பார்லிமென்டில், நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்ட, மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டில், நிதியமைச்சர் சிதம்பரம், மத்திய அரசின் திட்டங்களுக்கான முழு தொகையையும், கிட்டத்தட்ட, 3.40 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு, மாநில அரசுகளுக்கு வழங்கி விட்டார். அடுத்து வரும் மத்திய அரசு, நிதி இல்லாமல் தவிக்க போகிறது. பகுதி பகுதியாக வழங்க வேண்டிய நிதியை, மாநில அரசுகளுக்கு முழுமையாக வழங்கி, அந்நிதியை கையாளும் அதிகாரமும், மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டு இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து, இரு பிரபலங்களின் கருத்து மோதல் இதோ:
மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட், வெற்று அறிக்கையாகவும், அறிவிப்புகளாகவும் மட்டுமே உள்ளன. அரசின் திட்டங்களை செயல்படுத்த போதிய பணம் இல்லை. நிதி ஆதாரங்களுக்கு வழி வகுக்காமல், வெறும் அறிவிப்புகளாக மட்டுமே இந்த பட்ஜெட் திட்டங்கள் இருக்கும். மாநில அரசுகளுக்கு நேரடியாக, பட்ஜெட்டிலே நிதியை ஒதுக்கீடு செய்யும் முறையும் வெற்று அறிவிப்பே. கூட்டாட்சி முறை தத்துவத்திலோ, அதிகார பரவலிலோ நம்பிக்கை இல்லாத காங்கிரஸ் அரசின் போலியான கோஷம் இது. மத்திய அரசின் திட்டங்களை, மாநிலங்களில், அந்தந்த கால கட்டத்திலேயே விரைவாக செயல்படுத்த, பல ஆண்டுகளாக அதிகார பரவல் தொடர்பாக, மாநில அரசுகள் கோரிக்கை வைத்து வருகின்றன. அப்போதெல்லாம், மாநில அரசுகளும், மாநில கட்சிகளும் வைத்த இக்கோரிக்கையை, காங்கிரஸ் கட்சி ஏற்கவில்லை. 55 ஆண்டுகளாக, மத்தியில் ஆட்சி புரிந்த காங்கிரஸ் அரசு, மாநில அரசுகளுக்கு அதிகார பரவல் வழங்குவதில், எப்போதோ அக்கறை காட்டியிருக்கலாம். அப்படி செய்யாமல், தற்போது மாநில அரசு களுக்கு அதிகார பரவலுக்கு வழி செய்திருப்பது, தேர்தல் நாடகமே. வரும் லோக்சபா தேர்தலின் முடிவில், ஒருவேளை தொங்கு பார்லி மென்ட் உருவாகுமேயானால், அப்போது மாநில கட்சிகளின் ஆதரவை பெறவே, காங்கிரஸ் இப்படியொரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் கட்சியினருக்கு தோல்வி பயம் ஏற்பட்டு உள்ளதையே இது காட்டு கிறது. காங்கிரஸ் கட்சியினர், அடுத்து மத்தியில் ஆட்சி அமைக்கும் கட்சியில், இடம் பெறும் அமைச்சர்களை பலவீனப்படுத்தும் நோக்கிலும், இப்படி அறிவித்து இருக்கலாம். ஆனால், மாநில அரசுகளுக்கு, அதிகார பரவல் வழங்குவதில், பா.ஜ., உறுதியாகவே உள்ளது. ஆட்சிக்கு வந்தவுடனையே இதை செயல்படுத்த முடியுமா என்று, அன்றைய பொருளாதார நிலைமையை பரிசீலித்து முடிவு எடுக்கப்படும்.
கே.டி.ராகவன், மாநில செயலர், தமிழக பா.ஜ.,
ஒவ்வொரு மாநில அரசின் தேவையையும் கேட்டறிந்து, அதன் அடிப்படையிலேயே நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்த, மாநில அரசுகள் படிப்படியாக நிதியை பெறுவது அல்லது நேரடியாக பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்வது என, எதுவாக இருப்பினும், அதை மாநில அரசு மூலமாகவே செயல்படுத்த முடியும். அப்படி பார்க்கும் போது, இது மத்திய அமைச்சர்களின் அதிகாரத்தை எந்த விதத்திலும், குறைக்கப் போவதில்லை. மேலும், இது இடைக்கால பட்ஜெட் என்பதால் கூட, மாநிலங்களுக்கு முழு நிதியும் விரைவில் சென்றடையும் வகையில், இப்படியொரு முறையை அறிவித்து இருக்கலாம். மாறாக, அடுத்தடுத்து வரும் பட்ஜெட் அறிவிப்புகளிலும், இதே முறை தான் பின்பற்றப்படும் என, உறுதியாக கூற முடியாது. மீண்டும் காங்கிரஸ் ஆட்சியை அமைத்தால் கூட, அப்போதைய பட்ஜெட் அறிவிப்பில், இந்த முறை மீண்டும் அறிவிக்கப்படும் என, சொல்ல முடியாது. அடுத்து ஆட்சி அமைக்கப் போகும், கட்சி எடுக்கும் கொள்கை முடிவின்படி அது அமையும். விரைவில், லோக்சபா தேர்தலை சந்திக்கவுள்ள நிலையில், அந்தந்த மாநில மக்களிடம், குறிப்பிட்ட மத்திய அரசு திட்டங்களுக்கு, அதிகளவில் நிதி ஒதுக்கியுள்ளோம் எனக்கூறி ஓட்டுகளை பெற, இந்த அறிவிப்பு உதவும். அதன் அடிப்படையில் கூட, மத்திய அரசு அறிவித்து இருக்கலாம். மேலும், தற்போது மத்தியில் ஆளும் எந்தவொரு கட்சியும், மாநில கட்சிகளுடன் கூட்டணி அமைத்தே ஆட்சி செய்ய முடிகிறது. மாநில கட்சிகளின் ஆதிக்கம், மத்தியில் அதிகரித்து உள்ளது. ஆகையால், மாநில அரசுகளின் நிர்பந்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டிய சூழ்நிலையில் உள்ளோம். மாநில அரசுகளின் நீண்ட கால கோரிக்கையை, தற்போது நிறைவேற்றியுள்ளோம். நிதி ஆதாரம் இல்லாமல், எந்த திட்டத்தை அறிவிப்பது இல்லை. வரி வருவாய் மூலம் திட்டங்களை செயல்படுத்துவோம். கூடுதல் தேவை இருப்பின், கடன் பெறப்படும். மற்ற படி, திட்டமிடப்படாமல், எந்த திட்டம் குறித்தும் அறிவிப்பதில்லை.
ஞானசேகரன், பொதுச் செயலர், தமிழக காங்கிரஸ்
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE