நாட்டின் தென்கோடியில் உள்ளது, கன்னியாகுமரி லோக்சபா தொகுதி. இத்தொகுதி, முன்னர் நாகர்கோவில் தொகுதியாக இருந்தது. 2009 லோக்சபா தேர்தலுக்கு முன், கன்னியாகுமரி தொகுதியாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது. கன்னியாகுமரி லோக்சபா தொகுதியில், கன்னியாகுமரி, குளச்சல், கிள்ளியூர், நாகர் கோவில், பத்மநாபபுரம், விளவங்கோடு ஆகிய, ஆறு சட்டசபை தொகுதிகள் உள்ளன. இத்தொகுதியில், காங்கிரஸ் கட்சியே அதிக முறை வெற்றி பெற்றுள்ளது. காங்கிரசில் இருந்து பிரிந்து சென்ற, த.மா.கா., இரண்டு முறை வெற்றி பெற்றுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர், காமராஜர், வெற்றி பெற்ற தொகுதி இது.
வெற்றி பெறும் கட்சி : இந்தத் தொகுதியின் வெற்றி, டில்லி செங்கோட்டையில் எதிரொலிக்கிறது. இங்கு வெற்றி பெறும் கட்சி அல்லது அதன் கூட்டணி கட்சி, மத்தியில் ஆட்சி அமைக்கிறது. எனவே, இத்தொகுதியில் வெற்றி பெற, அரசியல் கட்சிகள் ஆர்வம் காட்டுகின்றன. இங்கு, தேசிய கட்சிகளே வெற்றி பெற்று வந்துள்ளன. கடந்த முறை மட்டும், தி.மு.க., வெற்றி பெற்றது. அக்கட்சி சார்பில் போட்டியிட்ட, ஹெலன் டேவிட்சன் வெற்றி பெற்று, இத்தொகுதியின் முதல் பெண் எம்.பி., என்ற பெயரை பெற்றார். தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்திருந்த காங்கிரஸ், மத்தியில் ஆட்சியை பிடித்தது. மத்திய அமைச்சரவையில், தி.மு.க., இடம் பெற்றது. அதேபோல், 1999ல் பா.ஜ., வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன், வெற்றி பெற்றார். அந்த முறை, பா.ஜ., மத்தியில், ஆட்சியை பிடித்தது.
பிரதமராகும் வாய்ப்பு : இத்தொகுதியில், ஒரு முறை கூட அ.தி.மு.க., போட்டியிட்டதில்லை. வரும் லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., 40 இடங்களிலும், வெற்றி பெற வேண்டும் என்ற துடிப்புடன் களம் இறங்குகிறது. அதிக இடங்களை கைப்பற்றினால், முதல்வருக்கு பிரதமராக வாய்ப்பு வரும் என, அக்கட்சியினர் நம்புகின்றனர்.
அந்த நம்பிக்கை உண்மையாக, "சென்டி மென்ட்' தொகுதியான கன்னியாகுமரியில், இம்முறை, அ.தி.மு.க., களம் இறங்க வேண்டும். இங்கு வெற்றி பெற்றால், மத்தியில் ஆட்சியை பிடிக்கலாம் என, கன்னியாகுமரி மாவட்ட அ.தி.மு.க., வினர், கட்சி தலைமைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதை, அ.தி.மு.க., தலைமை பரிசீலித்து வருகிறது. 2004ல், இத்தொகுதியில் வெற்றி பெற்ற, மார்க்சிஸ்ட் கம்யூ., இம்முறை அந்த தொகுதியை ஒதுக்கும்படி, அ.தி.மு.க.,விடம் கேட்டுள்ளது. ஆனால், அ.தி.மு.க., தயக்கம் காட்டி வருகிறது. சென்டிமென்ட் தொகுதியில், அ.தி.மு.க., களம் இறங்குமா என்ற எதிர்பார்ப்பு, கட்சியினரிடம் மட்டுமின்றி, அப்பகுதி மக்களிடமும் உருவாகியுள்ளது.
- நமது சிறப்பு நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE