மாநிலத்தின் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க வேண்டியது, ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களின் பொறுப்பு. குற்றங்கள் நடக்காமல் தடுக்க, காவல் துறையை சிறப்பாக செயல்பட வைப்பது அரசின் கடமை. ஆனால், சமீபத்தில், சட்டசபையில், தே.மு.தி.க.,வை சேர்ந்த, சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர், மோகன்ராஜ் பேசிய போது, "மாநிலத்தில் குற்ற நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன' என, குற்றம் சுமத்தினார். அதற்குப் பதில் அளித்த, முதல்வர் ஜெயலலிதா, "குற்றங்கள் நடைபெறாத நாடே கிடையாது; ஊரே கிடையாது. குற்றங்களின் விகிதம் குறைந்துள்ளதா என்று தான் பார்க்க வேண்டும்' என, பதில் அளித்தார். முதல்வரின் இந்தப் பேச்சு நியாயமானதா, அரசு நிர்வாகத்தை கவனிக்கும் அவர், இப்படிப்பட்ட பதிலை சொல்லலாமா என்பது தொடர்பாக, முதல்வருக்கு ஆதரவாகவும், அவருக்கு எதிராகவும், இரு பிரபலங்கள் முன்வைத்த வாதங்கள் இதோ:
"நான் ஆட்சிக்கு வந்தால், குற்றங்களே நடக்காது. இரும்புக் கரம் கொண்டு ஒடுக்குவேன்' என, ஜெயலலிதா வாக்குறுதி அளித்ததால், மக்கள் அவருக்கு ஓட்டுப் போட்டனர். ஆட்சிக்கு வந்த ஓரிரு நாட்களில், "நான் ஆட்சிக்கு வந்துவிட்டதால், கொள்ளையர்கள் எல்லாம், ஆந்திராவுக்குப் ஓடி விட்டனர்' என்றும் கூறினார்.
ஆனால், கடந்த மூன்றாண்டுகளில், தமிழகத்தில், கொலை கொள்ளை, பாலியல் பலாத்காரம் போன்ற குற்றங்கள் நடக்காத நாளே இல்லை என, சொல்லும் அளவுக்கு, குற்றங்கள் பெருகிவிட்டன. பெண்கள் தனியாக நடந்து செல்ல முடியவில்லை. வீடு புகுந்து கொள்ளை அடிப்பது சாதாரணமாகி விட்டது. வாக்கிங் செல்பவர்கள், வீடு திரும்பும் வரையில் உத்தரவாதம் இல்லை. இதையெல்லாம் சுட்டிக்காட்டி, சட்டம் - ஓழுங்கை சீர் செய்யவேண்டும் என, எதிர்க்கட்சிகள், பத்திரிகைகள், பொதுமக்கள் கூறினால், அதுகுறித்து நடவடிக்கை எடுப்பேன் என, அரசு உறுதி அளிக்க வேண்டும். ஆனால், முதல்வர் ஜெயலலிதா, குற்றங்கள் நடக்காத நாடே இல்லை என, சப்பைக் கட்டு கட்டினால், அவர் ஆட்சி செய்ய தகுதி
அற்றவர் என்பது உறுதியாகி உள்ளது. தி.மு.க., ஆட்சியில் சிறு குற்றம் நடந்தால் கூட, காவல் துறையின் ஈரல் அழுகிவிட்டது என, கண்டனங்களைத் தெரிவித்தார். இப்போது, தமிழக காவல் துறையின் நிலை என்ன? தமிழக அரசும், நிர்வாகமும் காவல் துறையை நம்பித் தான் செயல்படுகின்றன. அதனால், காவல் துறையினர் தவறு செய்தால், அதைக் கண்டிக்க ஜெயலலிதாவுக்கு துணிவு இல்லை. குற்றங்கள் குறைவாக உள்ளது என, கூறுங்கள் என்கிறார். அப்படியானால், கொலை செய்வதற்கு பதில், கை, கால்களை வெட்டி விட்டுச் செல்லுங்கள் என, முதல்வரே சொல்கிறாரா என்ற சந்தேகம் எழுகிறது. தவறு செய்யும் போலீசாரை கண்டிக்க வேண்டும். குற்றங்களைத் தடுக்க, பாரபட்சமற்ற நடவடிக்கையை எடுக்க வேண்டும். இதையெல்லாம் முதல்வர் ஜெயலலிதா செய்வாரா என்பது தான் இப்போதைய கேள்வி?
கம்பம் ராமகிருஷ்ணன், எம்.எல்.ஏ., - தி.மு.க.,
காவல் துறை மூலம் நிர்வாகம் நடக்கிறது. அதனால், காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க, முதல்வர் தயங்குகிறார் என்பதெல்லாம் ஆதாரமில்லாமல் கூறப்படுபவை. தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும், தயவு தாட்சண்யம் பார்க்காமல், நடவடிக்கை எடுப்பவர் என்ற பெயரை மக்களே அவருக்கு கொடுத்துள்ளனர். அதற்கு பல முன் உதாரணங்கள் உள்ளன. இந்தியாவின் முன்னிலையில் உள்ள, மாநிலங்களில் தமிழகமும் ஒன்று என, பிற மாநிலங்களை ஒப்பிட்டு தான், தமிழகத்தின் முன்னேற்றத்தை கூறுகின்றனர். அப்படி இருக்கையில், சட்டம் - ஒழுங்கிலும், பிற மாநிலங்களை விட, தமிழகம் சிறப்பாக உள்ளது. தொழில் தகராறுகள் இல்லாமல், முதலீடு செய்வதற்கு சாதகமான மாநிலம் தமிழகம் என, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் உட்பட, பன்னாட்டு நிறுவனங்கள் கூறும் அளவுக்கு, தமிழகம் சட்டம் - ஒழுங்கில் முன்னிலை வகிப்பதால், பிற மாநிலங்களுடன் ஒப்பிட்டு சொல்வதில் தவறு ஏதும் இல்லை.
கமல்ஹாசன் நடித்து வெளியான, "விஸ்வரூபம்' திரைப்படம் தொடர்பாக பெரும் சர்ச்சை எழுந்தது. போலீஸ் பாதுகாப்பு அளித்து, விஸ்வரூபம் வெளியீட்டுக்கு, அரசு உதவ வேண்டும் என, கோரிக்கை எழுந்தது.
ஆனால், இதை முதல்வர் ஏற்கவில்லை. பல ஆயிரம் போலீசாரை பாதுகாப்புப் பணியில் நிறுத்தி, திரைப்படத்தை வெளியிட அனுமதிக்க முடியாது. இருதரப்பினரும் பேசி முடிவுக்கு வந்தால் தான், திரைப்படத்தை வெளியிட அனுமதிக்க முடியும் என, திட்ட வட்டமாகக் கூறினார். அதனால், இரு தரப்பினருக்கும் இடையே, சுமுக முடிவு ஏற்பட்டு, விஸ்வரூபம் படம் திரையிடப்பட்டது. போலீசாரை எதற்கு பயன்படுத்த வேண்டும்; எப்படி அவர்களிடம் வேலை வாங்க வேண்டும் என்பது, முதல்வருக்கு முழுமையாக தெரியும். எனவே, ஒன்றுமில்லாத தகவல்களைக் கூறி, தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு கெட்டுவிட்டது என, சொல்வதை மக்கள் ஏற்க மாட்டார்கள்.
தங்க தமிழ்செல்வன், எம்.எல்.ஏ., - அ.தி.மு.க.,
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE