ராமநாதபுரத்தில் தடையை மீறி ஊர்வலம்: கலவரத்தில் கல்வீச்சு: போலீஸ் தடியடி | Dinamalar

தமிழ்நாடு

ராமநாதபுரத்தில் தடையை மீறி ஊர்வலம்: கலவரத்தில் கல்வீச்சு: போலீஸ் தடியடி

Added : பிப் 18, 2014 | கருத்துகள் (5)

ராமநாதபுரம்:ராமநாதபுரத்தில், பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா தொண்டர்களின் அணிவகுப்பு ஊர்வலத்தில், கட்டுப்பாடுகளை மீறியதை தடுத்த போலீசார் மீது கல்வீச்சு நடந்தது. இதில் இன்ஸ்பெக்டர் உட்பட, 18 பேர் காயமடைந்தனர். போலீசார் கண்ணீர்புகை குண்டுகள் வீசி தடியடி நடத்தியதால், நிலமை கட்டுக்குள் வந்தது. ராமநாதபுரத்தில், பாப்புலர் பிரன்ட் இந்தியா நிறுவன நாள் ஊர்வலத்திற்கு கட்டுப்பாடுகளுடன் போலீசார் அனுமதித்தனர். இதன்படி, ராமேஸ்வரம் ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில், குமரையா கோவில் பகுதியில், நேற்று மதியம், 3:30 மணிக்கு, பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா தொண்டர்கள், ஊர்வலமாக சென்றனர். சீருடை அணிந்து, டிரம்ஸ் இசைத்து சென்றனர். இதற்கு போலீசார் தடை விதித்தனர். அப்போது, ஊர்வலக்காரர்கள், போலீசாருடன் வாக்குவாதம் செய்தனர். போலீஸ் மீது கற்கள் வீசப்பட்டன. இதை கட்டுப்படுத்த, போலீசார் கண்ணீர்புகை குண்டை பயன்படுத்தி, கூட்டத்தை கலைத்தனர். கலைய மறுத்தவர்கள் மீது லேசான தடியடி நடத்தினர். கல்வீச்சில் மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் ராஜாமணி, திண்டுக்கல் ஆயுதப்படை போலீசார் திரவிய செல்வன், பாலமுருகன், செந்தில்குமார், ஜெயமுகுந்தன் உட்பட 18 பேர் காயமடைந்தனர். வேடிக்கை பார்த்த சிவராஜன் படுகாயமடைந்து, ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். போலீசாரை கண்டித்து, பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா தொண்டர்கள், சாலை மறியலில் ஈடுபட்டதால், 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டன. இதன்பின், மறியல் செய்தவர்கள் கலைந்து சென்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X