அமேதி: முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலையாளிகளை விடுதலை செய்வதாக, தமிழக அரசு தெரிவித்துள்ளது, தனக்கு வருத்தம் அளிப்பதாக, காங்., துணை தலைவர் ராகுல் தெரிவித்துள்ளார்.
காங்., துணை தலைவரும், முன்னாள் பிரதமர் ராஜிவின் மகனுமான, ராகுல், உ.பி., மாநிலம் அமேதியில் நடந்த, கட்சி கூட்டத்தில் பேசியதாவது: எப்போதுமே, மரண தண்டனைக்கு எதிரானவன் நான். என் தந்தையை கொலை செய்தவர்களுக்கு, தூக்கு தண்டனை விதிப்பதால், அவர், உயிருடன் திரும்பி வரப் போவது இல்லை. ஆனாலும், இந்த நாட்டின் பிரதமராக இருந்தவரை கொலை செய்தவர்களையே, தண்டிக்காமல் விட்டால், சாதாரண மக்களுக்கு, அரசிடம் எப்படி நீதி கிடைக்கும்? தமிழக அரசின் முடிவு, எனக்கு வருத்தம் அளிக்கிறது. இது, என் இதயத்தில் இருந்து வரும் வார்த்தைகள். இது, என் தந்தை கொலை தொடர்பான விஷயம் என்பதற்காக, இப்படி கூறவில்லை. இது, யாருடைய, தனிப்பட்ட விஷயமும் இல்லை. இந்த நாடு தொடர்பான விஷயம். இவ்வாறு, அவர் கூறினார்.
காங்., செய்தி தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கூறுகையில்,''தமிழக அரசு எடுத்துள்ள இந்த முடிவு, பொறுப்பற்றது. சரியாக ஆய்வு செய்யாமல், மக்களை கவரும் நோக்கத்துடன் எடுக்கப்பட்டுள்ளது. தண்டனை குறைப்புக்கும், விடுதலை என்பதற்கும், அடிப்படை வேறுபாடுகள் உள்ளன. தமிழக அரசின் முடிவை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் காங்., கட்சி சார்பில் முறையீடு செய்யப்படுமா என்பதை, தற்போது கூற முடியாது,'' என்றார். மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே கூறுகையில்,''ராஜிவ் கொலையாளிகளை விடுதலை செய்வது தொடர்பாக, தமிழக அரசிடமிருந்து, மத்திய அரசுக்கு எந்த கடிதமும் வரவில்லை,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE