மும்பையில், "ஐ.என்.எஸ்.சிந்து ரத்னா' நீர்மூழ்கி போர் கப்பல், தீ விபத்தில் சிக்கி, கடற்படை அதிகாரிகள் இருவர் மரணம் அடைந்தனர். இந்த விபத்து தொடர்பாக, உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதேநேரத்தில், சமீபகாலமாக, போர் கப்பல்கள் தொடர் விபத்துகளை சந்தித்து வருவதற்கு, தார்மீக பொறுப்பேற்று, கடற்படை தளபதி, அட்மிரல் டி.கே.ஜோஷி தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஒரு அதிகாரிக்கு உள்ள இந்த தன்மான உணர்வு கூட, அந்தத் துறை கவனிக்கும் அரசியல்வாதியான அமைச்சருக்கு இல்லை. எந்த ஒரு துறையாக இருந்தாலும், சிக்கலான நேரங்களில், அதிகாரிகளை பலிகடாவாக்கி விட்டு, தப்பித்துக் கொள்வதே, அரசியல்வாதிகளின் வேலையாக உள்ளது என, சிலர் குற்றம் சாட்டுகின்றனர். அதேநேரத்தில், எங்கோ ஒரு பகுதியில் நடக்கும் தவறுக்கெல்லாம், அமைச்சர் ராஜினாமாவை கோருவது சரியல்ல என்பது மற்றொரு தரப்பினரின் வாதம். இது தொடர்பாக, இரு பிரபலங்கள் முன்வைத்த கருத்துக்கள் இதோ:
அரசுக்கு கடுமையான நெருக்கடி வரும்போது, அதிகாரிகளை பலிகடாவாக்கி விட்டு, அமைச்சர்கள் தப்பித்துக் கொள்வது, மத்திய அரசின் வாடிக்கை. இதில், நீர்மூழ்கி கப்பல் விபத்து தொடர்பாக, கடற்படை தளபதி ராஜினாமா செய்ததும் ஒன்று. கடற்படை கப்பல்களில், கடந்த சில மாதங்களில், 10க்கும் மேற்பட்ட பெரும் விபத்துகள் நடந்துள்ளன. நாட்டின் கடல்வழி பாதுகாப்பை உறுதி செய்யும், ராணுவப் பிரிவில், இதுபோன்ற சம்பவங்கள் நடக்க என்ன காரணம் என்பது, முழுமையாக வெளியாவதில்லை. இப்பிரச்னைகளுக்கு, பொறுப்பேற்று, ராணுவ அமைச்சர் ராஜினாமா செய்திருக்க வேண்டும். அதையே மக்களும் எதிர்பார்த்தனர். ஆனால், கடற்படை தளபதி, ராஜினாமா செய்துள்ளார். மக்களின் நம்பிக்கையை, முற்றிலும் இழந்து விட்ட காங்கிரஸ் அரசு, எதை வேண்டுமானாலும் செய்யலாம் என, மனம்போன போக்கில் நடக்கிறது. நீதிமன்ற உத்தரவுகளைக் கூட, மதிக்கத் தயாராக இல்லை. ரயில்வே உணவகங்களை ஏலம் எடுத்து நடத்திக் கொண்டிருப்பவர்கள், அவர்களின் ஏல காலம் வரை, உணவகங்களை நடத்த அனுமதிக்கப்படுவதில்லை.
நாட்டில் உள்ள குறிப்பிட்ட மூன்று நிறுவனங்கள் மட்டுமே, ரயில்வே உணவகங்களை நடத்த வேண்டும் என, முடிவு எடுத்து, ஏற்கன வே ஏலம் எடுத்து நடத்திக் கொண்டிருப்பவர்களிடம் உணவகங்களைப் பிடுங்கி, இந்த மூன்று நிறுவனங்களில் ஒன்றுக்கு அளிக்கின்றனர். இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், ஏல காலம் முடியும் வரை, ஏலதாரரை மாற்றக் கூடாது என, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், நீதிமன்ற உத்தரவை மதிக்காமல், ஏல காலம் முடிவதற்குள், ஏல தாரர்களை மாற்றியுள்ளனர். இப்படிபட்டவர்களிடம், தவறுக்கு தார்மீக பொறுப்பேற்று, ராஜினாமா செய்வார்கள் என, எதிர்பார்க்க முடியாது.
கணேசமூர்த்தி, எம்.பி., - ம.தி.மு.க.,
"ரயில் விபத்துகள், சாலை விபத்துகள் நடந்தால் அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும்' என, கோரிக்கை எழுப்புகின்றனர். விபத்துக்கு பொறுப்பேற்று, அமைச்சர் ராஜினாமா செய்தால், பிரச்னைக்கு தீர்வு கிடைத்து விடுமா? ஒரு விபத்து நடத்தால், அதற்கு என்ன காரணம். எதிர்காலத்தில், அதுபோன்ற விபத்துகள் நடக்காமல் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்பது போன்ற நடவடிக்கைகளை எடுப்பதே சரியானது. அதைவிடுத்து, அமைச்சர் ராஜினாமா செய்யவேண்டும் என்பது, சம்பவத்தை அரசியல்படுத்தவே உதவும்.
நீர்மூழ்கி கப்பல் விபத்து நடந்த பின், கடற்படை தளபதி, அவரே முன்வந்து, தன் ராஜினாமாவை அளித்து, அரசு ஏற்க வேண்டும் என, கேட்டுக் கொண்டுள்ளார். அதனால், அவரது ராஜினாமா ஏற்கப்பட்டுள்ளது.
நீர்மூழ்கி கப்பலில் விபத்து நடக்கப் போகிறது என்ற தகவல், ராணுவ அமைச்சருக்குக் கிடைத்து, அவர் உடனடி நடவடிக்கை எடுக்காமல். காலதாமதம் செய்திருந்தாலோ அல்லது அந்த தகவலை கண்டு கொள்ளாமல் விட்டிருந்தாலோ, விபத்துக்கு பொறுப்பாவார். அப்படியொரு தகவல், ராணுவ அமைச்சருக்கு வரவில்லை; விபத்து தற்செயலாக நடந்துள்ளது. எனவே, விபத்துக்கான காரணத்தை அறிந்து, இனிமேல் நடக்காமல் தடுக்க வேண்டுமே தவிர, விபத்துக்கு பொறுப்பேற்று, தன்மான உணர்வுடன் அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என, கேட்பது சரியல்ல. தார்மீக பொறுப்பேற்று, பல அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ளனர். அதுபோன்ற முன் உதாரணங்கள் இப்போது இல்லையே என, கூறுவதையும் ஏற்க முடியாது.
அமைச்சர் ராஜினாமா செய்வதால், ஏதாவது தீர்வு ஏற்படும் என்றால், அவர் ராஜினாமா செய்யலாம். அதைவிடுத்து, எதற்கெடுத்தாலும், அமைச்சர்கள் ராஜினாமா செய்யவேண்டும் என்பதை ஏற்க முடியாது.
மணிசங்கர் அய்யர் , மூத்த தலைவர், காங்கிரஸ்
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE