நாமக்கல்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மார்ச், 2ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக, நாமக்கல் மாவட்ட தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர், தீர்மானம் நிறைவேற்றினர்.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின், நாமக்கல் மாவட்ட கிளை சார்பில், பொதுக்குழுக் கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் அண்ணாதுரை தலைமை வகித்தார்.
கூட்டத்தில், ஆறாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி, மத்திய அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கும் ஊதியத்தை, தமிழக இடைநிலை ஆசிரியர்களுக்கும் வழங்க வேண்டும்.
அரசு நடுநிலைப்பள்ளிகளில், தமிழ் மற்றும் வரலாறு பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் ஒட்டுமொத்த பணிக்காலத்தை கணக்கிட்டு, தேர்வு நிலை மற்றும் சிறப்பு நிலை வழங்க வேண்டும். ஆசிரியர் தகுதி தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும்.
பகுதிநேர ஆசிரியர்களை, முழுநேர ஆசிரியர்களாக நிலை உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும், 25ம் தேதி, பள்ளிகளில் கறுப்பு பேட்ஜ் மற்றும் கோரிக்கை அட்டை அணிந்து உள்ளிருப்பு வேலை நிறுத்தம் செய்யப்படும். வரும், 26ம் தேதி, ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு அளித்து, ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் செய்ய வேண்டும். வரும், மார்ச், 2ம் தேதி, காலை, 11 மணிக்கு, நாமக்கல் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகம் முன்பு, கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
மாவட்ட செயலாளர் நடேசன், பொருளாளர் சேகர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE