அரசு நிர்வாகத்தை செம்மையாக நடத்திச் செல்வதே, மத்திய, மாநில அரசுகளின் பணி; தொழில் புரிவது அல்ல. ஆனால், தமிழகத்தில், "அம்மா' உணவகம்; " அம்மா' குடிநீர்; "அம்மா' மருந்தகம் என, பல வகையிலும், மக்களுக்கு சேவை என்ற பெயரில், வியாபாரம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில், நேற்று சமர்ப்பிக்கப்பட்ட, சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில், புதிதாக, "அம்மா' தியேட்டர், "அம்மா' மகளிர் விடுதி, "அம்மா' வாரச் சந்தை போன்றவை துவக்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் தொழில் செய்ய விடாமல், அரசே இப்படி செய்யலாமா என, பொது மக்கள் பலரும் கேள்வி எழுப்புகின்றனர். இதுகுறித்த, இரு பிரபலங்களின் கருத்து மோதல், இதோ:
சென்னை மாநகரிலுள்ள குப்பையை அகற்ற, ஒவ்வொரு பகுதியிலும் குப்பை கிடங்கு அமைத்தார், மேயர். ஆனால், குப்பை அகற்றுவதை, முழுமையாக செய்ய முடியவில்லை. இப்போது பூமிக்கு அடியில், குப்பையை புதைப்போம் என்கிறார். குப்பையை பூமிக்கு அடியில் புதைத்தால், நிலத்தடி நீர் மாசுபடும் என, மேயருக்கு தெரியுமா என, தெரியவில்லை. சென்னை மக்களை கடுமையாக பாதிக்கும் கொசுவை ஒழிக்காமல், கொசுவலை வழங்கப்படும் என்றார். பின்னர், நொச்சி செடி வளர்த்து கொசுக்களை ஒழிப்போம் என, அறிவித்தார். இவையெல்லாம் நடக்கவும் இல்லை; கொசு ஒழிந்தபாடும் இல்லை. கடந்த இரண்டரை ஆண்டுகளில், 126 அறிவிப்புகளை மேயர் வெளியிட்டார். அதில், ஐந்து, ஆறு அறிவிப்புகள் தான் நிறைவேறியுள்ளன. சென்னையின் முக்கிய பகுதிகளில், பாலங்கள் கட்டுவதாக அறிவிப்பு வெளியாகி, இரண்டரை ஆண்டுகளில், திட்ட சாத்தியக் கூறு அறிக்கையே இன்னும் தயாராக வில்லை. பாலங்கள் எப்போது கட்டி முடிப்பார்கள் என, தெரியவில்லை. இந்த நிலையில், திரையரங்கு கட்டுவேன் என்கிறார்.
மாநகராட்சி பகுதியில் திரையரங்கு கட்டுவதற்கு எங்கு இடம் உள்ளது. மாநகர் பகுதிகளில் உருவாக்கப்பட்டுள்ள பூங்காக்கள் தான், தற்போது இருக்கும் காலி இடங்கள். அப்பகுதிகளில் தியேட்டர் கட்டப் போகிறார்களா? அ.தி.மு.க., தலைமையிலான மாநகராட்சி நிர்வாகம், கவர்ச்சி அறிவிப்புகளை வெளியிட்டு, மக்களை ஏமாற்ற நினைக்கிறது. அதன் வெளிப்பாடுதான் திரையரங்குகள் கட்டுவது, விடுதிகள் கட்டுவது, பொதுமக்களுக்கு மலிவு விலையில் குடிநீர் வழங்குவது போன்ற திட்டங்கள். ஆட்சிக்கு வந்து செம்மையாக நிறைவேற்று வார்கள் என்றால், அரசாங்கம் மூலமாக, வியாபாரம் செய்ய முயல்கிறார் முதல்வர் ஜெயலலிதா. ஓட்டுக்காக, இப்படி எல்லாம் செய்ய முயல்வதால், மக்கள் ஏமாந்துவிட மாட்டார்கள். இதன் தொடர்ச்சியாக, விரைவில், "அம்மா நாடு' என்ற அறிவிப்பை கூட, அ.தி.மு.க.,வினர் வெளியிட்டால், ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
மா. சுப்ரமணியன், முன்னாள் மேயர், தி.மு.க.,
சென்னை மாநகராட்சி மூலம் அறிவித்த திட்டங்கள், அறிவிக்கப்படும் திட்டங்கள் அனைத்தும், முதல்வர் ஜெயலலிதாவின் ஒப்புதல் பெற்றே அறிவிக்கப்படுகின்றன. சென்னை மக்களின், குறிப்பாக ஏழை, நடுத்தர மக்களின் தேவைகளை, நன்கு அறிந்த முதல்வர், மாநகராட்சி திட்டங்களை செயல்படுத்த அனுமதி அளிக்கிறார். அம்மா உணவகம், எத்தனை ஏழை மக்களின் வயிற்றை நிரப்பி, வாழ வைக்கிறது என்பதை நாடு அறியும். அதுபோலவே, 2014 - 15ம் ஆண்டிற்கான, மாநகராட்சி பட்ஜெட்டில், "அம்மா' திரையரங்கு, "அம்மா' விடுதிகள், குறைந்த விலையில், "அம்மா' குடிநீர் கேன் ஆகியன வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. குடும்ப செலவில், குடிநீருக்காக கணிசமான தொகையை செலவு செய்கின்றனர். இச்செலவை குறைக்கும் வகையில், தரமாக, அதேநேரத்தில், மலிவு விலையில், குடிநீர் கேன்களை அளிக்க திட்டமிட்டுள்ளோம். சென்னை வாசிகள் மட்டுமில்லாமல், சென்னைக்கு நாள்தோறும் வந்து செல்லும் ஆயிரக் கணக்கான மக்கள் தங்குவதற்கும், பொழுது போக்குவதற்கும் பெரும் தொகை செலவிடுகின்றனர். இச்செலவை குறைக்கும் வகையில், திரையரங்கு மற்றும் விடுதிகளை கட்டுகிறோம்.
இவற்றுக்கான இடம் மாநகராட்சி பகுதிகளில் இருக்கிறதா என்றால், அதற்கான ஆய்வுகள் மேற்கொண்டு, உரிய இடங்கள் கண்டறியப்படும். மக்களை கவரவும், ஓட்டு வங்கி அரசியலுக்கும், திட்டங்களை அறிவிக்கிறோம் என்பது தவறு. மக்களுக்கு தேவையான, அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தித் தருவது ஒரு அரசின் கடமை. அதை நிறைவேற்றும் வகையில் தான், இத்திட்டங்களை அறிவித்து உள்ளோம்.
சென்னை மாநகராட்சி இதுவரை செயல்படுத்திய திட்டங்கள் அனைத்தும், மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இந்த வெற்றியை தாங்கிக் கொள்ள முடியாதவர்கள், தேவையற்ற விமர்சனங்களை மாநகராட்சி நிர்வாகத்தினர் மீது சுமத்துகின்றனர். எங்களது செயல்பாடுகளை ஏற்று, அதற்கு ஆதரவு அளிக்க வேண்டியவர்கள் மக்கள். அவர்களுக்கு எங்கள் செயல்பாட்டில் முழு திருப்தி உள்ளது.
பெஞ்சமின் ,சென்னை மாநகர துணை மேயர், அ.தி.மு.க.,
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE