புதுடில்லி: வெளிநாடுகளிலிருந்து, சட்ட விரோதமாக நன்கொடை வசூலிப்பதாக, 'ஆம் ஆத்மி' கட்சிக்கு எதிராக, புகார் கூறப்பட்டுள்ள நிலையில், மொபைல் போன் மற்றும் இ.எம்.ஐ., மூலம் நன்கொடை வசூலிக்க, அந்த கட்சி திட்டமிட்டுள்ளது.
ராஜினாமா:
டில்லியில் ஆளும் கட்சியாக இருந்த ஆம் ஆத்மி, சமீபத்தில், ஆட்சியிலிருந்து வெளியேறியது. அந்த கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். தற்போது, டில்லியில், ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டு உள்ளது.
அம்பலப்படுத்த...:
முன்னதாக, விதிமுறைகளை மீறி, வெளிநாடுகளில் இருந்து நன்கொடை வசூலித்ததாக, ஆம் ஆத்மி கட்சிக்கு எதிராக, கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதனால், நன்கொடை வசூலிப்பதில், புதிய நடைமுறையை அமல்படுத்த, அந்த கட்சி திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து, ஆம் ஆத்மி கட்சியின் நிதிப் பொறுப்பாளர் குமார் கவுரவ் கூறியதாவது: எங்கள் கட்சிக்கு, சாதாரண பொதுமக்களும், தங்களால் இயன்ற, சிறிய அளவிலான நன்கொடைகளை செலுத்த விரும்புகின்றனர். அதற்கான வாய்ப்பு இல்லாததால், அவர்களால் நன்கொடை அளிக்க முடியவில்லை.
பண பரிமாற்றம்:
இதற்காக, எளிய நடைமுறைகளை அமல்படுத்த முடிவு செய்துள்ளோம். இதன்படி, மொபைல் போன்களிலிருந்து, எங்கள் கட்சியின் வங்கி கணக்கிற்கு, பணப் பரிமாற்றம் செய்யும் நடவடிக்கையை துவங்க திட்டமிட்டுள்ளோம். இதற்காக, மொபைல் போன் சேவை வழங்கும், இரண்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து உள்ளோம். முக்கிய நகரங்களில் உள்ள, எங்கள் கட்சி அலுவலகங்களில், தவணை முறையில் நன்கொடை செலுத்தும், இ.எம்.ஐ., திட்டமும் நடைமுறைப்படுத்தப்படும். அதுபோல், கட்சி அலுவலகங்களில், 'ஸ்வைப்' மெஷின்கள் வைக்கப்படும். பொதுமக்கள், தங்களிடம் உள்ள கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை, இந்த மெஷினில் தேய்த்து, நன்கொடை செலுத்தலாம். இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE