புதுடில்லி:'கச்சத்தீவு விவகாரம் முடிந்து போன விஷயம். அதை திரும்ப பெறும் பேச்சுக்கே இடமில்லை' என, மத்திய அரசு, சுப்ரீம் கோர்ட்டில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
மத்திய அரசு பதில்:
'இலங்கைக்கு தாரை வார்த்த கச்சத்தீவை திரும்ப பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக, மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி, சுப்ரீம் கோர்ட்டில், மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவுக்கு, மத்திய அரசு பதில் அளித்துள்ளது.
சுப்ரீம் கோர்ட்டில், மத்திய அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
கச்சத்தீவு விவகாரம், பிரிட்டிஷ் இந்தியாவுக்கும், சிலோனுக்கும் இடையேயான பிரச்னை. இது தொடர்பாக, அப்போது எல்லை வரையறுக்கப்படவில்லை. கடந்த, 1974ம் ஆண்டிலேயே, இதனால் ஏற்படும் அனைத்து பிரச்னைகளையும் ஆய்வு செய்து, இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகி விட்டது. அப்போதே, இந்த பிரச்னை முடிந்து விட்டது. 1976ல், ஏற்பட்ட ஒப்பந்தத்தில், இது உறுதி செய்யப்பட்டது.எனவே, இந்தியாவுக்கு சொந்தமான எந்த பகுதியும், இலங்கைக்கு தாரை வார்க்கப்படவில்லை. கச்சத்தீவு, இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டதாக கூறுவது தவறு. அதிகாரப்பூர்வ ஆவணங்களில் உள்ள விஷயங்களுக்கு, முற்றிலும் மாறுபட்ட கருத்து இது.
மீன்பிடி உரிமையில்லை:
இலங்கை கடல் எல்லையில் மீன் பிடிக்க, இந்திய மீனவர்களுக்கு உரிமை இல்லை என, ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது. மேலும், ஒப்பந்தத்தின்படி, இந்திய மீனவர்களும், யாத்ரீகர்களும், கச்சத்தீவுக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக, இலங்கை அரசிடம், எந்த விசாவும் பெற வேண்டிய தேவையில்லை. ஆனால், இந்த உரிமையை, மீன் பிடிப்பதற்கு கொடுக்கப்பட்ட உரிமையாக கருதக் கூடாது.இந்தியாவுக்கு சொந்தமான பகுதி, இலங்கைக்கு கொடுக்கப்படாத நிலையில், அது தொடர்பாக, பார்லிமென்ட்டில், சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும் என்ற கேள்வியே எழவில்லை. ஆனாலும், இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட ஒப்பந்தம், பார்லிமென்டில் சமர்ப்பிக்கப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டது.எனவே, இந்தியாவுக்கும், இலங்கைக்கு இடையோன கடல் எல்லை என்ற பிரச்னையும், கச்சத்தீவின் இறையாண்மை குறித்த பிரச்னையும், ஏற்கனவே முடிந்து போன விஷயம். அதை திரும்ப பெறும், பேச்சுக்கே இடமில்லை.இவ்வாறு, மத்திய அரசு பதில் அளித்துள்ளது.