லோக்சபா தேர்தலுக்கு எப்படி கூட்டணி அமையும்; மும்முனைப் போட்டி நிலவுமா அல்லது நான்கு முனைப் போட்டி உருவாகுமா என்பதில், குழப்பமான நிலை நீடிப்பதால், வேட்பாளர்களை முடிவு செய்வதில், அரசியல் கட்சிகள் சுணக்கம் காட்டி வருகின்றன. எதிரணியில் அமையும் கூட்டணி பலமாக அமைந்து விட்டால், அதற்கேற்ற வகையில், வேட்பாளர்களை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்பதால், கட்சிகளுக்கு, ஒருவிதமான நெருக்கடி உருவாகியுள்ளது. லோக்சபா தேர்தல் தேதி அறிவிப்புக்கு பின்னரே, தேர்தலில் போட்டியிடும் அணிகளின் எண்ணிக்கை உறுதி பெறும் என்றாலும், இப்போதுள்ள நிலவரப்படி, நான்கு அணிகள் மோதுவதற்கான சூழல் உள்ளது.
அ.தி.மு.க., அணி உறுதி:
அதில், தமிழகத்தை ஆளும், அ.தி.மு.க., தலைமையிலான அணி மட்டுமே உறுதியாகி உள்ளது. இரு கம்யூனிஸ்ட் கட்சிகளை மட்டுமே இணைத்துக் கொண்டு, களத்தை சந்திக்க, அந்த அணி தயாராகி வருகிறது. இந்த அணியில், கடைசி நேரத்தில், மாற்றம் வந்தாலும், ஆச்சர்யப்படுவதற்கு இல்லை. அதேநேரத்தில், தற்போதைக்கு, தலித் அமைப்புகளான, விடுதலை சிறுத்தைகள், புதிய தமிழகம் மற்றும் முஸ்லிம் இயக்கங்களான, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ள, தி.மு.க., விஜயகாந்தின், தே.மு.தி.க., உடன், எப்படியும் கூட்டணி அமைந்து விடும் என்ற நம்பிக்கையில் உள்ளது. அதேபோல், பா.ஜ.,வும், பா.ம.க., -
ம.தி.மு.க., - ஐ.ஜே.கே., - கொ.மு.க., - கொ.நா.ம.க., - கே.ஜே.கே., - புதிய
நீதிக் கட்சி ஆகியவற்றை இணைத்துக் கொண்டு, தேர்தலை சந்திக்க தயாராகி
உள்ளது. அத்துடன், விஜய காந்தின்தே.மு.தி.க., வரவையும் எதிர்பார்த்து காத்திருக்கிறது. இதுதவிர, எந்தக் கட்சியுடன் கூட்டணி சேர்ந்தாலும், சேராவிட்டாலும், தனித்தும் தேர்தலை சந்திப்பது என்ற நிலையில், காங்கிரஸ் கட்சியினர் உள்ளனர்.
குழப்ப நிலைமை:
அத்துடன், அனைத்து கட்சிகளும், தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடமிருந்து, விருப்ப மனுக்களைப் பெற்று, அவற்றை பரிசீலித்து, வேட்பாளர்கள் பட்டியலை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளன. ஆனாலும், கூட்டணி விஷயத்தில், ஒரு விதமான குழப்ப நிலைமை காணப்படுவதால், வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வதிலும், அவற்றை வெளியிடுவதிலும், சுணக்கம் காட்டி வருகின்றன.கூட்டணி விவகாரத்தில், கட்சி களுக்குள் ஏற்பட்டுள்ள குழப்பங்கள் முடிவுக்கு வரும் முன், வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு விட்டால், பின், பலமான வேட்பாளர்கள் இல்லை எனக் கூறி, பலரை மாற்ற வேண்டிய நிலைமை வந்து விடக்கூடாது என்பதற்காகவே, கட்சிகள் இவ்வாறு சுணக்கமாகச்செயல்படுகின்றன.
வேட்பாளர் பட்டியல்:எப்படியானாலும், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், இந்த விவகாரத்தில், ஒரு முடிவு ஏற்படும்; கூட்டணிகள் தெளிவான உடன், கட்சிகள் உடனுக்குடன் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடலாம் என, நம்பப்படுகிறது. அப்போது, எந்த அணி அனைத்து சாதக அம்சங்களையும் கொண்ட வேட்பாளரை களமிறக்கும் என்ற நிலை தெளிவாகும். லோக்சபா தேர்தல் அறிவிப்பு வரும் முன், எளிதாக தொகுதிகளில் தங்கள் கருத்துக்களை முன்வைத்து, ஆதரவு திரட்டும் நிலை கட்சிகளுக்கு இன்று இல்லை. இச்சூழல், அடுத்த சில நாட்களில் தெளிவாகலாம்.
- நமது சிறப்பு நிருபர் -