சென்னை துறைமுகத்தில் இருந்து மதுரவாயல் வரையிலான, ?? கிலோ மீட்டர் தூர, உயர்மட்ட சாலை திட்டம், முந்தைய தி.மு.க., ஆட்சியில்
அறிவிக்கப்பட்டு, அமலுக்கு வந்தது. கிட்டதட்ட திட்டத்தின், 40 சதவீத பணிகள் நிறைவடைந்து விட்டன. இந்த நிலையில், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், திட்டத்தை முழுமையாக நிறுத்தி விட்டனர். இதற்கு எதிராக, உயர் நீதிமன்றம் வரை சென்று, திட்டத்தை நிறைவேற்ற,
உத்தரவு பெற்றுள்ளது, மத்திய அரசு. இதேபோல, கடுமையான போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக, சென்னை போரூரில் அமைக்கப்படவிருந்த பாலம், வியாசர்பாடியில் கட்டி முடிக்கப்பட்ட பாலம் திறக்காமை என, தற்போதைய தமிழக அரசு, மக்கள் நலத் திட்டங்கள் பலவற்றை செயல்படுத்துவதை தடுக்கிறது என, பலவாறாக குற்றம் சாட்டுகின்றனர். இது, முழுக்க முழுக்க, அரசியல் காழ்புணர்ச்சியோடு செய்யப்படுபவை என, அரசு தரப்பு மீது கடுமையான குற்றச்சாட்டு இருக்க, இதுதொடர்பாக, இரு அரசியல் பிரபலங்கள் நடத்திய கருத்து மோதல்கள் இதோ:
தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்களை யாரும் எதிர்க்கவில்லை. தி.மு.க., அரசு செயல்படுத்திய பல திட்டங்களால், ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்படுகின்றனர். அதில், உரிய திருத்தங்கள் செய்து அமல்படுத்த வேண்டும் என்பதே, முதல்வர் ஜெயலலிதாவின் நிலையாக உள்ளது.
மதுரவாயல் - துறைமுகம் உயர்மட்ட சாலை, 9 கி.மீ., தூரத்துக்கு, முதலில் திட்டமிடப்பட்டது. ஆனால், திடீரென, இத்திட்ட சாலையை, 19 கி.மீ., தூரத்துக்கு அதிகரித்து விட்டனர். நீட்டிக்கப்பட்ட பகுதியில், 60 ஆயிரம் குடிசைப் பகுதிகள் உள்ளன.
இவற்றை அகற்றிவிட்டு, உயர்மட்ட பாலம் அமைக்க முடிவு செய்தனர். அகற்றப்படும் குடிசைவாசிகளுக்கு, மாற்று இடம் அளிக்கும் திட்டம், உயர்மட்ட பாலம் அமைக்கும் திட்டத்தில் இடம் பெறவில்லை.
அதனால், இத்திட்டத்தை நிறுத்த வேண்டிய கட்டாயம், தமிழக அரசுக்கு ஏற்பட்டது. அதேபோல், சமச்சீர் கல்வித் திட்டம், அதற்கென அமைக்கப்பட்ட கமிஷன் பரிந்துரைகளை ஏற்று செயல்
படுத்தப்படவில்லை.
இத்திட்டத்திலும், ஏழை, பணக்காரன் என்ற சமச்சீர் ஏற்படவில்லை. கல்வி என்பது, மாநில அரசின் பட்டியலில் உள்ளது. ஆனால், படிப்படியாக மத்திய அரசின் பட்டியலுக்கு கல்வியை கொண்டு சென்று, மாநில அரசின் உரிமையை பறிக்கும் செயலை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுபோன்ற காரணங்களை அடிப்படையாகக் கொண்டு, தமிழக அரசின் செயல்பாடுகளை பார்க்காமல், மேலெந்தவாரியாக, வளர்ச்சித்
திட்டங்களை, தமிழக அரசு நிறுத்துகிறது.
முந்தைய அரசின் திட்டங்கள் என்பதால், இப்படி செய்கின்றனர் என, வீண் பழியை சுமத்துகின்றனர். மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்துவதில், அ.தி.மு.க., அரசுக்கு இணையாக, வேறு எந்த அரசும் செயல்பட்டதில்லை. குறை சொல்ல வேண்டும் என்பதற்காக, குற்றம் சுமத்துகின்றனர்.
செ.கு.தமிழரசன் , எம்.எல்.ஏ., - இந்திய குடியரசு கட்சி
சமச்சீர் கல்வி, மதுரவாயல் - துறைமுகம் உயர்மட்ட சாலை, புதிய தலைமை செயலகம் போன்ற திட்டங்கள், நீதிமன்றத்துக்கு சென்றதால், அத்திட்டங்களை, அ.தி.மு.க., அரசு முடக்கியது, மக்களுக்கு தெரியவந்துள்ளது. ஆனால், நீதிமன்றத்துக்கு செல்லாததால், ஏராளமான திட்டங்கள் முடக்கப்பட்டு உள்ளன; அது, மக்களுக்கு தெரியாமல் உள்ளது.
ஒரு அரசு அறிவித்து துவங்கும் பல திட்டங்களை, அந்த அரசின் பதவிக் காலம் முடிவதற்குள் செய்து முடிக்க முடியாது. அடுத்து வரும் அரசு, அத்திட்டங்களை தொடர்ந்து செய்து முடிக்க வேண்டும். அப்போது தான், மாநிலத்தின் வளர்ச்சி சீராக இருக்கும். ஆனால், அரசியல் காழ்ப்புணர்ச்சி, தனிப்பட்ட வெறுப்பு ஆகியவற்றால், தி.மு.க., அரசில் அறிவிக்கப்பட்ட பணிகள் மற்றும் துவங்கப்பட்ட பல திட்டங்களை, ஜெ., அரசு முடக்கியுள்ளது.
உதாரணமாக, குடிநீர் இல்லாமல் தவிக்கும், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு, ஒகேனக்கலில் காவிரி ஆற்றிலிருந்து, குடிநீர் கொண்டு வரும் கூட்டு குடிநீர் திட்டம், 1,928 கோடி ரூபாயில் துவங்கப்பட்டு, தி.மு.க., ஆட்சியிலேயே, 70 சதவீத பணிகள் முடிக்கப்பட்டன. ஆனால், திட்டம் இன்னும் முழுமை பெறவில்லை.
நாட்டில் மின் பற்றாக்குறை தலைவிரித்தாடுகிறது என்றதும், ஏற்கனவே தி.மு.க., ஆட்சி காலத்தில் போடப்பட்ட திட்டங்களை செயல்பாட்டுக்கு கொண்டு வந்திருக்கின்றனர். இதே அணுகுமுறையை எல்லா விஷயங்களிலும் கடைபிடிக்கலாமே.
ஒவ்வொரு திட்டத்தையும் நிறைவேற்ற வேண்டுமானால், அரசுக்கு எதிராக நீதிமன்றம் சென்று, ஆணை பெற வேண்டிய நிலை நிலவுகிறது. அப்படியே நீதிமன்ற உத்தரவைப் பெற்றாலும், அதற்கு மேல் முறையீடு செய்து கிடப்பில் போடும் வேலையை, ஜெயலலிதா தலைமையிலான அரசு செய்து வருகிறது. இதுபோன்ற நிலை நீடித்தால், தமிழகத்தின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும் நிலையே ஏற்படும்.
செங்குட்டுவன்
எம்.எல்.ஏ., - தி.மு.க.,
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE