"லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்று, நாட்டின் அடுத்த பிரதமராக, ஜெயலலிதா பதவி ஏற்க வேண்டும்' என, அந்தக் கட்சியினர் பலரும், மாரியம்மனுக்கு வேப்பலை கட்டி கோவிலை சுற்றி வருவது, மண் சோறு சாப்பிடுவது என, பலவிதமான பிரார்த்தனைகளை நிறைவேற்றி வருகின்றனர். அந்த வகையில், ஜெயலலிதா பிரதமராக வேண்டி, ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள
காட்டு அழகர் கோவிலில், சுதர்சன யாகத்தை, சென்னையைச் சேர்ந்த திவாகர் என்பவர் தலைமையில், அ.தி.மு.க., வழக்கறிஞர்கள் ஆறு பேர் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். முதல்வர் ஜெயலலிதாவின், பிறந்த நட்சத்திரம் மகம். அதனால், மாசி மகமான நேற்று முன்தினம், மதியம், 1:30 மணிக்கு, அவர்கள் சுதர்சன யாகத்தை நடத்தி உள்ளனர். யாகம் நடத்திய வழக்கறிஞர்களிடம் கேட்ட போது, "குறிப்பிட்ட அந்த நாளில், சுதர்சன யாகம் நடத்தினால், என்ன வேண்டுதலோடு யாகம் நடத்தப்படுகிறதோ, அது கட்டாயம் நிறைவேறும் என்பது நம்பிக்கை. அதனால், ஜெயலலிதா பிரதமராக வேண்டும் என்ற வேண்டுதலோடு, யாகம் நடத்தப்பட்டுள்ளது' என, தெரிவித்தனர்.
"கேப்டன் சேர்ந்தால் மேஜர் ஆகலாம்'
திருப்பூர் மாவட்டம், அவிநாசிக்கு நேற்று வந்திருந்திருந்த, மாநில காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர், கார்த்தி சிதம்பரம் கூறியதாவது: காங்கிரசுடன், தே.மு.தி.க., கூட்டணி அமைத்தால், "கேப்டன்' விஜயகாந்த், நிச்சயமாக, "மேஜர்' ஆவார். காங்., தனிமைப்படுத்தப்படவில்லை. தேர்தல் தேதி அறிவிப்புக்குப்பின் கூட்டணி முடிவாகும்.கடவுள் மறுப்பு கொள்கையை பின்பற்றும், ம.தி.மு.க., - பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்திருக்கிறது. அதுபோல, அரசியலில் எதுவும் நடக்கலாம். காங்கிரஸ் கட்சியில், கோஷ்டி பூசல் இருப்பதாக கூறுகிறார்கள். எல்லா கட்சியிலும் கோஷ்டி பூசல் இருக்கத் தான் செய்கிறது. உள்கட்சிக்குள் போட்டியிருப்பது நல்லது.இவ்வாறு, கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.
- நமது நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE