காந்திநகர்: ''ஆயுர்வேத மருந்து பொருட்களை, சீனா, அதிகமாக ஏற்றுமதி செய்கிறது; இது, நமக்கு மிகவும் சவாலான விஷயம்,'' என, பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பேசினார்.
குஜராத் மாநிலம், காந்திநகரில் நடந்த, தேசிய ஆயுர்வேத மருந்து பொருட்கள் குறித்த கருத்தரங்கில், அம்மாநில முதல்வரும், பா.ஜ., பிரதமர் வேட்பாளருமான, நரேந்திர மோடி பேசியதாவது: ஆயுர்வேத மருந்து பொருட்கள் ஏற்று மதியில், உலகிலேயே, சீனா தான், முதலிடத்தில் உள்ளது. இது, நமக்கு மிகவும் சவாலான விஷயம். இதன் மூலம், ஆயுர்வேத மருந்து பொருட்களுக்கு, சர்வதேச அளவில் கிராக்கி உள்ளது, தெளிவாக தெரிகிறது. எனவே, சீனாவை மிஞ்சும் விதமாக, நாமும், அதிகமாக, ஆயுர்வேத மருந்துகளை ஏற்றுமதி செய்ய வேண்டும். நேபாளம், தாய்லாந்து உள்ளிட்ட, பல நாடுகளில், ஆயுர்வேத மருந்துகள் அதிகம் உபயோகப் படுத்தப்படுகின்றன. ஆனால், மத்திய அரசு, இதைப் பற்றி, ஒருமுறை கூட, சிந்தித்து பார்த்ததாக தெரியவில்லை. நம் முன்னோர்கள், பல்வேறு ஆயுர்வேத வைத்திய குறிப்புகளை எழுதி வைத்துள்ளனர். இவை அனைத்தும், டிஜிட்டல் மயமாக்கப்பட வேண்டும். அது போல், ஆயுர்வேத மருந்து பொருட்களுக்கு, சர்வதேச காப்புரிமை கோருவதிலும், நாம், மிகவும் பின் தங்கியுள்ளோம். இந்த விஷயத்தில், விழிப்புணர்வு அவசியம். நம் நாட்டில், எல்லாமே, அவசரமயம் தான். இதனால், பல்வேறு நோய் பாதிப்புகள் வருகின்றன. ஆயுர்வேத பொருட்களின் மகத்துவத்தை, இந்த அவசர வாழ்க்கை, நமக்கு மறக்கடித்து விட்டது. ஆனால், மேற்கத்திய நாடுகளில், உணவுப் பொருட்களுடன், ஆயுர்வேத பொருட்களை, கூடுதலாக சாப்பிடுகின்றனர். அதனால், அங்கு நோய் பாதிப்பு குறைவாக உள்ளது. இவ்வாறு, மோடி பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE