சென்னை:ஐ.டி., பெண் மென்பொறியாளர் கொல்லப்பட்ட வழக்கில், வடமாநிலத்தை சேர்ந்த இரண்டு பேரை நேற்று போலீசார் கைது செய்தனர். மேலும் இரண்டு பேரை தேடி வருகின்றனர்.சேலம் ஆத்துாரை சேர்ந்தவர் பாலசுப்ரமணியன். அவரது மகள் உமா மகேஸ்வரி, 23. அவர், சிறுசேரி 'சிப்காட்' வளாகம், தகவல் தொழில்நுட்ப பூங்காவில் உள்ள டி.சி.எஸ்., நிறுவனத்தில், மென்பொறியாளராக பணியாற்றி வந்தார்.கடந்த, 13ம் தேதி இரவு 10:00 மணிக்கு நிறுவனத்தை விட்டு வீட்டிற்கு புறப்பட்டவர், மாயமானார். கடந்த, 22ம் தேதி, 'சிப்காட்' வளாகத்தில், அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
இருவர் கைது: இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்தனர். உமா மகேஸ்வரியின், அலைபேசி காணாமல் போனாலும், அந்த எண் மூலம், அவருக்கு வந்த, அவர் அழைத்த அழைப்புகள் பற்றிய விவரங்கள் சேகரிக்கப்பட்டன. சம்பவ இடத்தில், தமிழக டி.ஜி.பி., ராமானுஜம் உள்ளிட்ட போலீஸ் உயரதிகாரிகள் நேரில் பார்வையிட்டனர். ஆளில்லா விமானம் மூலம், சம்பவ இடம் வீடியோவாக பதிவு செய்யப்பட்டது.இந்த வழக்கில், வடமாநிலத்தை சேர்ந்த உத்தம் மற்றும் ராம் மண்டல் ஆகிய இரண்டு பேரை சி.பி.சி.ஐ.டி., போலீசார் நேற்று கைது செய்தனர்.
?நடந்தது என்ன?: குற்றவாளிகள் வாக்குமூலத்தில் கூறியதாக போலீசார் தெரிவித்ததாவது:கடந்த, 13ம் தேதி இரவு 10:00 மணிக்கு, 'சிப்காட்' வளாகத்தில், உமா மகேஸ்வரி தனியாக நடந்து வந்து கொண்டிருந்தார். அவரிடம் இருந்து பணத்தை
கொள்ளையடிப்பதற்காக, நாங்கள் அவரை வழிமறித்தோம்.
அவர் எங்கள் நோக்கத்தை தெரிந்து கொண்டு, காலில் இருந்த செருப்பை கழற்றி, எங்களை அடித்தார். அதனால் நாங்கள் ஆத்திரம் அடைந்தோம்.அவரை குண்டுக்கட்டாக துாக்கி முட்புதருக்குள் சென்றோம். அங்கு அவரை பாலியல் பலாத்காரம் செய்தோம். அவரது கழுத்து மற்றும் வயிற்றில் கத்தியால் குத்தி கொன்று விட்டு, அடையாளம் தெரியாமல் இருக்க எரித்து கொன்றோம். அவரிடம் இருந்து அலைபேசி, கிரெடிட் கார்டு உள்ளிட்டவற்றை பறித்து தப்பினோம்.
அந்த அலைபேசியில் இருந்த சிம்கார்டுகளை துார வீசிவிட்டு, வேறொரு சிம்கார்டு மாற்றிய போது, ஐ.எம்.இ.ஐ., எண் மூலம் போலீசார் எங்களைப் பிடித்து விட்டனர்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி., போலீசார் கூறுகையில்,'இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மேலும் இரண்டு பேரில், ஒருவரை தேடி, மேற்கு வங்கத்திற்கு போலீசார் விரைந்துள்ளனர். மற்றொருவரை தேடி வருகிறோம்' என்றனர்.