மதுரை: மதுரையில், அடுத்தடுத்து வெடிகுண்டுகள்கண்டெடுக்கப்பட்டு, வழக்குப்பதிவு செய்யப்பட்டு வரும் நிலையில், இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. இதனாலேயே, தொடர்ந்து குண்டு வைக்கப்படுகின்றன. உள்ளூர் போலீசாருக்கு பதில், சிறப்பு பிரிவு போலீசார் விசாரித்தால், முற்றுப்புள்ளி ஏற்பட வாய்ப்புண்டு.
மதுரையில், விதவிதமான குண்டு வைப்பதும், அதை கண்டெடுப்பதும் போலீசாருக்கு 'வழக்கமாகி' விட்டது. பொதுமக்களுக்கும் அதை பொருட்டாக எடுத்துக்கொள்ளால் வாழ்வது 'பழக்கமாகி'விட்டது. ஆனாலும், சில நோக்கங்களுக்காக, அரசை எச்சரிக்கும் விதமாக 'பைப்' வெடிகுண்டு, 'டைம்பாம்' வைப்பது தொடர்கிறது.கடந்த 2011 அக்.,28ல், மதுரையில் பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி செல்லவிருந்த திருமங்கலம் ஆலம்பட்டி தரைப்பாலத்திற்கு அடியில், சக்திவாய்ந்த பிளாஸ்டிக் 'பைப்' வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வழக்கில், 'போலீஸ்' பக்ருதீன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். 2012 ஆகஸ்டில் அண்ணாநகர் ராமர் கோயிலுக்கு வெளியே சைக்கிள் 'டைம்பாம்' வெடித்தது. கடந்த 2010ல், மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட் எதிரே டாஸ்மாக் பாரில் 'டைம்பாம்' வெடித்தது. திருவாதவூர் பஸ், புதூர் டெப்போ பஸ்களில் 'டைம்பாம்' மற்றும் திருப்பரங்குன்றம் மலையில் 'டைம்பாம்' உதிரிபாகங்கள் கண்டெடுக்கப்பட்டன.
இம்மாதம் 11ம் தேதி, உத்தங்குடி தனியார் வணிகவளாகத்தில், சக்திவாய்ந்த இரும்பு 'பைப்' வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டது. குண்டு வழக்குகளில், அத்வானி பாதையில் குண்டு வைத்த வழக்கை தவிர, மற்ற வழக்குகளை அந்தந்த ஸ்டேஷன் போலீசாரே விசாரிக்கின்றனர். இதனாலேயே, வழக்கில் எந்த முன்னேற்றம் இல்லாமல் 'இழுத்துக்' கொண்டிருக்கிறது. குற்றவாளிகள் யார் என்றுக்கூட இதுவரை 'யூகிக்க' முடியாதது ஆச்சரியம்.இதற்கு, உள்ளூர் போலீசாருக்கும், சிறப்பு பிரிவு போலீசாருக்கும் இடையே 'அவர்கள் நல்ல பெயரை வாங்கி விடுவார்களோ' என 'ஈகோ' பிரச்னையும் ஒரு காரணம். உள்ளூர் போலீசார், வெடிகுண்டு வழக்கை விசாரிக்கும்போது, அடுத்தடுத்து மோதல், கொலை என பிற சம்பவங்கள் நடப்பதால், குண்டு வழக்குகளில் கவனம் செலுத்த முடியவில்லை. உயர் அதிகாரிகளும் அதை பற்றி கவலைப்படுவதில்லை. இதனாலேயே, குண்டு வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில், 10 வழக்குகள் பதிவாகி உள்ளன. இதில், 8 வழக்குகள் நகரில் பதிவானவை.
போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:இமாம்அலி ஆதரவாளர்களை கொண்டு, ரகசியமாக செயல்படும் தடை செய்யப்பட்ட ஒரு அமைப்பின் மீது சந்தேகம் உள்ளது.காரணம், கடந்த 2001-06 அ.தி.மு.க., ஆட்சியின்போதுதான், இமாம்அலியும், கூட்டாளிகளும் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதனால், அ.தி.மு.க., அரசின்மீது அவரது ஆதரவாளர்கள் சிலர் வெறுப்படைந்தனர். சட்டம் ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தி, அரசுக்கு அவப்பெயர் உருவாக்கும் வகையில் குண்டு வைப்பதாக தகவல் கிடைத்துள்ளது.இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க, அதற்கென உள்ள சிறப்பு புலனாய்வு பிரிவுகளிடம் அனைத்து வழக்குகளையும் ஒப்படைத்தால், விரைவில் குற்றவாளிகள் கைதாக வாய்ப்புள்ளது. இதற்கு, போலீஸ் கமிஷனர் சஞ்சய்மாத்தூர், எஸ்.பி., விஜயேந்திர பிதரி அரசுக்கும், டி.ஜி.பி., ராமானுஜத்திற்கும் பரிந்துரைக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.