திருச்சி : ''சேது சமுத்திர திட்டத்தை ஆதரிப்பவர்கள்; மதவாதத்தை எதிர்ப்பவர்கள், இடஒதுக்கீட்டை ஆதரிப்பவர்கள், ஜெயலலிதாவால் ஏற்பட்ட பிணி தீர ஆசைப்படுபவர்கள், ஆகியோர் தான் தி.மு.க., அணியில் சேர முடியும். இந்த அணி விரிவாவதற்கு, 'மற்றவர்கள்' முன்வந்தாலும் நாங்கள் வரவேற்போம். அப்போது இந்த அணி, பேரணி ஆக மாறும்,'' என திருச்சியில் நடந்த தி.மு.க., மாநாட்டில் கட்சி தலைவர் கருணாநிதி பேசினார்.
தி.மு.க., இணையதளத்தை துவக்கி வைத்து அவர் பேசியதாவது: வரவேற்புக்குழு தலைவர் கே.என். நேருவுக்கு எனது தனிப்பட்ட நன்றி. ஏனெனில், எத்தனையோ மாநாடுகளில் கலந்து கொண்டிருக்கிறேன். ஆனால், தனது தம்பியை (ராமஜெயம்) இழந்து தவிக்கும் நேரத்திலும், இந்த மாநாட்டில் அவர் ஆற்றிய பணி வியப்பிக்குரியதாக இருந்தது. அவரை 'வைர நெஞ்சம்' படைத்தவர் என்று சொல்லலாம். அவரை பாராட்டுவது என்பது, என்னையே பாராட்டுவதை போன்றது. 200 ஏக்கரில் மாநாட்டை நடத்தியிருக்கிறார் என்றால்; அதில் ஒரு பகுதி நேரு தம்பி ராமஜெயத்தின் நிலம். ஒரு ராமஜெயத்தை அழித்து விடலாம், பழி வாங்கி விடலாம், கொன்று விடலாம். என நினைத்தால், ஒரு ராமஜெயமல்ல; ஓராயிரம் ராமஜெயத்தை அழித்தாலும், தொண்டர்கள் இந்த இயக்கத்தை கட்டிக்காப்பார்கள். இந்த மாநாட்டின் மிகப்பெரிய வெற்றிக்கு காரணம் நேரு. தி.மு.க., வரலாற்றில் இம்மாநாடு ஒரு மைல்கல்.மிக முக்கியமான காலகட்டத்தில் இந்த மாநாடு நடந்துள்ளது. இதனை தொடர்ந்து தி.மு.க., வுக்கு பெரும் பணிகள் உள்ளது. அது தான் லோக்சபா தேர்தல். இத்தேர்தலில் காதர் மொய்தீன், திருமாவளவன், கிருஷ்ணசாமி, ஆர்.எம்.வீரப்பன், செல்லமுத்து, சுப.வீரபாண்டியன், பேராயர் எஸ்ரா சற்குணம், தனபால், ஜவாஹிருல்லா, ஜியாகத் அலிகான், வீரமணி ஆகிய தலைவர்களுடன் சேர்ந்து, தி.மு.க., தேர்தலை சந்திக்கிறது.
திருச்சியில் ஆறு: 1952ல் அண்ணா தி.மு.க., இரண்டாவது மாநாட்டை நடத்தினார். அப்போது வரவேற்புக்குழு தலைவராக இருந்தவர் அன்பில் தர்மலிங்கம். இதன்பின் 1960ல் நடந்த மாநாடு, தி.மு.க., வின் 5வது மாநாடு. இம்மாநாட்டில் தான் 'அண்ணாதுரை வழியில் அயராது உழைப்போம்', 'இந்தி திணிப்பை எதிர்ப்போம்', மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி' என தி.மு.க., வின் ஐந்து முக்கிய கொள்கைள் அறிவிக்கப்பட்டன. 10 மாநில மாநாடுகளில் 6 மாநாடுகளில் தி.மு.க., வின் தலைவர் நான் தான் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். திருச்சி மாநகரம் 'சுயமரியாதை தோட்டம்',
தற்போதைய அ.தி.மு.க., ஆட்சி, வெறும் அறிவிப்புகள் கொண்ட ஆட்சியாக திகழ்கிறது. கருத்து சுதந்திரம், பத்திரிகை சுதந்திரம், சட்டம் ஒழுங்கு என அனைத்துக்கும் எதிராக இந்த ஆட்சி திகழ்கிறது. 110 அறிக்கை, நிர்வாக அலங்கோலம், ஆக்கபூர்வமான திட்டங்கள் எதுவுமில்லை. மேலும் திராவிட இயக்க கொள்கைகளுக்கு மாறாக அ.தி.மு.க., ஆட்சி நடக்கிறது. ஜனநாயக விரோத மற்றும் காணொளி ஆட்சி தான் இங்கு நடக்கிறது. இந்த ஆட்சிக்கு நீதிமன்றத்தின் கண்டனங்கள் தொடர்ந்து விழுகின்றன. அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன், தி.மு.க., கொண்டு வந்த சமச்சீர் கல்வி நிறைவேற்றக்கூடாது, என்ற காழ்ப்புணர்ச்சியோடு, இந்த அரசு இதற்கு சவக்குழி தோண்ட பார்த்தது. பின் சுப்ரீம் கோர்ட்டின் கண்டனத்தை தொடர்ந்து தான், அது நிறைவேறியேது. இது போல தான் அண்ணா நூலகத்தை முடக்கி, அங்கு மருத்துவனை ஆக்குவது என்ற அ.தி.மு.க.,வின் முடிவும் நீதிமன்றத்தின் கண்டனத்துக்கு உள்ளானது. முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கு, 15 ஆண்டுகளாக வேண்டுமென்றே இழுக்கப்பட்டு வருகிறது. வாய்தா மேல் வாய்தா வாங்கி நாட்களை கடத்துகிறார். குற்றம் சுமத்தப்பட்டவர், தான் விரும்பும் நீதிபதி விசாரித்தால் தான், நான் விசாரணைக்கு வருவேன் என்று கூறுவது எங்காவது நடந்தது உண்டா. இங்கு தான் இந்த அநீதி நடக்கிறது.
ஒரு முறை சட்டசபையில் நான் அ.தி.மு.க., என்று பேசும் போது, ஏன் நீங்கள் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என கூறாமல் அ.தி.மு.க., என கூறுகிறீர்கள் என்று அக்கட்சியினர் கேட்டனர். அதற்கு நான், நீதிக்கு முன் "அ' சேர்த்தால் அநீதி ஆகி விடும். அது போல பல விஷயங்களில் "அ' எழுத்தை சேர்த்தால் அது தீய செயல்களை தான் குறிக்கும். அதுபோல தி.மு.க., என்ற வார்த்தைக்கு முன் "அ' வை சேர்க்கும் போது, அ.தி.மு.க., என்பது தி.மு.க., கொள்கைக்கு எதிரானது என்றே பொருள் படுகிறது.
சேது சமுத்திர திட்டம், காவிரி பிரச்னை ஆகியவற்றில் ஜெயலலிதா "இரட்டை வேடம்' போடுகிறார். 1967ம் ஆண்டில் ஆட்சி பொறுப்பேற்றவுடன் அண்ணா அறிவித்த திட்டம் தான் இது. அண்ணாதுரையின் கனவு திட்டமான சேது சமுத்திர திட்டத்தையே எதிர்த்தவர் தான் இந்த முதல்வர் ஜெயலலிதா. கட்சியின் பெயரில் 'அண்ணா'வை வைத்துக்கொண்டு, அவரது திட்டத்தை எதிர்ப்பது எவ்வகையில் நியாயம். இத்திட்டம் நிறைவேறினால் தென் மாவட்டங்கள் வளர்ச்சி பெறும். ஆனால் இதை நிறைவேற்றாமல் இருப்பதற்கு காரணம், தி.மு.க., கொண்டு வந்த திட்டம் என்ற காழ்ப்புணர்ச்சியை தவிர வேறு ஒன்றுமில்லை. மாநில வளர்ச்சிக்கு எதிராக இருக்கும் ஜெயலலிதாவா, தமிழகத்தை எப்படி வளப்படுத்தப் போகிறார்.
கூட்டணி எப்படி:
சேது சமுத்திர திட்டத்தை ஆதரிப்பவர்கள்; மதவாதத்தை எதிர்ப்பவர்கள், இடஒதுக்கீட்டை ஆதரிப்பவர்கள், ஜெயலலிதாவால் ஏற்பட்ட பிணி தீர ஆசைப்படுபவர்கள் ஆகியவர்கள் தான் தி.மு.க., அணியில் சேர முடியும். இந்த அணி விரிவாவதற்கு, மற்றவர்கள் முன்வந்தாலும் நாங்கள் வரவேற்போம். அப்போது இந்த அணி, பேரணி ஆக மாறும்.இந்த அணி வெல்லப்போவது உண்மை. இதற்கு தொண்டர்கள் கடுமையாக உழைக்க வேண்டும், என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE