லோக்சபா தேர்தல் நெருங்குவதால், அனைத்து கட்சிகளும், அதை எதிர்கொள்ள தயாராகி வருவதோடு, தங்களுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு இருக்கிறது என்பதை காண்பிக்க, மாநாடுகளையும் நடத்தி வருகின்றன. அந்த வகையில், தி.மு.க.,வும், 10வது மாநில மாநாட்டை, 15, 16ம் தேதிகளில், திருச்சியில் நடத்தி முடித்திருக்கிறது. பல கோடிகளை செலவு செய்து, நடத்தப்பட்ட இந்த மாநாடும், சம்பிரதாய மாநாடாக இருந்ததே தவிர, சிறப்பாக எதுவும் இல்லை என்றும், மாநாட்டின் மூலம், சமூகத்தில் மக்களின் வாழ்வில், எந்த முன்னேற்றமும் ஏற்படப்போவதில்லை என்றும், சிலர் கடுமையாக விமர்சிக்கின்றனர். இருந்தாலும், அந்த கருத்தை, தி.மு.க., பிரமுகர்கள் கடுமையாக எதிர்க்கின்றனர். நிஜத்தில் தி.மு.க., மாநாடு சாதித்தது என்ன என்பது குறித்து, இரு பிரபலங்கள் முன்வைத்த வாதங்கள்:
சட்டசபை தேர்தலில், உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க., படுதோல்வி அடைந்து விட்டது. கூட்டுறவு தேர்தலில் இருந்து வெளியேறிவிட்டது. அழகிரி, "சஸ்பெண்ட்' செய்யப்பட்டதால், கட்சி கலகலத்து விட்டது; பிளவு படப்போகிறது என்றெல்லாம், ஆளும் கட்சியினரும், மற்றவர்களும் கருத்துக்களை பரப்பி வருகின்றனர்.
வலுவான கூட்டணியை, தி.மு.க.,வால் அமைக்க முடியவில்லை. போதாதற்கு, கட்சியில் நிலவும் உள்கட்சி தகராறால், லோக்சபா தேர்தலில் பெரும் பின்னடைவை சந்திக்கப் போகிறது என்ற, பொய்
பிரசாரத்தையும் செய்து வருகின்றனர். இந்நிலையில், திருச்சியில் நடந்த கட்சி மாநாட்டுக்கு, யாராலும் கணிக்க முடியாத அளவுக்கு, தொண்டர்கள் பெரும் வெள்ளமென திரண்டனர். தேர்தல் தோல்வி, அழகிரி நீக்கம், எதிர்க்கட்சிகளின் தவறான பிரசாரம் எதையும் பொருட்படுத்தாமல், திருச்சி மாநாட்டுக்கு திரண்ட தொண்டர்கள், தி.மு.க., வலிமையை உலகுக்கு பறைசாற்றிஉள்ளனர். தொண்டர்களின் பெருந்திரள், திருப்புமுனையோடு, லோக்சபா தேர்தல் மற்றும் அடுத்த இரு ஆண்டுகளில் வரவுள்ள சட்டசபை தேர்தல் ஆகியவற்றில், தி.மு.க.,வின் வெற்றியை மாநாடு உறுதி செய்துள்ளது. லோக்சபா தேர்தலில், மோடி அலை வீசுகிறது. மாநிலத்தை ஆளும் கட்சிக்கு சாதகமான சூழல் நிலவுகிறது என, உருவாக்கப்படும் தோற்றங்களை எல்லாம், பொய்யாக்கும் வகையில், தேர்தல் பணியை தீவிரப்படுத்த திருச்சி மாநாடு அமைந்து
உள்ளது. எவ்வளவு பெரிய எதிர்ப்புகளை உருவாக்க நினைத்தாலும், அதையெல்லாம் தாண்டி வந்தார்கள், தி.மு.க.,வினர் என்பதை, மீண்டும் ஒருமுறை இம்மாநாடு மூலம், நிரூபித்துக் காட்டியுள்ளோம். ஏற்காடு தேர்தலில், ஆளும் கட்சியின் தேர்தல் விதி மீறல்களைத் தாண்டி, 29 சதவீத ஓட்டுகளை, தி.மு.க., பெற்றது.
லோக்சபா தேர்தலில், இதே உத்வேகத்துடன், வெற்றியை ஈட்ட, திருச்சி மாநாடு கைகொடுக்கும்.
உமாபதி, தொண்டர் அணி செயலர், தி.மு.க.,
திருச்சியில், 1957ல் நடந்த தி.மு.க., மாநாட்டில், சமூக இயக்கமாக இருந்த தி.மு.க., அரசியல் இயக்கமாக மாறுவதற்கு முடிவெடுக்கப்பட்டது. ஆனால், இப்போது நடந்த, தி.மு.க., மாநாடு, எந்தக் கொள்கை முடிவு
களையும் எடுக்காமல், காக்கா கூட்டமாக கூடிக் கலைந்துள்ளது.எங்களிடம் இவ்வளவு கூட்டம் இருக்கிறது. லோக்சபா தேர்தலுக்கு யாராவது கூட்டணி சேர வாருங்கள் என, அழைப்பு விடுக்க, மாநாட்டை நடத்தியுள்ளனர். தமிழகத்துக்காக, தமிழக மக்களுக்காக, என்ன செய்யப் போகிறோம் என்ற எந்த அறிவிப்பையும், மாநாட்டில் வெளியிடவில்லை. மாறாக, அ.தி.மு.க., பொது செயலரும், தமிழ முதல்வருமான ஜெயலலிதாவை வசைபாடியுள்ளனர். எதிராளியை ஆள்காட்டி விரல் நீட்டி, குற்றம் சுமத்தும்போது, மீதம் மூன்று விரல்கள், தன்னை நோக்கி உள்ளது என்பதை குற்றம் சுமத்துபவர் அறிய வேண்டும் என, அண்ணாதுரை சொன்னார். ஜெயலலிதாவை வசைபாடியவர்கள், தங்கள் மீதுள்ள குற்றச்சாட்டுகள் குறித்தும், செயல்பாடுகள் பற்றியும் சுய பரிசோதனை செய்து கொண்டனரா என்றால், மாநாட்டில் அது நடக்கவில்லை.
மத்திய அரசில், பா.ஜ., - காங்கிரஸ் என, மாறி, மாறி கூட்டணிகளில் பங்கெடுத்த தி.மு.க.,வினர், தங்கள் நலன் காக்க, சொத்துக்களை சேர்க்க, மத்திய அரசில் துறைகளை கேட்டு வாங்கிக் கொண்டனர். இப்போது, மீண்டும், மத்திய அரசில் அங்கம் பெற வேண்டும் என்ற எண்ணத்தில், கூட்டணியை மாற்றுகின்றனர். இதையெல்லாம் மக்கள் நம்பத் தயாராக இல்லை. மாநாட்டிலும், அதற்கான விவாதங்களை நடத்தவோ, கொள்கையை முன்னெடுக்கவோ, தி.மு.க.,வினர் தயாராக இல்லை என்பதைத் தான், திருச்சி மாநாடு சுட்டிக் காட்டியுள்ளது.
மக்களையும், தொண்டர்களையும் திசை திருப்ப, வழக்கம்போல், திகிடுதத்தங்களைத் தான், மாநாட்டில், தி.மு.க, தலைவர்கள் அரங்கேற்றிஉள்ளனர்.
கு.ப.கிருஷ்ணன், எம்.எல்.ஏ., - அ.தி.மு.க.,
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE