தாழ்த்தப்பட்டோர் குறித்த மோடி கனவு சாத்தியமா?| Dinamalar

தாழ்த்தப்பட்டோர் குறித்த மோடி கனவு சாத்தியமா?

Added : மார் 05, 2014 | |
பா.ஜ., மேல்தட்டு மக்களுக்கான கட்சி, வணிகர்களை ஆதரிக்கும் கட்சி என்ற நிலையில் இருந்து மாறி, தாழ்த்தப்பட்ட மக்களுக்கான கட்சியாக உருவெடுக்கிறது என்ற, கருத்து நிலவுகிறது. இந்நிலையில், தாழ்த்தப்பட்ட மக்களுக்கான கட்சியான, ராம்விலாஸ் பஸ்வானின், லோக் ஜனசக்தியுடன் கூட்டணி அமைத்துள்ளது பா.ஜ., இதைத் தொடர்ந்து, "அடுத்த 10 ஆண்டுகளுக்கு, இந்தியாவில் தாழ்த்தப்பட்டோருக்கான காலமாக
தாழ்த்தப்பட்டோர் குறித்த மோடி கனவு சாத்தியமா?

பா.ஜ., மேல்தட்டு மக்களுக்கான கட்சி, வணிகர்களை ஆதரிக்கும் கட்சி என்ற நிலையில் இருந்து மாறி, தாழ்த்தப்பட்ட மக்களுக்கான கட்சியாக உருவெடுக்கிறது என்ற, கருத்து நிலவுகிறது. இந்நிலையில், தாழ்த்தப்பட்ட மக்களுக்கான கட்சியான, ராம்விலாஸ் பஸ்வானின், லோக் ஜனசக்தியுடன் கூட்டணி அமைத்துள்ளது பா.ஜ., இதைத் தொடர்ந்து, "அடுத்த 10 ஆண்டுகளுக்கு, இந்தியாவில் தாழ்த்தப்பட்டோருக்கான காலமாக இருக்கும்' என, தேர்தல் பிரசாரத்தில் சொல்லியிருக்கிறார், பா.ஜ.,வின்
பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி. இதுகுறித்து, இரு அரசியல் பிரபலங்களின் கருத்து மோதல்கள் இங்கே:
இதர பிற்பட்ட வகுப்பினர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி இனத்தவரில், பொருளாதார ரீதியாக மேம்பட்டுள்ளோருக்கு, இட ஒதுக்கீடு கிடையாது என்ற திட்டத்தை அமல்
படுத்தப் போவதாக, பா.ஜ., சொல்கிறது. பா.ஜ., உடன் கூட்டணி சேர்ந்துள்ள, சஞ்சய் பஸ்வான் போன்றோர், இட ஒதுக்கீட்டில் பலனடைந்த, மூன்றாம் தலைமுறை தாழ்த்தப்பட்டோருக்கு, இட ஒதுக்கீடு இல்லை என்கின்றனர், பல நூறு ஆண்டுகளாக கல்வி, வேலை வாய்ப்பில் புறக்கணிக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள், நாட்டில் உள்ள மக்கள் தொகையில் கணிசமாக உள்ளனர். அவர்களின் காலம் தான், அடுத்த, 10 ஆண்டு
களுக்கு இருக்கும் என, மோடி கூறியதற்கு, ஓட்டு வங்கி அரசியல் அடிப்படை என்றாலும், வரவேற்கிறோம்.
அதேநேரத்தில், 1998 முதல், 2004 வரையில் நடந்த, பா.ஜ., ஆட்சி, தாழ்த்தப்பட்டோரின் ஆட்சியாக நடக்கவில்லை என, மோடியே ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார் என, தெரிகிறது. இதுநாள் வரை ஆட்சி செய்த காங்கிரஸ் அரசு, தாழ்த்தப்பட்ட மக்களின் ஆதரவுடன் தான் ஆட்சி செய்தது. இதை, மோடி புரிந்துகொண்டு, இதுபோல கூறியுள்ளாரோ என, எண்ணவும் தோன்றுகிறது. மோடி சொன்னது போல், தாழ்த்தப் பட்ட மக்களின் காலமாக, அடுத்த, 10 ஆண்டுகள் இருக்கும் என்றால், தாழ்த்தப்பட்ட மக்களுக்காக, அவர் என்ன செய்யப்போகிறார் என்பதையும் அவர் சொல்லியிருக்க வேண்டும். காங்கிரஸ் அரசு போல, உணவு உத்தரவாதம், 100 நாள் வேலைத் திட்டம் போன்ற பிச்சையை போட மோடி நினைக்கிறாரா? இல்லை, தாழ்த்தப்பட்ட மக்களின் பொருளாதாரம் மேம்பட திட்டங்களை அமல்படுத்துவாரா என்பதையும் அவர் வெளிப்படையாகப் பேச வேண்டும். அப்போது தான், அவர் கூறிய, தாழ்த்தப்பட்ட மக்களின் காலம்
என்பதை ஏற்க முடியும். எனவே, மோடியின் லட்சியம் எந்த நோக்கத்தில் இருந்தாலும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு முக்கியத்துவமும், முன்னுரிமையும் உண்மையாகவே அளிக்கும் என்றால், அதை வரவேற்போம்.

ரவிக்குமார் , பொதுச்செயலர், விடுதலை சிறுத்தைகள்

நாட்டில் உள்ள ஒடுக்கப்பட்ட மற்றும் அடித்தட்டு மக்களை கை தூக்கி விட வேண்டும் என்ற பொது நோக்கில், பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கூறியுள்ள கருத்து, ஜாதியின் அடிப்படையில் கூறியதாக அர்த்தம் கொள்ளக்கூடாது. பா.ஜ., மதவாத கட்சி, மேல்தட்டு மக்களின் கட்சி என்ற பொய்யான உருவகத்தை, எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு உருவாக்கி வருகின்றன. ஆனால், பா.ஜ., அப்படிப்பட்ட கட்சியல்ல. "குஜராத்தில் உள்ள சிறுபான்மையினருக்கு என்ன செய்தீர்கள்' என, மோடியிடம் கேட்டபோது, "நான் குஜராத்தில் உள்ள சிறுபான்மையினருக்கும் சரி, இந்துக்களுக்கும் சரி ஒன்றும் செய்யவில்லை. குஜராத்திகளுக்கு தான் செய்துள்ளேன்' என, பதில் அளித்தார். இதிலிருந்து, இந்தியாவில் உள்ள அனைத்து மக்களையும், இந்தியர்களாகவே, மோடி பார்க்கிறார். இந்தியர்களை, ஜாதி, மத அடிப்படையில், அவர் பிரித்து பார்க்கவில்லை என்பது உறுதியாகிறது. அதுபோல, அடுத்த, 10 ஆண்டுகள் தாழ்த்தப்பட்ட மக்களின் காலம் என, கூறியுள்ளதையும் பார்க்க வேண்டும். மோடியின் ஒவ்வொரு பேச்சுக்கும் ஒரு உள் அர்த்தத்தை கற்பித்துக் கொண்டிருப்பவர்கள், அவர் ஜாதி மற்றும் மத அடிப்படையிலான அரசியல் செய்கிறார். ஓட்டு வங்கியை மனதில் கொண்டு அரசியல் நடத்துகிறார் என, குறை சொல்லி வருகின்றனர். பா.ஜ.,வின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின், நாடு முழுவதும் ஏறக்குறைய, 90 பொதுக் கூட்டங்களில் மோடி பங்கேற்றுள்ளார். இதுவரை, மதசார்பின்மை என்ற, வார்த்தையை அவர் பயன்படுத்தவில்லை. ஆனால், போலியான மதசார்பின்மையை தொடர்ந்து கடைப் பிடித்து வருபவர்கள் தான், இந்தியாவில் மதச்சார்பின்மை அரசு உருவாக வேண்டும். இல்லையேல், மத மோதல்களால் உருவாகி, நாடு பிளவுபட்டு விடும் என, கூறி வருகின்றனர். இதை ஏற்க வாக்காளர்கள் தயாராக இல்லை. மோடிக்கு எதிராக கூறிவரும் பொய் பிரசாரத்தையும் அவர்கள் நம்பப்போவதில்லை. மோடியின் தலைமையில் அனைத்துத் தரப்பினருக்குமான ஆட்சி மலரும்.

ஈஸ்வரன் , தலைவர், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X