'ஆம் ஆத்மி' தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால். டில்லி முதல்வராக, பதவியேற்ற நாளில் இருந்து, அவரும் அவருடைய அமைச்சரவை சகாக்களும் பல்வேறு விதமான அதிரடிகளை செய்ய, அது பல சர்ச்சைகளுக்கு வித்திட்டது. மத்திய அரசை எதிர்த்து, டில்லி ரயில்வே பவன் முன்பாக போராட்டம் நடத்தி அதிரடி செய்த கெஜ்ரிவால், ஜன் லோக்பால் மசோதாவை சட்டசபையில் தாக்கல் செய்ய முயல, அதை தோற்கடித்தனர். காங்கிரஸ் மற்றும் பா.ஜ.,வினர். இதனால் வெறுப்படைந்த கெஜ்ரிவால், தன்னுடைய பதவியை ராஜினாமா செய்து, டில்லியின் ஆம் ஆத்மி ஆட்சிக்கு முடிவுரை எழுதினார். அவரின் இந்த நடவடிக்கைகள், அவருடைய அரசியல் எதிர்காலத்தை பாழ்படுத்தி விட்டதாகவும், அது அவருடைய இமேஜை உயர்த்தி இருக்கிறது எனவும் மாறுபட்ட கருத்துக்களை பிரபலங்கள் இருவர் பகிர்ந்து கொண்டனர். அந்த கருத்துக்கள் இங்கே:
டில்லி சட்டசபை தேர்தல் நடந்தபோது, ஆம் ஆத்மி என்ற கட்சி களத்திலேயே இல்லை என்றார்கள். மக்களின் ஆதரவு பெற்று, பெரும் வெற்றி பெற்றோம். ஆனால், மெஜாரிட்டி கிடைக்கவில்லை. உடனே, ஆட்சி அமைக்க பயந்து ஓடுகிறார்கள் என்றனர். இருந்தும் காங்., ஆதரவுடன் ஆட்சி அமைத்தோம். இது, சந்தர்ப்பவாதம் என, சொன்னார்கள்.
டில்லி மாநிலத்துக்குரிய அதிகாரங்களை அளிக்க வேண்டும். மத்திய அரசு டில்லி அரசை நடத்தக் கூடாது என, கெஜ்ரிவால் போராடிய போது, காங்கிரசை வெறுப்பேற்றி, ஆதரவை வாபஸ் வாங்கி வைக்க முயற்சிக்கின்றனர். இதனால், மக்கள் அனுதாபத்தை பெற முயற்சிக்கின்றனர் என, குற்றம் சுமத்தினர்.
ஆம் ஆத்மி தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள, ஜன் லோக்பால் மசோதாவை தாக்கல் செய்த போது, மத்திய அரசின் அனுமதி பெறாமல், சட்டத்துக்கு புறம்பாக செயல்படுகின்றனர் என, விமர்சித்தனர். கடந்த இரு மாதங்களில், ஆம் ஆத்மியின் ஒவ்வொரு நடவடிக்கையையும் குறைசொல்லி கேலியும், கிண்டலும் செய்தார்கள். செயல்பட முடியாமல், மத்திய அரசின் அடிமையாக இருப்பதை விட, ஆட்சி விட்டு வெளியேறினால், லோக்சபா தேர்தலை மனதில் கொண்டு, கெஜ்ரிவால் ராஜினாமா செய்துவிட்டார். அவருக்கு பிரதமராகும் ஆசை வந்துவிட்டது என்கின்றனர்.
நாடு சுதந்திரம் பெற்று 67 ஆண்டுகளில், டில்லியில் இதுபோன்ற விழிப்புணர்வை எந்த ஆட்சியாளரும் ஏற்படுத்தியதில்லை. அதை, ஆம் ஆத்மி செய்துள்ளது. ஆட்சியில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, மக்கள் நலன் பேணப்பட வேண்டும் என்பது தான், எங்கள் நோக்கம். அதை கடந்த, 49 நாள் ஆட்சியில் செய்துள்ளோம். இனி வரும் முடிவுகளை, மக்கள் எடுப்பார்கள். எங்களை தூற்றுவது பற்றி கவலையில்லை. டில்லி மக்களை, இனி ஏமாற்ற முடியாது. அவர்களை உஷார் படுத்திவிட்டோம். என்றைக்கும் நாங்கள் தோற்றுவிட மாட்டோம்.
லெனின் நிர்வாகக்குழு உறுப்பினர், தமிழக ஆம் ஆத்மி
+++++
இந்தியாவில் உள்ள எந்த மாநில மும், ஒரு சட்டத்தை நிறைவேற்ற வேண்டுமானால், அம்மாநில கவர்னரின் அனுமதியைப் பெற்றுத் தான், சட்டசபையில் நிறைவேற்ற முடியும். அதுபோல தான், டில்லி சட்டசபையில் நிறைவேற்றும் சட்டத்துக்கு, அம்மாநில துணை நிலை கவர்னரின் அனுமதி பெற வேண்டும்.ஜன லோக்பால் சட்டத்துக்கு இதுபோன்ற அனுமதியை, கெஜ்ரிவால் பெறவில்லை.மத்திய அரசு லோக்பால் சட்டத்தை நிறைவேற்றியுள்ள நிலையில், டில்லி மாநிலம், ஜன் லோக்பால் என்ற மற்றொரு சட்டத்தை நிறைவேற்ற முடியாது. ஆனால், அப்படியொரு செயலை, கெஜ்ரிவால் செய்ய முயன்றார்.அவர், இந்திய அரசியல் சட்டத்தை மதிக்க வில்லை. மெஜாரிட்டி இல்லாமல் இருக்கும் அரசை அமைக்க முன்வர மாட்டேன் என, கெஜ்ரிவால் அறிவித்தார். அதன்பின், ஆட்சி அமைக்க அவரே முன்வந்தார். ஆனால், எப்போது ஆட்சியிலிருந்து வெளியேறலாம் என, சமயம் பார்த்துக் கொண்டிருந்தார்.அப்படி வெளியேறும்போது, தன்னை ஒரு கதாநாயகனாக மக்கள் நினைக்க வேண்டும் என, கெஜ்ரிவால் திட்டமிட்டார். அதனால், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், சர்சைக்குரிய, சட்டத்துக்கு புறம்பான வேலைகளைச் செய்யத் துவங்கினார். அதன் வெளிப்பாடு தான், சட்டப்புறம்பாக ஜன் லோக்பால் மசோதாவை, சட்டசபையில் தாக்கல் செய்ய அவர் முயன்றது.
இதன்மூலம், விளம்பரத்தை தேடவே கெஜ்ரிவால் விரும்புகிறார். டில்லி போன்ற யூனியன் பிரதேசங்கள், மத்திய உள்துறையின் கீழ் இயங்குபவை. இதைத் தகர்த்து எறிவேன் என, கெஜ்ரிவால் முயற்சிப்பது, அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது. தான் சட்ட விரோதமாக செயல்படுகிறோம் என, தெரிந்து அவர் செயல்படுகிறார். அதன்மூலம், அரசியல் லாபம் ஈட்டலாம் என, நினைக்கிறார். அவரது ஆசை நிறைவேறாது. கிடைத்த நல்ல வாய்ப்பை தவற விட்டுவிட்டார் கெஜ்ரிவால். அவர் அரசியலில் இனி தேறுவது கஷ்டம்.
எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்:மாநில நிர்வாகக் குழு உறுப்பினர், தமிழக காங்கிரஸ்
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE