படிக்க சொல்கிறார்.
இவர் மனசிற்குள், கவிதை உணர்வு பூத்தது எப்படி?
யாத்விகாவின் யதார்த்தமான பதில்களில்...
என் அம்மா தமிழாசிரியை. அப்பா அரசு அதிகாரி. தமிழில் பட்டம் பெற வேண்டும் என்பதாலேயே, நிலக்கோட்டையில் இருந்து, தினமும் மதுரை வந்து செந்தமிழ் கல்லூரியில் பி.லிட்., படித்தேன். தஞ்சை தமிழ் பல்கலையில் எம்.ஏ., படிக்கும் போதே, "ஆன்லைன்' மூலம் தமிழ் பயிற்சி அளிக்கும் பணிக்கு தேர்வு செய்யப்பட்டேன். தற்போது சங்க இலக்கியங்கள் தொடர்பான ஆய்வு முயற்சியில் இறங்கியுள்ளேன்.
என் முதல் கவிதை தொகுப்பான "உனக்காகவே மயங்குகிறேன்', கணவரை மனதில் வைத்து, குட்டி குட்டி காதல் கவிதைகளாக எழுதப்பட்டது. அவர் தான் என் கவிதையின், முதல் ரசிகன். ஆண் நிலையில் இருந்து, பெண்ணாலும் காதலை எழுத முடியும் என்று நிரூபித்திருக்கிறேன். அடுத்து, "இப்படி எத்தனையோ' என்ற சமூகம் சார்ந்த கவிதை புத்தகம் வெளிவர உள்ளது.
கணவர், குழந்தையை கவனித்து விட்டு, என் வீட்டு வேலைகள் எல்லாம் முடிந்த பிறகு, ஏகாந்தமாய் இரவு 12 மணி முதல் அதிகாலை 4 மணி வரை எழுதுவேன். முயன்றால் முடியாதது எதுவும் இல்லை. நமக்கான நேரத்தை நாம் உருவாக்கி கொள்ள வேண்டும்.
நான் குடும்பத்தலைவிகளுக்கு சொல்லிக்கொள்வது, திருமணம் ஆகி விட்டால், வீட்டிற்குள் முடங்கி விட வேண்டும் என்று நினைக்காதீர். எனவே உங்கள் தனித்திறனை வளர்த்துக் கொள்ளுங்கள். குழந்தைகளுக்கு அவசியம் தமிழ் கற்றுத் தாருங்கள். தமிழ் மொழி வழியே தான் அறிவியல் கண்டுபிடிப்புகள் வந்துள்ளன. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே,
"சுழன்றும் ஏற்பின்னது உலகம்' என்றார் வள்ளுவர். அதற்கு பிறகே "பூமி சுற்றுகிறது' என்ற அறிவியல் கோட்பாடுகள் வெளியாயின. தொன்மையான தமிழின் பெருமையை காப்போம்.
கருத்து பரிமாற: vidhyakarthickg @gmail.com
ஜிவி.ரமேஷ்குமார்
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE