நாமக்கல்: "கால்நடை வளர்ப்போர், அதற்கு உணவு கொடுக்கும் போது, பீட்ரூட் உள்ளிட்ட காய்கறிகளை, அப்படியே கொடுக்க வேண்டாம். அவ்வாறு கொடுத்தால், மாடுகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு, உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்படும்' என, நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய சிகிச்சைத் துறை பேராசிரியர் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கை:
கரூர் அடுத்த தளவாய்பாளையத்தை சேர்ந்த சுப்ரமணியன் என்பவர், தனது ஜெர்சி கலப்பின கறவை மாடு, வயிறு உப்பிசம், வாயில் உமிழ்நீர், கழுத்து வீக்கம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு, நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து வந்தார்.
மாட்டை பரிசோதனை செய்தபோது, அதன் தொண்டை உணவுக்குழியில் அடைப்பு ஏற்பட்டது தெரியவந்தது. பின்னர், மாட்டின் வாயில், கையை விட்டு பார்த்தபோது, அதன் தொண்டை உணவு குழாயில், பெரிய அளவிலான பீட்ரூட் இருந்தது. அதனை வெளியே எடுத்தபின், மாடு இயற்கையான நிலைக்கு திரும்பியது.
அதேபோல், திருச்செங்கோடு அடுத்த சித்தாளந்தூரைச் சேர்ந்த வடிவேல் என்பவரின் கோல்ஸ்டியன் - பிரிசியன் என்ற கலப்பின மாடுக்கு, தொண்டையில் அடைப்பு ஏற்பட்டபோது, அதன் வாயிலும் பீட்ரூட் இருந்தது.
எனவே, கால்நடை வளர்ப்போர், காய்கறிகளில் பீட்ரூட், கேரட், கத்திரிக்காய், குச்சிக்கிழங்கு, மாங்காய், மாங்கொட்டை, பனங்கொட்டை, சப்போட்டா ஆகியவற்றை மாடுகள் உண்ணும்போது, தொண்டையில் அடைபடும். அதனை தவிர்க்க, காய்கறி உள்ளிட்ட உணவு பொருட்களை தனித்தனியாக வெட்டி, சிறுசிறு துண்டுகளாக தர வேண்டும். கவனக்குறைவாக செயல்பட்டால், மாடுகளின் உயிருக்கு, ஆபத்தான சூழ்நிலை உருவாகும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE