பெங்கலூர் டூ பொள்ளாச்சி மோதப் போவது 4சி - 10 சி

Added : மார் 04, 2014
Share
Advertisement
பெங்கலூர் டூ பொள்ளாச்சி மோதப் போவது 4சி - 10 சி

''டெஸ்ட் ரிசல்ட் வர்றதுக்கு ஒரு மணி நேரமாகுமாம்; கேன்டீன் போயிட்டு வரலாமாக்கா?,''


''ஆமாடி! எனக்கும் பசிக்குது...வா போலாம்!,''


தனியார் மருத்துவமனையில் சித்ராவும், மித்ராவும் பேசிக்கொண்டே கேன்டீன் நோக்கி நடந்தார்கள்.


''அக்கா! விஷயம் தெரியுமா? நம்மூரு எம்.எல்.ஏ.,க்கள் ரெண்டு பேரு, ஒரே ஹாஸ்பிடல்ல ஒரே நேரத்துல 'அட்மிட்' ஆகி, 'ட்ரீட்மென்ட்' எடுத்துட்டு வெளிய போயிருக்காங்க?,'' என்றாள் மித்ரா.


''அச்சச்சோ! என்னாச்சு?,'' என்று பதறினாள் சித்ரா.


''பயப்படுற மாதிரி ஒண்ணுமில்லை; ரெண்டு பேருக்கும் பயங்கர 'சுகர்; அதுல ஒருத்தருக்கு கால் விரலை எடுக்கிற அளவுக்கு பிரச்னையாகி, அதுல இருந்து சரக்கை சுத்தமா விட்டுட்டாராம்; இத்தனைக்கும் சரக்குலயே சம்பாதிச்சவரு அவரு. இன்னொரு எம்.எல்.ஏ.,வை டாக்டர்கள் பல முறை 'வார்ன்' பண்ணியும் அவரால விட முடியலையாம்; சென்னையிலயே ரெண்டு மூணு தடவை 'ஃபிளாட்' ஆகியும் இன்னும் திருந்துற மாதிரி தெரியலைங்கிறாங்க,'' என்றாள் மித்ரா.


''நம்ம எம்.பி.,யும் ஆஸ்பிடல்ல 'அட்மிட்' ஆயிருந்தாரு தெரியுமா? அவருக்கு 'ஹார்ட்'ல 3 பிளாக் இருந்துச்சாம்; 'ஆஞ்சியோபிளாஸ்ட்' பண்ணி, சரி பண்ணிருக்காங்க; இப்போ, நாளுக்கு 5 மீட்டிங்னு பரபரப்பா ஓடிட்டு இருக்காரு; அ.தி.மு.க., கூட்டணியில கோயம்புத்துார்ல அவர்தான் 'கேண்டீடேட்'ன்னு தோழர்கள் இன்னமும் அடிச்சுச் சொல்றாங்க,'' என்றாள் மித்ரா.


''இருக்கலாம்...ஆனா, போன தேர்தல்ல அ.தி.மு.க., ஆதரவோட ஜெயிச்ச பிறகு, கட்சி சார்புல நடந்த சில ஆர்ப்பாட்டங்கள்ல, 'அம்மா'வை கடுமையா அவர் விமர்சனம் பண்ணிப் பேசுனாருன்னு ஆளுங்கட்சிக்காரங்க சில பேரு, ஆதாரத்தோட 'பெட்டிஷன்'


போட்ருக்கிறதா ஒரு சேதி...!,''


''அப்படின்னா இப்பவே கலாட்டா ஆரம்பமாயிருச்சுன்னு சொல்லு...! பொங்கலுார்க்காரரு, பொள்ளாச்சியில எதிராளிங்க சந்திச்சுட்டு இருக்காரு தெரியுமா?,''

''இவருக்கு அங்க என்ன வேலை?,'' என்று ஆர்வமாய்க் கேட்டாள் சித்ரா.


''பொள்ளாச்சியில அவருக்குதான் 'சீட்'டுன்னு உறுதியாயிருச்சு; சும்மாயில்லை...'10 சி' கொடுத்து வாங்குனதா நம்ம 'சோர்ஸ்' சொல்லுது; தலைமையும் 'போய் வேலைய ஆரம்பிங்க!,'ன்னு சொல்லிருச்சு. அதனாலதான், ஆதரவாளர்களை அப்புறமா சந்திச்சுக்கலாம்னு, எதிராளிங்களை சரிக்கட்டுற வேலையில இறங்கிட்டாராம்,'' என்றாள் மித்ரா.


''இன்னொரு மேட்டர் கேள்விப்பட்டேன் மித்து! பொள்ளாச்சியில இவரை எதிர்த்து நிக்கப்போற ஊராட்சி மன்றத்தலைவருக்கும், இவருக்கும் ஒரு பந்தம் இருக்காம்; போன 'பீரியட்'ல காற்றாலைகளுக்கு இடம் வாங்கித்தர்ற 'ரியல் எஸ்டேட்' வேலையை இவரு பண்றப்போ, அவரோட கிராமத்தைச் சுத்தியும் நிலம் வாங்கிக் கொடுத்தவரு அவருதானாம். அவரும் '4 சி' கொடுத்துதான் 'சீட்' வாங்கிருக்கார்ன்னு தகவல்,'' என்றாள் சித்ரா.


''அக்கா! இங்கிலீஷ்ல பேசியே, எதிர்ல இருக்கிறவுங்களைத் திணற வைக்கிறாரு, ஆளும் கட்சி சேர்மன் ஒருத்தரு...!'' என்று அடுத்த மேட்டருக்குத் தாவினாள் மித்ரா.


''அது யாருடி...'ஆங்கிலம் பேசும் அரசியல்வாதி?''என்று கேட்டாள் சித்ரா.


''பெரியநாயக்கன்பாளையம் பஞ்சாயத்து யூனியன் தலைவர் வீரபாண்டி விஜயன்தான்; கவுன்சிலர்களோ, பஞ்சாயத்து பிரசிடென்ட்களோ வந்து, அவர்ட்ட எதையாவது கேட்டு விவாதம் பண்ணுனாங்கன்னா, உடனே இங்கிலீஷ்ல கேள்வி கேட்டு, எதிராளிங்க வாயை அடைச்சிர்றாராம்; இதனால, கட்சிக்காரங்க, ஊர்க்காரங்க மத்தியில, எங்களுக்கு அவமானமா இருக்குன்னு கவுன்சிலர்க புலம்புறாங்க,'' என்றாள் மித்ரா.


''இவ்ளோ இங்கிலீஷ் பேசுறவரு, எம்.பி.,சீட் கேட்ருக்கலாமே?,'' என்று சிரித்தாள் சித்ரா.


''நம்ம சிட்டி கவுன்சிலர்களைப் பத்தி ஏதாவது விஷயமிருக்கா?,'' என்றாள் மித்ரா.


''ஓ...! நம்ம மேயர், எல்லா கவுன்சிலர்களையும் கூப்பிட்டு, 'எலக்ஷன் வரப்போகுது; நீங்க எல்லாருமே மக்களைச் சந்திக்கணும்; காலங்காத்தால எந்திரிச்சு, துப்புரவுப் பணியாளர்களோட சேர்ந்து ஏரியாவுக்குள்ள போங்க; எந்தெந்த ஏரியால என்ன பிரச்னைன்னு தெரிஞ்சுக்கிட்டு அதைத் தீர்த்து வைக்கப்பாருங்க; அதுதான் உங்க அரசியல் வாழ்க்கைக்கும், ஆரோக்கிய வாழ்க்கைக்கும் நல்லது'ன்னு 'அட்வைஸ்' பண்ணிருக்காரு,'' என்றாள் சித்ரா.


''பரவாயில்லையே! பாரபட்சம் பாக்காம நல்ல விஷயம் சொல்லிருக்காரே!'' என்றாள் மித்ரா.


''நல்லாப் பேசுறாரே தவிர, காரியம் நடக்க மாட்டேங்குதே; அவசர கூட்டத்துக்கு அப்புறம், புட்டுவிக்கிப் பாலம், ரோடு வேலைகளுக்கெல்லாம் பூமி பூஜைய வேகவேகமா போட்ருக்காரு; ஆனா, 3 மாசத்துக்கு முன்னால, பூமி பூஜை போட்ட 'ஸ்கை வாக்' வேலை இன்னும் ஆரம்பிக்கவே இல்லை,'' என்றாள் சித்ரா.


''அவசர கூட்டத்துல ஒரு தீர்மானத்தைக் கவனிச்சியா?,'' என்று மித்ரா நிறுத்த, 'இல்லையே...!' என்று இழுத்தாள் சித்ரா.


''நம்ம மேயர் வீட்டுக்குப் பக்கத்துல இருக்கிற ஹவுசிங் போர்டு சமுதாயக் கூடத்தையும், அதைச் சுத்தி இருக்கிற நிலத்தையும் கார்ப்பரேஷன் சார்புல வாங்குறதுக்கு 5 கோடியே 13 லட்ச ரூபா நிதி ஒதுக்குறதுக்கு ஒரு தீர்மானம் போட்ருக்காங்களே...அதுல ஏதோ உள் விவகாரம் இருக்காமே?,'' என்றாள் மித்ரா.

''அதையும் விசாரிச்சு நீயே சொல்லு...கார்ப்பரேஷன்ல தொப்பி வச்சிருக்கிற ஆளும்கட்சி கவுன்சிலர் ஒருத்தரு, ரொம்ப முடியாம இருக்காரு தெரியுமா? அவரோட மருமகன்தான் இப்போ கவுன்சிலரா 'ஆக்ட்' பண்ணிட்டு இருக்காராம்; ஆட்டம் தாங்கலீங்கிறாங்க,'' என்ற சித்ரா, ''மறந்தே போயிட்டேன்...யாருடி அது 101வது வார்டு கவுன்சிலர்?,'' என்று ஆர்வமாய்க் கேட்டாள்.


''என்னக்கா இது கூட தெரியாம இருக்க...சென்னையிலயிருந்து மாசத்துக்கு நாலு வாட்டி கோயம்புத்துார் வர்ற வி.ஐ.பி.,க்குதான் போலீஸ்காரங்க, இப்படி பேரு வச்சிருக்காங்க; பழைய மேயர் வெங்கடாசலத்தை மிஞ்சுற அளவுக்கு, கோயம்புத்துார்ல திறப்பு விழாவுல கலந்துக்கிறவரு அவர்தான்; ஒரு நிகழ்ச்சியில கலந்துக்கிறதுக்கு 2 லட்ச ரூபா, நினைவுப்பரிசு, பிளைட் டிக்கெட் செலவு...எல்லாம் தரணுமாம்; போலீஸ்காரங்கதான் பந்தோபஸ்து பார்த்தே வெறுத்துட்டாங்க,'' என்றாள் மித்ரா.


''ஒரு பில்டிங்...5 புளோர்...5 கனெக்ஷன்...கவர்மென்ட்டுக்கு 45 லட்ச ரூபா நஷ்டம்...அதிகாரிகளுக்குக் கிடைச்ச லஞ்சம் 16 லட்ச ரூபா...என்கொயரியில சிக்குன இன்ஜினியர் யாருன்னு தெரியுமா?,'' என்று சித்ரா விடுகதை போட, ''ரொம்ப கஷ்டமா இருக்கே... எனக்கு கொஞ்சம் 'டைம்' கொடு; இப்போ ஏதாவது 'ஆர்டர்' பண்ணு,'' என்று மெனு கார்டை கையில் எடுத்தாள் மித்ரா.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X