காந்திநகர்: ''நான், பங்கேற்கும் பொதுக் கூட்டங்களுக்கு சேவை வரி வசூலிப்பதன் மூலம், நாட்டின் வருவாயை பெருக்குவதற்கு, நிதி அமைச்சர் சிதம்பரம், தீவிரமாக முயற்சித்து வருகிறார்,'' என, பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடி, கிண்டலடித்துள்ளார்.
பா.ஜ., பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான, நரேந்திர மோடி, குஜராத் மாநிலம், காந்திநகரில் நேற்று நடந்த கருத்தரங்கில் பேசியதாவது:
சிறிய அளவில் நுழைவு கட்டணம்:
பா.ஜ., பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டபின், நாடு முழுவதும் சென்று, பிரசாரம் செய்து வருகிறேன். நான் பங்கேற்கும் கூட்டங்களுக்கு வருவோரிடம், ஒரு சில இடங்களில், சிறிய அளவில் நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில், நான் பங்கேற்கும் கூட்டங்களுக்கு, சேவை வரி செலுத்த வேண்டும் என, மத்திய கலால் வரித் துறை சார்பில், பா.ஜ., தலைமைக்கு, 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. நாட்டின் வருவாயை பெருக்கும் வகையில், என் கூட்டங்களுக்கு சேவை வரி வசூலிப்பதற்காக, நிதி அமைச்சர் சிதம்பரம் தீவிரமாக முயற்சித்து வருகிறார் என்பது, இதன் மூலம் தெரியவருகிறது. என் பொதுக் கூட்டங்கள், நாட்டின் வருவாயை பெருக்குவதற்கு, ஒரு காரணமாக இருக்கிறது என்பதற்காக, மகிழ்ச்சி அடைகிறேன். இவ்வாறு, மோடி பேசினார்.
வார்த்தை போர்:
இதற்கிடையே, நரேந்திர மோடிக்கும், சிதம்பரத்துக்கும் இடையே, கடந்த சில நாட்களாக நடந்து வரும், வார்த்தை போர், உச்சக் கட்டத்தை எட்டியுள்ளது. நிதி அமைச்சர் சிதம்பரம் தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டை, நரேந்திர மோடி, கடுமையாக விமர்சித்திருந்தார். இதற்கு பதிலடி கொடுத்த சிதம்பரம், 'மோடியின் பொருளாதார அறிவை, ஒரு ஸ்டாம்பில் எழுதி விடலாம்' என, கூறியிருந்தார். இதற்கு, மோடி, திரும்ப பதிலடி கொடுத்திருந்தார். அதில்,'பொருளாதாரத்தை கரைத்து குடித்த பிரதமரும், நிதி அமைச்சரும், சிரமப்பட்டு உழைத்துள்ளனரா என்பதை, மக்கள் முடிவு செய்வர்' என, மோடி கூறியிருந்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE