"தமிழகத்தில் சாப்பாட்டுக்குக்கூட வழி இருக்கிறது. ஆனால், உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை, உருவாகி இருக்கிறது. தாலி அறுப்பில் ஆரம்பித்து, ஆளுங்கட்சிக்காரர்களே பட்டப்பகலில், பலர் முன்னிலையில் வெட்டிக் கொல்லப்படும் அளவுக்குத் தான், சட்டம் - ஒழுங்கு லட்சணம் இருக்கின்றது' என, எதிர்க்கட்சியினர் பலரும், அரசு மீது, அதிரடியாக புகார் சொல்கின்றனர். நீதி கேட்டு, தலைமைச் செயலக வாயில் முன், போராடிய நபர் ஒருவர், அங்கேயே தீக்குளித்து உயிரை மாய்த்து உள்ளார். அதை அங்கு, காவலுக்கு இருந்த போலீசாரும் தடுக்கவில்லை. மொத்தத்தில், தமிழகத்தில், சட்டம் - ஒழுங்கு சீர்குலைவோடு, பல இடங்களிலும், அடிப்படை நீதியும் மறுக்கப்படுகின்றது. ஆனால், இதையெல்லாம் மறுத்து பேசும் ஜெயலலிதா, "குற்றங்கள் இல்லாத ஊரோ, நாடோ கிடையாது' என, எளிதாக பிரச்னையை கையாள்கிறார். இதுபற்றி, தமிழக அரசில் நிர்வாகத் தரப்பில் பணியாற்றி, ஓய்வு பெற்ற இரண்டு பிரபலங்கள் நடத்திய கருத்து மோதல்கள் இங்கே:
குறைந்த விலையில், உணவு, காய்கறி, இலவச திட்டங்கள் போன்றவை, மொத்த மக்கள் தொகையில், மிகச் சொற்பமானவரையே சென்றடைகிறது. ஆனால், குழந்தைகள், இளைஞர்கள், பெண்கள், பெரியவர்கள் என, அனைவரும் அமைதியாக வாழ, சட்டம் - ஒழுங்கு மிக முக்கியம். அதில், அக்கறை செலுத்த வேண்டியது, ஒவ்வொரு மாநிலத்திலும் முக்கியம். தமிழகத்தைப் பொறுத்தவரை, அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்து விட்டால், போலீசாரை தட்டிக் கொடுத்தே வைத்திருப்பார்கள். அரசின் தலைமையில் இருப்பவர்களும், போலீசாருக்கு முக்கியத்துவம் கொடுத்து வருவதால், போலீசாரின் அக்கறையின்மை பற்றி, தலைமையிடத்தில் புகார் செய்தாலும், நடவடிக்கை எடுக்க மாட்டார்கள். சட்டம் - ஒழுங்கை சீராக வைத்திருக்கிறோம். தீவிரவாதத்தின் மீது, உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கிறோம் என்றெல்லாம், தமிழக அரசு சொல்லி வருகிறது. ஆனால், கடந்த காலங்களில் நிகழ்ந்த குற்றச் சம்பவங்கள், நிகழ்காலத்தில் நடக்கும் குற்றச் சம்பவங்களை கணக்கெடுத்தாலே, தமிழக அரசின் சட்டம் - ஒழுங்கு பராமரிப்பு வெளிச்சத்துக்கு வரும்.
பெண்கள் மீதான பாலியல் புகார்கள், நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதுதொடர்பான புகார்களை, முதலில் பதிவு செய்ய மாட்டார்கள். அப்படியே பதிவு செய்தாலும், முழுமையான விசாரணை நடத்தி, வழக்கை கோர்ட்டுக்கு கொண்டு செல்ல மாட்டார்கள். இதிலிருந்து மக்களை திசை திருப்பவே, குறைந்த விலையில் உணவு, காய்கறி, இலவச திட்டங்கள் என, அரசு செயல்படுத்துகிறது. இவையெல்லாம், அரசின் விளம்பரங்களுக்கு பயன்படுமே தவிர, மாநிலத்தின் அமைதிக்கும், வளர்ச்சிக்கும் எந்த காலத்திலும் உதவாது.
சிவகாமி, தலைவர், சமத்துவ மக்கள் படை
பல கருத்து முரண்பாடுகளுடன் கூடிய சமூகத்தில், குற்றங்கள் நடப்பதைத் தடுக்க முடியாது. கல்வி கற்றவர்களும், கடும் குற்றங்களை செய்பவர்களாகவே இருக்கின்றனர். தமிழகத்தில், 600 பொதுமக்களுக்கு ஒரு காவலர் என்ற, விகிதாசாரத்தில் தான், காவல் துறை உள்ளது. பல தேவைகள், பற்றாக்குறைகள் நிலவும் சமூகத்தில், 600 பொதுமக்களை கண்காணித்து, சட்டத்துக்கு உட்பட்டு செயல்படுகிறார்களாக என்பதை, ஒரு காவலர் உறுதி செய்வது, மிக சவாலான ஒன்று. தொழில்நுட்பம் வளர வளர, அதன் துணையுடன் நடக்கும் குற்றங்களும் அதிகரித்து விட்டன. இன்று நடக்கும் குற்றங்களில், பெரும்பாலான குற்றங்கள், "சைபர்' குற்றங்களாகவே உள்ளன. தொழில் நுட்பங்களின் துணையோடு நடக்கும் குற்றங்களைத் தடுக்க, அதற்கான உபகரணங்கள், நவீன ஆயுதங்களை, அரசு கொள்முதல் செய்கிறது. அவற்றை உபயோகித்து, குற்றங்களைத் தடுக்க, காவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இருந்தும், போதுமான அளவு தகுதியுள்ளவர்களை,
காவல் துறையில் உருவாக்க வேண்டும். சாலை, குடிநீர், மின்சாரம் போன்ற அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்கும் போது, அடுத்த, 25 ஆண்டு கால தேவையைக் கருத்தில் கொண்டு, அவை உருவாக்கப்படுகின்றன. அதைப்போலவே, அடுத்த, 25 ஆண்டுகளில் அதிகரிக்கும் குற்றங்களை கருதி, காவல் துறையை மேம்படுத்த வேண்டிய கட்டாயம், ஏற்பட்டு உள்ளது. குற்றவாளிகளை பிடித்து, வழக்குத் தொடர்ந்தாலும், நீதி கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது. அதனாலும், குற்றங்கள் பெருகுகின்றன. ஆனால், சிறு சம்பவம் நடந்தால் கூட, சட்டம் - ஒழுங்கு கெட்டுவிட்டது, காவல் துறை செயல்படவில்லை என, குற்றம் சாட்டுகின்றனர். அரசியலுக்காக சில குற்றச்சாட்டுகளை சொல்லாம். ஆனால், நடைமுறையில், சவாலான ஒன்றை திறம்படவே, நிறைவேற்றி வருகின்றனர்.
திலகவதி, ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரி
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE