கடந்த, 2011ல், தமிழக சட்டசபை தேர்தல் நடந்த போது, தி.மு.க., சார்பில், சிரிப்பு நடிகர், வடிவேலுவும், அ.தி.மு.க., சார்பில், சிங்கமுத்துவும் பிரசாரம் செய்தனர். சொந்தப் பிரச்னைகளால், எதிரிகளான அவர்களின் காரசாரமான பிரசார மோதல், முகம் சுளிக்க வைத்தது. உதாரணமாக, கொளத்தூர் தொகுதியில், சிங்கமுத்து பிரசாரம் செய்த போது, "வடிவேலு மது அருந்தினால், "சைடு டிஷ்ஷாக' பக்கத்தில் இருக்கும், சுவற்றை நக்குவார்' என்று பேசினார். வடிவேலு ஒருபடி மேலே சென்று, அப்போதைய அ.தி.மு.க., கூட்டணி கட்சித் தலைவரான, விஜயகாந்த் மற்றும் சிங்கமுத்துவை கடுமையாக விமர்சித்தார். தேர்தல் முடிந்து, அ.தி.மு.க., ஆட்சி அமைத்த பின், பிரசார மோதலில் ஈடுபட்ட இருவரையும், திரையில் காண முடியாத நிலை உருவானது.
அதற்கு முன் வெளியான, அனைத்து தமிழ்ப்படங்களிலும் வடிவேலு, சிங்கமுத்து கூட்டணி இல்லாத படமே இல்லை எனும் அளவிற்கு இருந்தது குறிப்பிடத்தக்கது. வடிவேலு மெல்ல மெல்ல, முழுமையாக ஒதுக்கப்பட்டார். அவரை பிரசாரத்திற்கு பயன்படுத்திய, தி.மு.க., தலைமை உறவுகள் மூலம் தயாரிக்கப்பட்ட படங்களில் கூட, அவருக்கு வாய்ப்பு தரப்படவில்லை. அதேபோல், வடிவேலுவை விமர்ச்சித்த சிங்கமுத்து, ஆளுங்கட்சியின் ஆதரவை பெற்றிருந்?தாலும், பட வாய்ப்புகளை இழந்தார். அதற்கு காரணம், ஏதாவது பிரச்னை என்றால், அ.தி.மு.க.,வின் மூலம் தேவையற்ற நெருக்கடிகள் தங்களுக்கு ஏற்படலாம் என்று, இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் அவருக்கு வாய்ப்பு கொடுக்காமல் நழுவினர்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக, அவர்கள் இருவரைப் பற்றிய செய்திகள் கூட வருவதில்லை.
இருந்தாலும், வடிவேலும், சிங்கமுத்துவும் மீண்டும் தேர்தல் பிரசாரத்திற்கு களமிறங் கலாம்; அதன்மூலம், திரை உலகில் இழந்த இடத்தை, மீண்டும் பிடிக்க முயற்சிக்கலாம் என, தகவல்கள் கசிந்தன.
இதுபற்றி இருவரின் ஆதரவாளர்களிடம் கேட்ட போது, "பட்ட சூட்டால் பால் வேண்டாம் என்று தலைதெறிக்க ஓடும், பூனையைப்போன்று, தேர்தல் பிரசாரமா... அரசியலா... அய்யய்யோ... ஆளை விடுங்கப்பா' என்ற நிலையிலேயே, இருவரும் இருப்பதாக கூறுகின்றனர். இதற்கிடையில், அ.தி.மு.க.,வில் சேர, நடிகர் வடிவேலு முயற்சிப்பதாகவும், அதுதொடர்பாக, அந்தக் கட்சி மேலிட தலைவர்கள் மூலம், தூது விட்டு, ஜெயலலிதாவின் சந்திப்புக்காக காத்திருப்பதாகவும், மற்றொரு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அதுமட்டுமின்றி, பா.ஜ., உட்பட, வேறு சில கட்சிகளும், நடிகர் வடிவேலுவை பிரசாரத்திற்கு அழைக்க திட்டமிட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
- நமது நிருபர் - -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE