கூட்டுறவு கடன்களுக்காக ஜப்தியா?இல்லை என அரசு திட்டவட்ட மறுப்பு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

கூட்டுறவு கடன்களுக்காக ஜப்தியா?இல்லை என அரசு திட்டவட்ட மறுப்பு

Added : செப் 25, 2010 | கருத்துகள் (1)
Share
கூட்டுறவு கடன்களுக்காக ஜப்தியா?இல்லை என அரசு திட்டவட்ட மறுப்பு

சென்னை:"கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்கள் வழங்கிய கடன்களை வாங்கியவர்கள், அவரவர் வீட்டில் தான் குடியிருக்கின்றனர். செலுத்த வேண்டிய கடன் தொகைக்காக யாரையும் வீட்டிலிருந்து வெளியேற்றும் நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை' என்று, தமிழக அரசு தெரிவித்துள்ளது.


வீட்டுவசதி சங்கங்களின் கடன் வசூல் தொடர்பாக ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கைக்கு, தமிழக அரசு அளித்துள்ள விளக்கம்:இந்த அரசு பதவியேற்றவுடன், கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்களில் கடன் பெற்றவர்களின் கடன் சுமையை குறைக்க, கடன் தள்ளுபடி மற்றும் வட்டிச் சலுகைத் திட்டத்தை அறிவித்தது. இத்திட்டத்தின் கீழ், பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினர் பெற்றிருந்த 25 ஆயிரம் ரூபாய் வரையிலான கடன்கள் முழுவதும், வட்டியுடன் தள்ளுபடி செய்யப்பட்டன. இதனால் அரசுக்கு 683 கோடி ருபாய் இழப்பு ஏற்பட்டது.இதேபோல, குறைந்த வருவாய் பிரிவினர் செலுத்த வேண்டிய வட்டியில் 58 சதவீதமும், மத்திய வருவாய் பிரிவினர் செலுத்த வேண்டிய வட்டியில் 25 சதவீதமும், உயர் வருவாய் பிரிவினர் செலுத்த வேண்டிய வட்டியில் 10 சதவீதமும் தள்ளுபடி செய்யப்பட்டதுடன், இவர்கள் அனைவரும் செலுத்த வேண்டிய அபராத வட்டி முழுவதும் தள்ளுபடி செய்யப்பட்டது.இதனால், அரசுக்கு மேலும் 91 கோடியே 73 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டது. இந்த தள்ளுபடி திட்டத்தால், கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்களுக்கு ஏற்பட்ட இழப்பு முழுவதையும் அரசே ஈடு செய்துள்ளது.


நிதி நிறுவனங்களிடம் பெற்ற கடனை உரிய காலத்தில் செலுத்தாமல் போனால், தமிழக அரசின் கடன் நிலை பாதிக்கும் என்பதால், உரிய காலத்தில் கடன் தள்ளுபடித் திட்டத்தை பயன்படுத்தி கடன் தவணைகளை நீண்ட காலமாக செலுத்தாத மற்றும் மத்திய வருவாய் பிரிவுகளைச் சேர்ந்த உறுப்பினர்களிடம் கடனை வசூலிக்க சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.எனினும், இந்த கடன்தாரர்கள் அவரவர் வீட்டில் தான் குடியிருக்கின்றனர். எந்த ஒரு உறுப்பினரையும் அவர் செலுத்த வேண்டிய கடன் தொகைக்காக, வீட்டிலிருந்து வெளியேற்ற, எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.இவ்வாறு அரசு தெரிவித்துள்ளது.


Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X