தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதுஉட்பட, மாநிலத்தின் பல பிரச்னைகள் குறித்து, பிரதமர் மன்மோகன் சிங்கிடம் புகார் மனுஅளிக்க, தன் கட்சி எம்.எல்.ஏ.,க்கள், 20 பேருடன், கடந்த, 13ம் தேதி, டில்லி சென்றார் விஜயகாந்த். அவருடன், விஜயகாந்தின் மனைவி, பிரேமலதா, மைத்துனர், சுதீஷ் ஆகியோரும் உடன் சென்றனர்.
டில்லி சென்ற விஜயகாந்த், எம்.எல்.ஏ.,க்களை எல்லாம், தமிழ்நாடு இல்லத்தில் தங்கும்படி கூறிவிட்டு, அவர் மட்டும் மனைவி மற்றும் மைத்துனருடன், நட்சத்திர ஓட்டலில் தங்கினார். மறுநாள், எம்.எல்.ஏ.,க்களுடன், பிரதமரை சந்தித்த விஜயகாந்த், அதன்பின், ஓட்டலுக்கு சென்று விட்டார்.
ஓரம்கட்டி விட்டு:
பிரதமரைச் சந்திக்க, டில்லி செல்வது குறித்து, தகவல் ஒரு நாள் முன்னர் தான், தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்களுக்கு தெரிவிக்கப்பட்டது. ஆனாலும், கட்சித் தலைமை உத்தரவு என்பதால், ஏற்கனவே திட்டமிட்டிருந்த, பல வேலைகளை ஓரங்கட்டி விட்டு, எம்.எல்.ஏ.,க்கள், 20 பேரும், டில்லி சென்றனர்.தமிழ்நாடு இல்லம் திரும்பிய, எம்.எல்.ஏ.,க்களை, அவர் கண்டு கொள்ளவே இல்லை. அடுத்தது என்ன என்பது பற்றி, தலைவரிடம் இருந்து எந்த தகவலும் இல்லாததால், அவசர வேலை இருப்பதாகக் கூறி, ஒருசில எம்.எல்.ஏ.,க்கள் மட்டும், நேற்று முன்தினம் இரவே, சென்னை திரும்பி விட்டனர்.மற்றவர்கள் எல்லாம், டில்லியை சுற்றிப் பார்த்ததோடு, தலைவரிடம் இருந்து தகவல் வரும் என, காத்திருந்தனர். இந்நிலையில், நேற்று இரவு, டில்லியில் இருந்து, சென்னை புறப்பட இருப்பதாக, சந்திரகுமார் எம்.எல்.ஏ., மூலம், மற்ற எம்.எல்.ஏ.,க்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திடீரென புறப்பட்டு:
இரவு தலைவரோடு தான், சென்னை செல்கிறோம் என, நேற்று மீதமுள்ள எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும், ஆவலோடு காத்திருக்கையில், எந்த தகவலும் தெரிவிக்காமல், மதியம் திடீரென, விமானம் மூலம், விஜயகாந்த், பிரேமலதா, சுதீஷ் ஆகியோர், சென்னை புறப்பட்டு வந்து விட்டனர்.
விஜயகாந்தின் செயல்பாடு குறித்து, சென்னை திரும்பும் முன்,டில்லியில், தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்கள் சிலர் கூறியதாவது:சென்னை திரும்பிய விஜய காந்த், விமான நிலையத்தில், பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்து, அது தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பான பிறகே, டில்லியில் இருந்த எம்.எல்.ஏ.,க் களுக்கு, அவர் சென்னை திரும்பியது தெரியவந்தது. விஜயகாந்த் சொல்லாமல், புறப்பட்டு வந்ததால், அவருடன் சென்னை திரும்பலாம் என, காத்திருந்த, அவர்கள் கடும் அதிர்ச்சியும், கோபமும் அடைந்தனர்.மேலும், டில்லி பயணத்தின் போது, விஜயகாந்த் நடந்து கொண்ட விதம், பல எம்.எல்.ஏ.,க்களை கொதிப்படையவும் செய்துள்ளது. இந்தக் கோபம் எல்லாம், விஜயகாந்தின் கூட்டணி முடிவுக்கு பின், சிவகாசி பட்டாசு போல் வெடித்தாலும், ஆச்சர்யப்படுவதற்கு இல்லை.
டில்லியில் பிரதமரை சந்தித்த பின், அங்கு எங்களுக்கு எந்த வேலையும் இல்லை. அதனால், 'சென்னை திரும்பவா' என, விஜய காந்திடம் கேட்டோம்; அதற்கு, அவர் அனுமதி அளிக்கவில்லை.சரி வேறு ஏதோ விஷயம் இருக்கலாம்; அதனால் தான், தலைவர் இப்படி கூறுகிறார் என, நினைத்து, நாங்களும் தங்கியிருந்தோம். ஆனால், எங்களிடம் சொல்லிக் கொள்ளாமல், சென்னை திரும்பியது, எந்த விதத்தில் நியாயம்; நாங்கள் என்ன, கட்சி எம்.எல்.ஏ.,க்களா அல்லது அவரின் வீட்டு வேலைக்காரர்களா?திருச்சியில் நேற்றும், நேற்று முன்தினமும், தி.மு.க., மாநாடு நடந்தது. இந்த மாநாட்டு செய்திகள், பெரிய அளவில் பத்திரிகைகளில் வெளியாகலாம். இந்த நேரத்தில், நாம் டில்லி சென்றால், தி.மு.க., மாநாட்டிற்கான, முக்கியத்துவத்தை விட, நம் பயணத்திற்கு அதிக முக்கியத்தும் கிடைக்கும் என, நினைத்தே, எங்களை எல்லாம், டில்லிக்கு அழைத்து வந்துள்ளார் விஜயகாந்த்.
பெரிய விஷயமில்லை:
மற்றபடி, பிரதமரை சந்தித்து, உண்மையிலேயே தமிழக பிரச்னைகளை முறையிட வேண்டும் என்பதெல்லாம், அவரின் எண்ணமில்லை. சினிமாவில் நடிப்பது போல, பிரதமர் உடனான சந்திப்பு விஷயத்திலும், அவர் நன்றாக நடித்துள்ளார்.எம்.பி., ஒருவர், பிரதமரை சந்திக்க விரும்பினாலே, அதற்கு அனுமதி அளித்து, நேரம் ஒதுக்கி, அவரை பிரதமர் சந்திக்க வேண்டும். இது மக்கள் பிரதிநிதிகளுக்கு, நம் அரசியல் சட்டம் கொடுத்துள்ள உரிமை.அதனால், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும், விஜயகாந்த், தன் கட்சி எம்.எல்.ஏ.,க்களுடன் சந்திக்க விரும்புவதாக, பிரதமருக்கு கடிதம் எழுதியதும், அவர் அனுமதி வழங்கியுள்ளார். இது ஒன்றும், பெரிய விஷயமல்ல. ஆனால், எங்கள் கட்சித் தலைவர், அதை வைத்து, ஒரு அரசியல் நாடகமே நடத்தி விட்டார்.இவ்வாறு, அவர் கூறினார்.
- நமது நிருபர் - -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE