ஆவுடையார் கோவிலை கட்டியது யார்?
ஆவுடையார் கோவிலை கட்டியது யார்?

ஆவுடையார் கோவிலை கட்டியது யார்?

Added : மார் 01, 2014 | கருத்துகள் (8) | |
Advertisement
புதிதாக ஒரு கோபுரமோ, மண்டபமோ அமைப்பது என்றால், தங்கள் திறமைக்கு சவாலாக இருக்கிற பணிகளை, செய்வதற்கு ஸ்தபதிகள் ஆயத்தமாகவே இருப்பர். ஆனால், கட்டட கலையின் உச்சக்கட்ட சாதனையாக அமைந்த படைப்புகள் என்று, சிலவற்றைக் குறிப்பிட்டு, அவற்றுக்கு இணையாக மட்டும், தங்களால் சாதனை படைக்க இயலாது என்று, எழுதிக் கொடுத்து விடுவர். இது, தமிழகம் கோவில் கட்டட கலை மரபு சார்ந்த ஒரு செவிவழி
ஆவுடையார் கோவிலை கட்டியது யார்?

புதிதாக ஒரு கோபுரமோ, மண்டபமோ அமைப்பது என்றால், தங்கள் திறமைக்கு சவாலாக இருக்கிற பணிகளை, செய்வதற்கு ஸ்தபதிகள் ஆயத்தமாகவே இருப்பர். ஆனால், கட்டட கலையின் உச்சக்கட்ட சாதனையாக அமைந்த படைப்புகள் என்று, சிலவற்றைக் குறிப்பிட்டு, அவற்றுக்கு இணையாக மட்டும், தங்களால் சாதனை படைக்க இயலாது என்று, எழுதிக் கொடுத்து விடுவர். இது, தமிழகம் கோவில் கட்டட கலை மரபு சார்ந்த ஒரு செவிவழி செய்தி.


ஸ்தபதிகள் மத்தியில், அத்தகைய உச்சக்கட்ட சாதனையாக கருதப்பட்ட ஒன்று தான், ஆவுடையார் கோவிலின் 'கொடுங்கை!' அதனால், 'ஆவுடையார் கோவில் கொடுங்கை நீங்கலாக, பிற பணிகளை செய்ய ஆயத்தமாக இருக்கிறோம்' என, புதிய பணிகளை துவங்குவதற்கு முன், ஒப்பந்தம் போட்டுக் கொள்வர். கொடுங்கை என்பது, சாய்வான கல் கூரையின் வளைந்த மேல் பகுதி (படத்தை காண்க). கோடுதல் என்றால் வளைதல் என்று, பொருள்படும். இதுவே கொடுங்கை என்ற, சொல்லுக்கு மூலம். இன்றும், கோட்டம் என்ற, சொல், வளைவு என்ற, பொருளில் பயன்படுத்தப்படுகிறது. சாய்வான கல் கூரை அமைப்பதே கடினம். அதிலும், மலரிதழ் போல வளைந்த கொடுங்கை அமைப்பது மிக மிக கடினம். இந்த கொடுங்கை தான், ஆவுடையார் கோவில், பஞ்சாட்சர மண்டபத்திற்கு சிறப்பு சேர்க்கும் அம்சம். இந்த மகத்தான மண்டபத்தில் உள்ள கல்வெட்டுகளில் தான், சைவ, சமய குரவர் நால்வருள், நான்காமவரான மாணிக்கவாசகர், இந்த கோவிலை கட்டுவித்ததாக, தகவல் பொறிக்கப்பட்டு உள்ளது என்று, சில ஊடகங்களில் செய்தி வெளியானது. அதை படித்த, 'மாணிக்கவாசகர் மகாசபை' மாநில தலைவரும், என் நண்பருமான நந்தன் என்ற, தங்கம் விசுவநாதன், 'ஆவுடையார் கோவில் கொடுங்கைக்கு மாணிக்கவாசகருடன் தொடர்பு உண்டா' என, தெரிந்து கொள்ள ஆர்வம் கொண்டார். எனவே, புதுக்கோட்டை மாவட்டம், மேலப்பனையூரை சேர்ந்த கல்வெட்டு ஆய்வாளர் கரு.இராஜேந்திரன், புதுக்கோட்டை, மன்னர் கல்லூரி வரலாற்று பேராசிரியர் சந்திரபோஸ் ஆகியோருடன் இணைந்து; நானும், நந்தரும் ஆவுடையார் கோவிலுக்கு சென்றோம். செல்லும்போதே, ''பல ஆண்டுகளுக்கு முன்னர் கல்வெட்டறிஞர் சுந்தரேச வாண்டையாரால், ஆவுடையார் கோவில் கல்வெட்டுகள் பல, வாசிக்கப்பட்டன. திருவாவடுதுறை ஆதீனத்தாரால் வெளியிடப்பட்ட விழா மலர் ஒன்றில், அந்த கல்வெட்டு வாசகங்கள் வெளிவந்து உள்ளன,'' என்று, பேராசிரியர் சந்திரபோஸ் தெரிவித்தார்.


அவர் மேலும் கூறுகையில், ''சக ஆண்டு , 1524ல், அதாவது, கி.பி. 1602ல் பரதேசி முத்திரை, வாமதேவ பண்டாரம் என்பவர், பல திருப்பணிகளை நடத்துவித்தார் என்ற செய்தி, அந்த கல்வெட்டுகளில் இடம் பெற்றுள்ளது. சில கல்வெட்டுகளின் முழுமையான வாசகங்கள் வெளியிடப்படாமல், அவற்றின் செய்தி சுருக்கம் மட்டும் வெளியிடப்பட்டது. அந்த சில கல்வெட்டுகளே, தற்போது, புதியதாக கண்டறியப் பட்டதாக, தவறான செய்தி வெளிவந்திருக்கலாம் என, நான் கருதுகிறேன்,'' என்று, சந்திரபோஸ் கூறினார். பஞ்சாட்சர மண்டபத்தின் உத்தர கல்லில், சுற்றிலும், நான்கு திசைகளிலும், தொடர்ச்சியாக கட்டளை கலித்துறைப் பாக்கள் பொறிக்கப்பட்டு உள்ளன. அவற்றில், 'இந்த அற்புதமான மண்டப திருப்பணி, மனித முயற்சியால் கைகூடவில்லை. யோகநாயகி (ஆவுடையார் கோவில் இறைவி), கோபுரவேலவன் (பழைய கோபுரத்தில் இடம் பெற்றுள்ள முருகக் கடவுள்), விநாயகர், மாணிக்கவாசகர் ஆகியோரே செய்வித்தனர்' என, பொருள்படும் கவித்துவமான வரிகள் உள்ளன. தென்காசி காசிவிசுவநாதர் கோவிலை கட்டுவித்த, பராக்கிரம பாண்டியன், அந்த பணி தன் செயல் அல்ல என, ஒரு பாடலில் கூறுவதை இதனோடு ஒப்பிடலாம். அதே போல், பஞ்சாட்சர மண்டபத்தில் பொறிக்கப்பட்டு உள்ள, மற்றொரு பாடலில், விசைய (விஜய) ஆண்டு, துலா மாதத்தில், இந்த மண்டப திருப்பணியை துவங்கி, பிலவ ஆண்டு பங்குனி மாதத்தில், யோகநாயகி காரிகை இந்த பணியை முடித்தாள் என்று, கூறப்பட்டு உள்ளது. மேலும், 'சுவரோவியங்களை வரைந்து, பாக்கல் (பாவுகல்) எல்லாம் அமைத்தவன் விநாயகனே' என்று, மற்றொரு பாடலில் கூறப்பட்டு உள்ளது. இந்த வகையில், 'துதிக்கும் சகாத்தம் இங்கொன்றரை ஆயிரம் சொல்லறு நான்கு' என, துவங்குகிற ஒரு பாடலில் ('துதிக்கும்' என்பது 'திதிக்கும்' என்பது போல, பொறிக்கப்பட்டு உள்ளது) 'பதிக்கச் செய்தா னெங்கள் மாணிக்கவாசகனே' என்ற, வரி இடம் பெற்று உள்ளது. இந்த கல்வெட்டு தான், புதிதாக கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த வரியின் பொருள், 'சகாப்தம் 1524ல் (கி.பி.1602) இந்த திருப்பணியை செய்து முடித்தவர் மாணிக்கவாசகரே' என்பது தான். மற்ற பாடல்களில் உள்ள தகவல்களோடு இணைத்து பார்த்தோமானால், இந்த மண்டபம் திருப்பணி கி.பி.1594ம் ஆண்டு அக்டோபர் - நவம்பரில் துவங்கி, 1602ம் ஆண்டு மார்ச் - ஏப்ரலில் நிறைவுற்றது என்பது விளங்கும். எனவே, மாணிக்கவாசகர் ஆவுடையார் கோவிலை கட்டுவித்தது தொடர்பான செய்தி ஏதும், இங்கு இல்லை. மற்ற தெய்வங்களால் ஆன காரியம் என்று, குறிப்பிடப்பட்டு உள்ளது போல, மாணிக்கவாசகருக்கும், பாடல்களில் சிறப்பு இடம் கொடுக்கப்பட்டு உள்ளது. மாணிக்கவாசகரின் காலம், கி.பி. 8ம் நூற்றாண்டு என்று கருதப்படுகிறது. அந்த நூற்றாண்டின் இடைப்பகுதியை சேர்ந்த சுந்தரமூர்த்தி நாயனாரின், திருத்தொண்ட தொகையில், மாணிக்கவாசகரின் பெயர் இடம் பெறாததால், சுந்தரருக்கு, சில ஆண்டுகள் பின்னர் தோன்றியவர் மாணிக்கவாசகர் என்ற, கருத்து உண்டு. இந்த கருத்து ஏற்கத்தக்கதே. மாணிக்கவாசகரின் சமகாலத்தில், சைவ, சமயக் கோவில் கட்டுமானப் பணிகள், பல நடைபெற்றுள்ளன என்பதில் ஐயமில்லை. ஆவுடையார் கோவில் ஊரை தொட்டடுத்து, வடக்கூர் என்ற, பகுதியில் தொல்லியல் அறிஞர்களின் கவனத்திற்கு வராத, ஒரு கோவில் உள்ளது.


'ஆதி கைலாச நாதர்' என, வழங்கப்படும், அந்த கோவில் பற்றி, மேலப்பனையூர் கரு.இராஜேந்திரன் குறிப்பிட்டதால், அந்த கோவிலையும் ஆய்வு செய்தோம். அந்த கோவிலில், மூன்றாம் குலோத்துங்க சோழனின் கல்வெட்டு, பொறிக்கப்பட்ட தூண் ஒன்று உள்ளது. 'திருப்பெருந்துறை கயிலாயமுடையார்' என, வழங்கப்பட்ட அந்த கோவில், மிக பழமையானது என, அந்த கல்வெட்டால் அறியமுடிகிறது. ஆயினும், மூன்றாம் குலோத்துங்கன் காலம் வரை, செங்கல் தளியாக அக்கோவில் இருந்திருக்கும் என, தோன்றுகிறது. கோவிலின் சண்டிகேஸ்வரர் சிற்பம் கி.பி.8ம் நூற்றாண்டுக்குரியது. கோவிலின் வளாகத்தில், கி.பி. 12ம் நூற்றாண்டை சேர்ந்த திருமால் சிற்பமும் உள்ளது. கோவிலுக்கு அருகில், கி.பி.8-9ம் நூற்றாண்டுகளை சேர்ந்த, அன்னை தெய்வங்கள் சிலவற்றின் சிற்பங்கள் உள்ளன. சண்டிகேஸ்வரரின் சிற்பமும், அன்னையர் சிற்பங்களும், மாணிக்கவாசகரின் சமகாலத்தவையாக இருக்கலாம். அதனால், இந்த கோவிலிலும், வடக்கூர் பகுதியிலும், மாணிக்கவாசகர் குறித்த தொல்லியல் தடயங்களும், மாணிக்கவாசகரின் சிவன் கோவில் குறித்த தடயங்களும், கிடைக்க வாய்ப்பு உள்ளது. மாணிக்கவாசகரின் முயற்சியால், செங்கல் தளியாக உருவாக்கப்பட்டு, கி.பி.13ம் நூற்றாண்டில் கற்றளியாக, இந்த கோவில் மாற்றப்பட்டு இருக்கலாம் என்பது, எங்கள் யூகம். ஆத்மநாதர் கோவில், மாணிக்கவாசகர் உபதேசம் பெற்ற, குருந்த மரத்தடி என்பதால், சிறப்பு பெற்ற தலமாக ஆகியிருக்க வேண்டும். இந்த இரண்டு கோவில்களும், திருவாவடுதுறை ஆதீனத்தாரால் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகின்றன என்பது, குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையில் அலுவலராக பணிபுரிந்த ச.கிருஷ்ணமூர்த்தி, 10 ஆண்டுகளுக்கு முன், இந்த கோவிலையும் பார்வையிட்டு, இதன் பழமை குறித்து, திருவாவடுதுறை ஆதீன இதழ் ஒன்றில், கட்டுரை எழுதி உள்ளார் என, தெரிய வருகிறது. இந்த தகவல்களின் பின்னணியில் பார்க்கும் போது, மாணிக்கவாசகர் ஆவுடையார் கோவிலை, கட்டுவித்ததற்கான, ஆதாரம் பஞ்சாட்சர மண்டப கல்வெட்டுகளில் இல்லை என, தெரிகிறது.


* ஆவுடையார் கோவில், புதுக்கோட்டை மாவட்டத்தில், ஒரு வட்ட தலைநகராக உள்ளது


* இந்த ஊரில் உள்ள, ஆத்மநாத சுவாமி கோவிலில் மூலவராக, சிவலிங்கத்தின் ஆவுடையார் (பீடம்) மட்டும் இடம் பெற்றிருப்பதால், இந்த கோவிலும், கோவில் அமைந்துள்ள ஊரும், ஆவுடையார் கோவில் என, வழங்கப்படுகிறது


* இந்த ஊரின், பழம்பெயர் திருப்பெருந்துறை என்பது. சைவ, சமய குரவர் நால்வருள் நான்காமவரான மாணிக்கவாசக பெருமானின் வாழ்வில், பல அற்புதங்களை நிகழ்த்தியவர், இந்த 'திருப்பெருந்துறை உறை சிவபெருமான்' தான்


கடந்த மாதம், மூன்று நாளிதழ்களில், 'ஆவுடையார் கோவிலை கட்டியது மாணிக்கவாசகர்: கல்வெட்டுச் செய்யுளால் நிரூபணம்' என்ற, பொருள் உள்ள தலைப்பில், ஒரு செய்தி வெளியறானது. அதற்கு சான்றாக, ஒரு கல்வெட்டின் பகுதி புகைப்படமும் வெளியாகி இருந்தது. அந்த கல்வெட்டில் 'மாணிக்கவாசகனே' என்ற, எழுத்துக்கள் தெளிவாகவும் தெரிந்தன. ஆனால், அதன் அடிப்படையில், கோவிலை மாணிக்கவாசக பெருமான் கட்டியதாக கூறமுடியுமா என்ற, ஐயம் ஏற்பட்டதன் அடிப்படையில், தென்னிந்திய சமூக வரலாற்றாய்வு நிறுவனத்தின் எஸ்.இராமச்சந்திரன், ஆவுடையார் கோவிலுக்கு நேரில் சென்று, ஆய்வு நடத்தினார். அந்த ஆய்வின் அடிப்படையில் இந்த கட்டுரை எழுதப்பட்டு உள்ளது.


எஸ்.இராமச்சந்திரன், தென்னிந்திய சமூக வரலாற்றாய்வு நிறுவனம், சென்னை


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (8)

BAS - TIRUVARUR,இந்தியா
03-மார்-201405:49:21 IST Report Abuse
BAS எந்த காலத்திலேயோ யாரோ சிற்பிகள் கோவில் கட்டியதற்கும் தேவர் சிலைக்கு தங்க கவசம் அணிவிப்பதற்கும் என்ன சம்பந்தம்? இதெல்லாம் அரசியல் அல்லது இன ரீதியான வெறுப்பைக் காட்டுகிறது. தலைமை தடுமாறவில்லை. சரியாகத்தான் இருக்கிறது-மக்கள் மனங்களை உணர்ந்து..
Rate this:
Cancel
Faithooraan - Thondamaan Puthukkottai,இந்தியா
02-மார்-201415:30:49 IST Report Abuse
Faithooraan நந்தியின் வாயினுள் உருளும் கல் உண்மையில் நுண் உளியின் கைத்திறம். வியந்தேன். இது போன்ற புராதன விசயங்களை மேம்படுத்தாமல் தேவருக்கு தங்கத்தாலான கவசம் அதை காவல் காக்க மதிப்பு மிகு நமது காவலர்கள். இது தவறான விரயமல்லவா?. தலைமை தடுமாறுகிறது மக்களை மனங்களை உணராது.
Rate this:
Cancel
Swaminathan Nath - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
02-மார்-201409:06:34 IST Report Abuse
Swaminathan Nath நமது முன்னோர்கள் கலை திறன் நம்மை வியக்க வைக்கிறது,
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X