மார்ச் முதல் வாரத்தில் ஜெ., பிரசாரம் துவக்கம்: பிறந்த நாளன்று வேட்பாளர் பட்டியலுடன் வழிபாடு: - Jayalalitha | Jayalalithaa to kickoff campaign from march first week | Dinamalar

மார்ச் முதல் வாரத்தில் ஜெ., பிரசாரம் துவக்கம்: பிறந்த நாளன்று வேட்பாளர் பட்டியலுடன் வழிபாடு:

Added : பிப் 18, 2014 | கருத்துகள் (31)
Share
அ.தி.மு.க.,வில், இம்மாத இறுதியில், வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு, மார்ச் முதல் வாரத்தில், பிரசாரத்தை துவக்க, முதல்வர்,ஜெயலலிதா திட்டமிட்டுள்ளார்.லோக்சபா தேர்தலில், தமிழகத்தில் உள்ள, 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்ற துடிப்புடன், அ.தி.மு.க., பணியைத் துவக்கி உள்ளது. எதிர்க்கட்சிகள் கூட்டணி சேர முடியாமல், சிதறுண்டு கிடப்பதால், எளிதாக வெற்றி பெற்று விடலாம் என்றும்,
மார்ச் முதல் வாரத்தில் ஜெ., பிரசாரம் துவக்கம்: பிறந்த நாளன்று வேட்பாளர் பட்டியலுடன் வழிபாடு:

அ.தி.மு.க.,வில், இம்மாத இறுதியில், வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு, மார்ச் முதல் வாரத்தில், பிரசாரத்தை துவக்க, முதல்வர்,ஜெயலலிதா திட்டமிட்டுள்ளார்.

லோக்சபா தேர்தலில், தமிழகத்தில் உள்ள, 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்ற துடிப்புடன், அ.தி.மு.க., பணியைத் துவக்கி உள்ளது. எதிர்க்கட்சிகள் கூட்டணி சேர முடியாமல், சிதறுண்டு கிடப்பதால், எளிதாக வெற்றி பெற்று விடலாம் என்றும், அந்தக் கட்சி தலைமை நம்புகிறது. எனவே, கம்யூனிஸ்ட் கட்சிகளை மட்டும், கூட்டணியில் சேர்த்து, தேர்தலை சந்திக்க, முடிவு செய்துள்ளது.மற்ற கட்சிகளுக்கு முன்பாக, அ.தி.மு.க., சார்பில் போட்டியிட விரும்புவோரிடம், விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. ஒவ்வொரு தொகுதியிலும், 50க்கும் மேற்பட்டோர் விருப்ப மனு கொடுத்தனர். அனைவரையும், நேர்காணலுக்கு அழைக்க முடியாது என்பதால், மாவட்ட செயலர்களிடம் இருந்து பரிந்துரை பட்டியல் பெறப்பட்டது.


மக்கள் செல்வாக்கு:


அதில் இடம் பெற்றிருந்தவர்கள், விண்ணப்பித்தவர்களில் தகுதியானவர்கள், தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் கல்வித்தகுதி, மக்கள் செல்வாக்கு, கட்சிப்பணி, ஜாதகம் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டனர். அத்துடன், தேர்வானவர்கள் குறித்த விவரம், உளவுத் துறை மூலம் சேகரிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், ஒரு பட்டியல் தயாரிக்கப்பட்டது. அந்தப் பட்டியலில் இடம்பெற்றவர்கள், நேர்காணலுக்கு அழைக்கப்பட்டனர். இம்மாதம், 2ம் தேதி, காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்கு, நேர்காணல் நடந்தது. நேர்காணலுக்கு வந்தவர்கள் மீது, புகார் மனுக்கள் குவியத் துவங்கின. அதைத் தொடர்ந்து, நேர்காணலுக்கு ஒருவர் அல்லது இருவரை மட்டும், ரகசியமாக அழைத்து வருகின்றனர்.

நேர்காணலுக்கு வருவோர் விவரத்தை அறிந்து, கட்சியினர், அவர்களுக்கு எதிராக புகார்களை, தலைமைக்கு அனுப்பி வருகின்றனர். இது, முதல்வரை அதிர்ச்சி அடைய வைத்து உள்ளது. தகுதி இல்லாதவர்களை பரிந்துரை செய்த மாவட்ட செயலர்களுக்கு, முதல்வர், 'டோஸ்' விட்டுள்ளார். நேற்று, ஆறு தொகுதிகளுக்கு, நேர்காணல் நடந்தது. பெரம்பலூருக்கு, மருதராஜா; பொள்ளாச்சிக்கு, கிருஷ்ணகுமார்; கோவைக்கு, நாகராஜ்; மயிலாடுதுறைக்கு, பாரதிமோகன்; நெல்லைக்கு, சுப்பையா பாண்டியன்; வடசென்னைக்கு, வெங்கடேஷ்பாபு ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தனர்.


முந்திக்கொள்ள:


நேர்காணல் முடிந்து இம்மாத இறுதியில், வேட்பாளர் பட்டியலை வெளியிடவும், மார்ச் முதல் வாரத்தில் பிரசாரத்தை துவக்கவும், முதல்வர் திட்டமிட்டுள்ளார். முதல்வர், தன் பிறந்த நாள் அன்று, காளிகாம்பாள் கோவிலில், வேட்பாளர் பட்டியலை வைத்து, வழிபாடு நடத்த உள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.கடந்த முறை, ஒவ்வொரு லோக்சபா தொகுதிக்கும், ஒன்று அல்லது இரண்டு இடங்களில் மட்டும், ஜெயலலிதா பிரசாரம் செய்தார். இம்முறை, அனைத்து சட்டசபை தொகுதிகளிலும், முதல்வர் பிரசாரம் செய்யும் வகையில், பயணத் திட்டம் வகுக்கப்படுகிறது. விருப்ப மனு வாங்குவதில், முதன்மையாக இருந்தது போல, வேட்பாளர் பட்டியல் வெளியிடுவது, பிரசாரம் துவக்குவது போன்றவற்றிலும், மற்ற கட்சிகளை முந்திக் கொள்ள, அ.தி.மு.க., முடிவு செய்து உள்ளது. மற்ற கட்சிகள், கூட்டணியை இறுதி செய்து களத்திற்கு வருவதற்கு முன், ஒரு கட்ட பிரசாரத்தை முடிக்கவும், அ.தி.மு.க., திட்டமிட்டுள்ளது.மேலும் சட்டசபை கூட்டத் தொடர் முடிந்ததும், அனைத்து அமைச்சர்களும், தொகுதிக்கு சென்று தேர்தல் பணியில் ஈடுபட வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.

- நமது நிருபர் - -

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X