ராஜிவ் கொலை வழக்கில் சிக்கிய மூவர், தங்களுக்கான தண்டனையை குறைக்க வேண்டும் எனக் கூறி, தாக்கல் செய்த மனுவை விசாரித்து, உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது. அதில், மூவருக்கும், மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. அவர்களை விடுதலை செய்வது குறித்து, மத்திய - மாநில அரசுகள் முடிவெடுக்கலாம் எனவும், தீர்ப்பில் நீதிபதிகள் குறிப்பிட்டிருந்தனர். தீர்ப்பு வெளியான அடுத்த நாளே, தமிழக அமைச்சரவையைக் கூட்டி முடிவெடுத்து, நளினி, சாந்தன், முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட ராஜிவ் கொலையாளி கள் ஏழு பேரையும், விடுதலை செய்யப் போவதாக அறிவித்தார், தமிழக முதல்வர். இந்த விஷயத்தில் மட்டும் முதல்வர் இவ்வளவு அவசரம் காட்டுவது ஏன் என்பது குறித்து, அரசியல் பிரபலங்கள் இருவர், வைத்த மாறுபட்ட கருத்துக்கள் இங்கே:
தேர்தல் முன்னிட்டு, தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில், தூக்கு தண்டனை பெற்ற அ.தி.மு.க.,வினரை விடுதலை செய்ய, இந்த வழக்கை முன் மாதிரியாக வைத்துக் கொள்வது போன்றவையே, ராஜிவ் கொலையாளிகளை விடுதலை செய்வதில், முதல்வர் ஜெயலலிதா அவசரம் காட்டுகிறார். உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், ராஜிவ் கொலையாளிகளை குற்றமற்றவர்கள் எனக் கூறவில்லை. தண்டனை தான் குறைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமரை கொலை செய்த வர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை, ஆயுள் தண்டனையாக உச்ச நீதிமன்றம் குறைத்துள்ளது. ஆயுள் தண்டனை என்பது, அவர்கள் உயிர் பிரியும் வரை, சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்பதும், தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், மேலும் அவர்களுக்கு சலுகை அளிக்கும் வகையில், எவ்வித சட்ட நடைமுறைகளையும் பின்பற்றாமல், மத்திய அரசு, மூன்று நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என, கெடு விதித்து முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுத்துள்ளார். அவரது தான்தோன்றித்தனமான செயல்கள், எதிர்கால சமூகத்தை கடுமையாக பாதிக்கும். எந்த விதமான கொடூர குற்றங்களைச் செய்தாலும், தப்பித்து விடலாம் என்ற எண்ணம், மக்கள் மத்தியில் பரவிவிடும். ஆனால், இதையெல்லாம் பற்றி கவலையில்லாமல், லோக்சபா தேர்தலில், தான் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில், ராஜிவ் கொலையாளிகளை விடுவிக்க ஜெயலலிதா முனைந்துள்ளார். இந்த நடவடிக்கைக்கு, மக்கள் மத்தி யில் பெரும் எதிர்ப்பலை ஏற்பட்டு உள்ளது. இதில், கட்சி வேறுபாடின்றி, ராஜிவ் என்ற நாட்டின் தலைமகனை கொலை செய்த வழக்கில், சிறிது காலம் சிறையில் இருந்துவிட்டு, வெளிவந்து விட்டார்களே. அப்படியானால், இவ்வளவு தான் தண்டனையா என, நீதித் துறை மீதே சந்தேகப்படும் அளவுக்கு, ஜெயலலிதாவின் நடவடிக்கை அமைந்து உள்ளது.
ஜோதிமணி, செயலர், மகளிர் காங்கிரஸ்
உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டு, தமிழக முதல்வர் எடுத்த நடவடிக்கையை, லோக்சபா தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு எடுத்த நடவடிக்கை என்பது அபத்தம், ஆதாரமற்ற குற்றச்சாட்டு. தமிழக அரசு உரிய நடைமுறைகளை பின்பற்றாமல், அவசரப்பட்டு, ராஜிவ் கொலையில் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்ய முன் வந்துள்ளது என்பதில், அடிப்படை இல்லை. முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்கு தண்ட னையை, ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என, தமிழக சட்டபையில் முதல்வர் தீர்மானம் நிறைவேற்றினார். அதன்பின், அதற்காக சிறு துரும்பைக் கூட, மத்திய அரசு கிள்ளிப்போடவில்லை. ஆனால் சமீபத்திய உச்ச நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து தான், ராஜிவ் கொலையில் சிறையில் இருக்கும், ஏழு பேரை விடுவிக்கும் அறிவிப்பை, முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ளார். இதில், எந்த அவசரத்தையும் அவர் காட்டவில்லை. மாறாக, தமிழக அரசின் நடவடிக்கையை தடை செய்யவேண்டும் என, அவசர அவசரமாக மத்திய அரசு தான், உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டு, தடையைப் பெற்றுள்ளது. இச்செயல், தமிழர்களுக்கு விரோதமானது. 65 நாடுகளில் வாழும் தமிழர்கள், ஒட்டு மொத்தமாக, ஜெயலலிதாவின்நடவடிக்கையை பாராட்டுகின்றனர். இதையெல்லாம் பொறுத்துக்கொள்ள முடியாமல், ஜெயலலிதாவின் செயல்களுக்கு தவறான அர்த்தங்களை கற்பிக்கின்றனர். மக்கள் மனதில் வாழும் அவர், லோக்சபா மட்டுமல்ல, எந்தத் தேர்தல் வந்தாலும், அதில் வெற்றி பெறக் கூடிய அளவுக்கு, மக்கள் செல்வாக்கைப் பெற்றுள்ளார். தேர்தல் எப்போது நடந்தாலும், வெற்றி வாகை சூடப்போகிறவர் அவர் தான்.
தமிழர்களுக்கு கிடைக்கும் நியாயத்தை தடுக்க, எதிர் வினையாற்றுபவர்களே, தேவையற்ற பொய் பிரசாரங்களை கட்டவிழ்த்து விடுகின்றனர். இதை, தமிழர்கள் ஏற்க மாட்டார்கள்.
நாஞ்சில் சம்பத், துணை கொள்கை பரப்பு செயலர், அ.தி.மு.க.,
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE