வடக்கு வாழ்கிறது... தெற்கு தேய்கிறது... என்பது ரயில்வே துறையை பொறுத்த வரையில், இந்த காலகட்டத்திற்கும் பொருத்தமாகவே இருக்கிறது. சில ஆண்டுகளாகவே, ரயில்வே பட்ஜெட்டில், தமிழகம் தொடர்ந்து வஞ்சிக்கப்படுவதால், ரயில்வே வளர்ச்சி பணிகள் நிறைவேற, மேலும் பல ஆண்டுகளாகும் அவலம் நிலவுகிறது.
இந்நிலையில், ரயில்வே அமைச்சர், மல்லி கார்ஜூன கார்கே, தாக்கல் செய்த ரயில்வே இடைக்கால பட்ஜெட், 'பொய்களின் சங்கமம்' என்கிறார், தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் செயல் தலைவர், இளங்கோவன்.
பாதுகாப்பு இல்லை:
மேலும், 'குறைந்த உண்மையை' பட்ஜெட் வாயிலாக, 'ஊதிக் காட்டி உள்ளதுடன்', இந்த பட்ஜெட்டால், பயணிகளுக்கு பயனில்லை; தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
அவர் அளித்த சிறப்பு பேட்டி:ரயில்வே பட்ஜெட்டில், மத்திய அமைச்சர், 1.60 லட்சம் குரூப் - டி மற்றும் ஒரு லட்சம் குரூப் - சி ஊழியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். மேலும், ஆறாவது சம்பள கமிஷனை அமல்படுத்தியதன் மூலம், ஒரு லட்சம் கோடி ரூபாய், ஊழியர்களுக்கு செலவழித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.ஆனால், அவர், ஏற்கனவே தெரிவித்த தகவல்களுக்கு, இது நேர்முரணாக இருக்கிறது. ஏற்கனவே, லோக்சபாவில், இதே அமைச்சர், 2014 ஜன., 20ம் தேதி, 30 ஆயிரம் ஊழியர்கள் மட்டும் தேர்வு செய்யப்பட்டதாகவும், அதற்கு முந்தைய ஆண்டு, 30 ஆயிரம், அதற்கு முன், 25 ஆயிரம் என, குறிப்பிட்டிருந்தார்.அந்த வகையில் ஐந்தாண்டுகளில், மொத்தம், 1.20 லட்சம் பேர் மட்டும் நியமிக்கப்பட்டதாக அவரது பேச்சு இருந்தது. தற்போது கூட, நாடு முழுவதும் மத்திய அரசு அலுவலகங்களில், ஆறு லட்சம் காலி பணிஇடங்கள் உள்ளன. ரயில்வேயில் மட்டும், 2.71 லட்சம், காலியிடங்கள் உள்ளன.
ரயில்வேயில் ஸ்டேஷன் மாஸ்டர்கள், கார்டுகள், இன்ஜின் டிரைவர் என, பாதுகாப்பு பிரிவில் மட்டும், 1.49 லட்சம் காலியிடங்கள் உள்ளன. 'கேட் மேன்' பணியிடங்கள் மட்டும், 55 ஆயிரம் காலியாக உள்ளன. தெற்கு ரயில்வேயில், 5,000 காலியிடங்கள் உள்ளன. இந்தாண்டு மட்டும், 48 ஆயிரம் பேர் ஓய்வு பெற உள்ளனர். மொத்தம், 3 லட்சம் காலிஇடங்கள் இருக்கும் நிலையில், 30 ஆயிரம் ஊழியர்களை நியமித்து விட்டு, தவறான தகவலை தருகிறார்.கடந்த, 2001ல், 'வெப்சைட்' தகவலில், ரயில்வே அமைச்சர், காலியிடங்கள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டதிலிருந்து, இதை அறியலாம். மேலும் சம்பள கமிஷன் பரிந்துரை யால், ஊழியர்களுக்கு, ஒரு லட்சம் கோடி ரூபாய் வழங்கப்பட்டதாக கூறுவதும் தவறு.
அத்துடன், 1,532 கி.மீ., தூரத்திற்கு, புதிய ரயில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன என, தெரிவித்தார். ஆனால், புதிய ரயில் பாதைகள், 280 கி.மீ., இரட்டை பாதைகள், 130 கி.மீ., அகல பாதைகள், 400 கி.மீ., என, மொத்தம், 810 கி.மீ., தூரத்திற்கு தான், ரயில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், குறைந்த உண்மையை ஊதி பெரிதாக்கியுள்ளார்.ரேபரேலி, சாப்ராவில் ரயில் பெட்டி மற்றும், ரயில் சக்கர தொழிற்சாலை அமைக்கப்படும் என, ஏற்கனவே அறிவித்தனர். உண்மையில் ரேபரேலியில் ரயில் பெட்டிகள் உற்பத்தி செய்யப்படவில்லை. மற்ற இடங் களிலிருந்து உதிரி பாகங்களை சேகரித்து, 'அசெம்பிள்' செய்யும் பணி மட்டும் நடக்கிறது. உற்பத்தி இதுவரை துவங்கப்படவில்லை.ரயில் பெட்டி தொழிற்சாலைக்கான, அன்னிய நேரடி முதலீடு செய்யும் திட்டத்திற்கு, ஒருவர் கூட விண்ணப்பிக்க வில்லை என்பதே உண்மை. 11வது ஐந்தாண்டு திட்ட காலத்தில், தனியார் பங்களிப் புடன், 60 ஆயிரம் கோடி ரூபாயில் ரயில்வே பணிகள் நடந்தன. அதில், 30 சதவீதம் தனியார் முதலீடு வரும் என, தெரிவிக்கப்பட்டது. ஆனால், 4 சதவீதம் மட்டும் வந்தது.
பொய்கள் நிறைந்தது:
கடந்த பட்ஜெட்டில் அறிவித்த ரயில்களை கூட, இன்னமும் விடாத நிலையில், புதிய ரயில்கள் இயக்குவதாக அறிவித்தது வேடிக்கை.ரயில்வே தொழிலாளர்களுக்கு, புதிய ஓய்வூதிய திட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்படும் என, தகவல்கள் வெளியாகின. ஆனால், அதுகுறித்தும் ரயில்வே பட்ஜெட்டில் அறிவிப்பு இல்லை. மொத்தத்தில் பயணிகளுக்கு பயனளிக்காததுடன், தொழிலாளர்களுக்கும் பாதுகாப்பு இல்லாத, பொய்கள் நிறைந்ததாக ரயில்வே பட்ஜெட் உள்ளது.
இவ்வாறு, இளங்கோ கூறினார்.
- நமது நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE