எளிமையா, சிக்கனமா, கஞ்சத்தனமா? லட்டு, வாழைப்பழத்துடன் முடிந்த விழா!| Dinamalar

எளிமையா, சிக்கனமா, கஞ்சத்தனமா? லட்டு, வாழைப்பழத்துடன் முடிந்த விழா!

Added : மார் 04, 2014
Share
"ஆளுங்கட்சிக்காரங்க, சி.எம்., பிறந்தநாள் விழாவை தடபுடலா கொண்டாடிக்கிட்டு இருக்காங்க. ஆனா, எதிர்க்கட்சிக்காரங்களோ, அவுங்க, தளபதியோட பிறந்த நாளை, ரொம்ப ரொம்ப எளிமையா கொண்டாடுனாங்க தெரியுமா,'' என, விவாதத்தை துவக்கியபடி, சுடச்சுட வெங்காய பஜ்ஜி கொடுத்து உபசரித்தாள் மித்ரா."அதுவா, ஸ்டாலின் பிறந்த நாளை, அவரோட வேண்டுகோள்படி, தி.மு.க.,க்காரங்க, சிம்பிளா கொண்டாடுனாங்க.
எளிமையா, சிக்கனமா, கஞ்சத்தனமா? லட்டு, வாழைப்பழத்துடன் முடிந்த விழா!

"ஆளுங்கட்சிக்காரங்க, சி.எம்., பிறந்தநாள் விழாவை தடபுடலா கொண்டாடிக்கிட்டு இருக்காங்க. ஆனா, எதிர்க்கட்சிக்காரங்களோ, அவுங்க, தளபதியோட பிறந்த நாளை, ரொம்ப ரொம்ப எளிமையா கொண்டாடுனாங்க தெரியுமா,'' என, விவாதத்தை துவக்கியபடி, சுடச்சுட வெங்காய பஜ்ஜி கொடுத்து உபசரித்தாள் மித்ரா.

"அதுவா, ஸ்டாலின் பிறந்த நாளை, அவரோட வேண்டுகோள்படி, தி.மு.க.,க்காரங்க, சிம்பிளா கொண்டாடுனாங்க. திருப்பூர் சிட்டியில் ரெண்டே ரெண்டு இடத்துல, கம்மர்கட் சைசுல லட்டு கொடுத்தாங்க. ஒரு குரூப், அரசு மருத்துவமனையில், கர்ப்பிணிகளுக்கு ஒரு மினி பிஸ்கட் பாக்கெட், தலா ரெண்டு வாழைப்பழம் கொடுத்து ரொம்பவும் எளிமையா கொண்டாடுனாங்க,'' என்றாள் சித்ரா.

"எளிமையா கொண்டாடுங்கன்னு சொன்னதுக்காக, இதையாவது செஞ்சிருப்பாங்க. அதுவும் சொல்லலைன்னா, இது கூட நடந்திருக்காது. இதை, எளிமைன்னு சொல்றதா, சிக்கனம்னு சொல்றதா அல்லது கஞ்சத்தனம்ன்னு சொல்றதான்னு தெரியலை,'' என்று மித்ரா சொல்ல, சித்ராவுக்கோ சிரிப்பு தாங்க முடியலை.

பஜ்ஜியை மென்றபடி, அடுத்த மேட்டருக்கு தாவிய மித்ரா, "அரசு விழாவா இருந்தாலும், கட்சி விழாவா இருந்தாலும், லோக்கல் மினிஸ்டருக்கு பாதுகாப்பு பலமா இருக்கு. விழா மேடையில் அவர் அமர்ந்ததும், பி.ஏ., சைகை காட்டுறாரு. உடனே, துப்பாக்கி ஏந்திய ரெண்டு போலீஸ்காரங்க, மேடைக்கு வலது, இடதா நிக்கிறாங்க. ஏன், இப்படி பயமுறுத்துறாங்கன்னு மக்கள் பேசிக்கிறாங்க,'' என்றாள்.

"எலக்ஷன் நெருங்குதுல்ல. தண்ணீ பிரச்னையும் ஆரம்பிக்குது. அங்கங்க, சாலை மறியல் போராட்டம் நடத்துறாங்க. அமைச்சரை பொதுமக்கள் "கெரோ' செய்துடுவாங்கன்னு பயமா இருந்திருக்கும். அதுனால, பாதுகாப்பு ஏற்பாடு செஞ்சிருப்பாங்கன்னு, கூட்டணி கட்சிக்காரங்க கிண்டலா பேசிக்கிட்டு இருக்காங்க,'' என்று பதிலளித்தாள் சித்ரா.

"கூட்டணி கட்சின்னு சொன்னதும் ஞாபகம் வருது. முன்னாள் எம்.பி., பார்வதி மறைவுக்கு, அனைத்துக்கட்சி இரங்கல் கூட்டத்தை இ.கம்யூ., கட்சிக்காரங்க ஏற்பாடு செஞ்சிருந்தாங்க. அந்த கூட்டத்துக்கு, ரூலிங் பார்ட்டியில் இருந்து யாரும் கலந்துக்கல. அதனால, கம்யூ., கட்சிக்காரங்க, " அப்செட்' ஆயிட்டாங்க,'' என்று சொன்ன மித்ரா, இஞ்சி டீயை நீட்டினாள்.

அதை வாங்கி, ஒரு மடக்கு உறிஞ்சிய சித்ரா, "நீ சொன்ன மாதிரியே, ஆளுங்கட்சியில் "லேடி' வேட்பாளர் அறிவிச்சிருக்காங்களே,'' என கேட்க,

"திருப்பூர் எம்.பி., தொகுதியில் நான்கு சட்டசபை தொகுதி, ஈரோடு மாவட்டத்துக்குள்ள வருது. அதனால, அந்த மாவட்டத்துக்கு பரீட்சயமான நபரை நிறுத்தினாதான், ஓட்டு விழும். ஏன்னா, திருப்பூரை சேர்ந்த சிட்டிங் எம்.பி., கடந்த அஞ்சு வருஷத்துல, தன்னை வளப்படுத்திக் கிட்டாரே ஒழிய, ஊருக்கு ஏதும் பெரிசா செய்யலை. அவர் மீது, அந்த நான்கு தொகுதிக்காரங்க கடுங்கோபத்துல இருக்காங்க. அதனால, திருப்பூர்க்காரங்களை தவிர்த்து, அந்த ஏரியாவை சேர்ந்த வேட்பாளரை நிறுத்தியதோடு, திருப்பூரை சேர்ந்த ஆளுங்கட்சி வி.ஐ.பி., களுக்கு "செக்' வச்சிருக்காங்க,'' என்று விளக்கம் சொன்னாள் மித்ரா.

"என்ன, தோற்கடிச்சிருவாங்களோன்னு பயமா,'' என, சித்ரா விடாப்பிடியாக கேட்க,

"திருப்பூர்ல இருக்கிற ரெண்டு தொகுதிகளும், மாநகராட்சி லிமிட்டுக்குள் வருது. அமைச்சர், மேயர், சிட்டிங் எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள், மண்டல தலைவர்கள், கூட்டுறவு சங்க தலைவர்கள்னு ஏகப்பட்ட ஆளுங்கட்சி பிரமுகர்கள் இருக்காங்க. வழக்கமா, திருப்பூரை சேர்ந்தவங்க, "மண்ணின் மைந்தன்'னு கோஷம் எழுப்புவாங்க. இந்த முறை, அந்த கோஷம் இல்லாம, ஜெயிச்சுக் காட்டணும். இல்லைன்னா, இவங்களோடு பதவிக்கு ஆபத்து வந்துரும்,'' என்று மித்ரா சொல்லி முடிப்பதற்கும், பஜ்ஜி தட்டு காலியாவதற்கும் சரியாக இருந்தது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X