ஆட்சியில் இருக்கும்போது, மக்களுக்கு இலவசங்களைக் கொடுத்து, அவர்கள் மூளையை மழுக்கி, அதன்மூலம் தேர்தலுக்கு தேர்தல் ஓட்டு வாங்குவது என்பது, கலிகால வழக்கமாக இருக்கிறது. இப்படி இலவசங்களை வாங்கி வாங்கியே பழக்கப்பட்டு போய்விட்ட மக்கள், தேர்தல் நேரத்தில் ஓட்டுக்கும் காசு வாங்கிக் கொண்டு, ஜனநாயக கடமையாற்றும் சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. மக்களின் இந்த யாசிக்கும் எண்ணத்தை உடும்புபிடியாக பிடித்துக் கொண்டிருக்கும், அரசியல் கட்சிகளும் தேர்தல் என்றால், இலவச அறிவிப்புகளை வெளியிடுவதிலும் போட்டி போடுகின்றன. மொத்தத்தில் நாட்டில் மக்களை சோம்பேறிகளாக்கி, எல்லாவிதங்களிலும் மக்கள் வளர்ச்சியடையாமல் பார்த்துக் கொள்ளும் அரசாங்கங்களின் இந்த நடைமுறைகள் குறித்து, மாறுபட்ட சிந்தனைகளோடு, அரசியல் பிரபலங்கள் இருவர் நடத்திய கருத்து மோதல்கள் இங்கே:
இலவசங்கள் தமிழர்களின் சுயமரியாதைக்கு பங்கம் ஏற்படுத்துவதோடு நிற்பதில்லை, எதிர்கால தமிழ் சமுதாயத்தின் நோக்கங்களையே பாழடிக்கிறது.
ஏற்கனவே ஆண்ட அரசுகளால் அளிக்கப்பட்ட இலவசங்களால், தமிழர்களின் வாழ்வாதாரம் மேம்பட்டதா என்றால், நாளுக்கு நாள், அன்றாட வாழ்க்கை நடத்தவே திண்டாடும் நிலையே மக்களிடம் நீடிக்கிறது. நாட்டில் உள்ள மொத்த உழைப்பை தருவதில், 50 சதவீதத்தினர் இளைஞர்கள். இவர்களை சோம்பேறிகள் ஆக்கியதோடு, குடிகாரர்களாக மாற்றி வருகின்றனர்.
நாட்டின் மொத்த பட்ஜெட்டில் 40 சதவீதத்தை இலவச திட்டங்களுக்காக செலவிடுகின்றனர். இத்தொகையை, மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த பயன்படுத்துவதில்லை. மாவட்டங்கள் தோறும், சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளை, மருத்துவக் கல்லூரிகளோடு அமைத்தால், மருத்துவக் கல்வியோடு, ஏழை, நடுத்தர மக்களின் சுகாதாரத்தை மேம்படுத்த முடியும்.
புதிய தொழில்கள் துவங்க முதலீடாகவும், தொழில் பயிற்சியையும் அளித் தால், ஒவ்வொரு மாவட்டத்தின் வளத்துக்கு ஏற்ப தொழில்களைத் துவங்கி, வேலைவாய்ப்பை பெருக்க முடியும். இதன்மூலம், பல தலைமுறைகளுக்கு வாழ்க்கைத் தரத்தை அதிகரிக்க முடியும். இதைத்தான் எங்கள் கட்சியின் தலைவர் விஜயகாந்தும் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருக்கிறார்.
ஒருவனுக்கு மீனை கொடுப்பதை விட, அவனுக்கு மீன் பிடிக்க தூண்டில் கொடுத்தால், யாரையும் எதிர்பார்க்காமல், தனக்குத் தேவையான உண வை, பொருளை நாள்தோறும் அவனே தேடிக் கொள்வான் என, சொல்வார்கள். இதற்கு, தமிழக அரசு தயாராக இல்லை. இந்நிலை நீடித்தால், "தினமலர்' ஏற்கனவே சுட்டிக் காட்டியது போல், சோவியத் யூனியனுக்கு ஏற்பட்ட நிலை, தமிழகத்துக்கும் ஏற்படும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
சேகர், எம்.எல்.ஏ., - தே.மு.தி.க.,
இலவச திட்டங்கள் மக்கள் வரிப் பணத்திலிருந்து செயல்படுத்தப்படுபவை. எனவே, இலவச திட்டங்கள் மக்களின் உரிமை. அது, சலுகையல்ல. இந்தியாவில், 16 மாநிலங்கள், "சேவை பெறும் உரிமை சட்டம்' மூலம், இலவச திட்டங்களைப் பெறும் உரிமையை மக்களுக்கு அளித்துள்ளன. தமிழகத்திலும், அதுபோன்ற சட்டத்தை கொண்டு வர வேண்டும் என, வலியுறுத்தி வருகிறோம். இலவச திட்டங்கள் சில ஆண்டுகளாகத் தான் நடைமுறைக்கு வந்துள்ளன. அதற்குமுன், இத்திட்டங்கள் இல்லை. அப்போது, மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்திருந்ததா? இலவச திட்டங்கள் வந்ததால், வாழ்க்கைத் தரம் குறைந்து விட்டதா?
சமூகத்தில் அடித்தட்டில் உள்ள மக்களை கை தூக்கிவிட, இலவச திட்டங்கள் அவசியம். தமிழக அரசின் மடிக் கணினி திட்டம், ஏழை, நடுத்தர மாணவர்களின் கல்வியை உயர்த்தியுள்ளது. இலவசங்களை, மக்கள் அனைவருக்கும் அளிப்பதில்லை. ரேஷன் கடையில் அரிசி வாங்கும் மக்களுக்குத் தான், இலவச பொருள்கள் அளிக்கப்படுகின்றன. கல்வி, தொழில், அடிப்படை கட்டமைப்பு போன்றவற்றுக்கு நிதி பற்றாக்குறை நிலவுகிறது. இதனால், அத்துறைகளில் வளர்ச்சி ஏற்படவில்லை என்றால், அத்துறைகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என, கோரிக்கை விடுக்கலாம். அதற்கான நடவடிக்கையை மத்திய, மாநில அரசுகளும் எடுக்க வேண்டும். இலவசங்கள் கொடுப்பதால், வளர்ச்சி திட்டங்கள் முடங்கிவிட்டன என, கூறுவதை ஏற்க முடியாது. அதேபோல், இலவசங்கள் மக்களின் சுயமரியாதையை இழக்கச் செய்கிறது என்ற வாதத்தையும் ஏற்க முடியாது. இலவசங்கள் பெறுவதற்கும், சுயமரியாதைக்கும் தொடர்பில்லை. இலவசம் வாங்குவதால், ஒருவனை தரக்குறைவாக நடத்த முடியுமா? வசதி படைத்தவர்களை விட, ஏழைகளிடம் தான், சுயமரியாதை மேலோங்கி இருக்கிறது. இதை, யதார்த்த சமூகத்தில் கண்கூடாக பார்க்க முடியும்.
பாலபாரதி, எம்.எல்.ஏ., - மார்க்சிஸ்ட்
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE