நான்கு தொகுதிகளுக்கு தகுதியானவரா திருமாவளவன்?| Dinamalar

நான்கு தொகுதிகளுக்கு தகுதியானவரா திருமாவளவன்?

Added : மார் 06, 2014 | கருத்துகள் (1)
Share
ஒவ்வொரு கட்சியும், ஏற்கனவே நடந்த தேர்தல்களில் பெற்ற ஓட்டுகளின் அடிப்படையில் தான், கூட்டணி கட்சிகளோடு தொகுதி பங்கீட்டை அமைத்துக் கொள்கின்றன. அந்த வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி, 2009 லோக்சபா தேர்தலின் போது, தி.மு.க., கூட்டணியில், இரண்டு தொகுதிகளைப் பெற்றது. தற்போதும், அதே தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றுள்ள அக்கட்சி, "எங்களுக்கு நான்கு தொகுதிகளைக் கொடுக்க வேண்டும்.
நான்கு தொகுதிகளுக்கு தகுதியானவரா திருமாவளவன்?

ஒவ்வொரு கட்சியும், ஏற்கனவே நடந்த தேர்தல்களில் பெற்ற ஓட்டுகளின் அடிப்படையில் தான், கூட்டணி கட்சிகளோடு தொகுதி பங்கீட்டை அமைத்துக் கொள்கின்றன. அந்த வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி, 2009 லோக்சபா தேர்தலின் போது, தி.மு.க., கூட்டணியில், இரண்டு தொகுதிகளைப் பெற்றது. தற்போதும், அதே தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றுள்ள அக்கட்சி, "எங்களுக்கு நான்கு தொகுதிகளைக் கொடுக்க வேண்டும். அதில், ஒன்றிரண்டு, பொதுத் தொகுதிகளாக இருக்க வேண்டும்' என, தி.மு.க., தலைமைக்கு நிபந்தனை விதித்து, பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. விடுதலை சிறுத்தைகளுக்கு இருக்கும், ஓட்டு சதவீதப்படி, ஐந்து தொகுதிகளை கூட்டணி தலைமையிடம் கேட்பது ஏற்புடையதா என்பது குறித்து, இரு பிரபலங்கள் நடத்திய கருத்து மோதல்கள் இங்கே:

கூட்டணி கட்சிகளிடம் கூடுதல் தொகுதிகளை கேட்டு, அதில் பொதுத் தொகுதிகளையும் பெற்று போட்டியிட்டு, தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் மட்டுமல்ல, அனைத்து ஜாதியினருக்குமான கட்சி, விடுதலை சிறுத்தைகள் என்ற தோற்றத்தை உருவாக்க, திருமாவளவன் முற்பட்டுள்ளார். எதற்காக கட்சி துவங்கினாரோ, அந்த நோக்கத்திலிருந்து, அவர் தடம்புரண்டு விட்டார் என்பது உறுதியாகிறது. தாழ்த்தப்பட்ட மக்களிடமிருந்து, அவர் அன்னியப்பட்டு நீண்ட காலமாகிறது. அவர்களின் பிரச்னைகளைத் தீர்க்க முயற்சிக்காமல், ஈழத் தமிழர் பிரச்னையை கையில் எடுத்துள்ளார். நாட்டில், தாழ்த்தப்பட்ட மக்கள்
படும் துயரங்களை போக்கிவிட்டோம் என்ற எண்ணத்தில், அவர் இப்படி செய்கிறாரா என, தெரியவில்லை. தான் பேசும் கூட்டங்களுக்குக் கூடும் கூட்டத்தைப் பார்த்து, மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றுவிட்டதாக நினைக்கிறாரா என்றும் தெரியவில்லை. திருமாவளவனுக்கு பேராசைகள் அதிகம். அதில், விடுதலை சிறுத்தைகள் கட்சி, லோக்சபா தேர்தலில், அதிக இடங்களில் போட்டியிட வேண்டும் என்பதும் ஒன்று.
தமிழகம் முழுவதும் உள்ள கிராமங்களில், விடுதலை சிறுத்தை கட்சிக்கு கிளைகள் இல்லை. இந்நிலையில், ஓட்டுச் சாவடியில், வேட்பாளரின் ஏஜென்டாக உட்காரக் கூட, ஆள் இல்லை. விடுதலை சிறுத்தைகள், தி.மு.க., - அ.தி.மு.க.,வோடு கூட்டணியில் போட்டியிடும் போது, அந்தக் கட்சியை சேர்ந்தவர்கள், விடுதலை சிறுத்தை வேட்பாளருக்காக, ஓட்டுச் சாவடியில் உட்காருவர். பொதுவாக, தாழ்த்தப்பட்ட மக்கள் அதிகம் உள்ள பகுதி
களில், அந்த இனத்தை சேர்ந்த இளைஞர்கள், ஓட்டுச் சாவடிகளில் இருப்பர். மற்ற ஜாதியினர் அதிகம் வாழும் பகுதிகளில் உள்ள ஓட்டுச் சாவடிகளில், தாழ்த்தப்பட்ட மக்கள், வேட்பாளரின் ஏஜென்டாக உட்கார முடியாது.
இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு, அதிக தொகுதிகளை கேட்பது நியாயமில்லை. வற்புறுத்திப்
பெற்றாலும், வெற்றி பெற முடியாது. இதுதான் யதார்த்த நிலை. திருமாவளவன் தான் புரிந்து கொள்ள வேண்டும்.

தடா பெரியசாமி, ஒருங்கிணைப்பாளர், மண்ணுரிமை மீட்பு இயக்கம்

விடுதலை சிறுத்தைகளின் பொதுக்குழு, கடந்த 2004, அக்., 2ம் தேதி நடந்தது. அதில், தாழ்த்தப்பட்ட மக்களைத் தவிர, பிற இனத்தவரையும் கட்சியில் சேர்க்க வேண்டும் என, தீர்மானம் நிறைவேற்றினோம். இதைத் தொடர்ந்து, தாழ்த்தப்பட்ட மக்கள் அல்லாத மக்கள் பலர், கட்சியில் இணைந்தனர். அவர்களுக்கும் கட்சியில் பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டிய கட்டாயம், கட்சித் தலைமைக்கு உள்ளது. எனவே தான், 2011 சட்டசபைத் தேர்தலில், சோழிங்கநல்லூர், உளுந்தூர்பேட்டை தொகுதிகளை, தி.மு.க., கூட்டணியில்
பெற்றோம். அத்தொகுதிகளில், முறையே, வன்னியர், இஸ்லாமியர்களை வேட்பாளர்களாக நிறுத்தினோம்.
இதைத் தொடர்ந்தே, லோக்சபா தேர்தலிலும், கூடுதல் இடங்களைக் கேட்கிறோம். தாழ்த்தப்பட்ட மக்களுக்காக கட்சி துவங்கி, அந்த நோக்கத்தை நிறைவேற்றிவிட்டார்களா என கேட்டால், தாழ்த்தப்பட்ட ஒருவரை தலைவராகக் கொண்ட கட்சி யில், பிற இனத்தவர்கள் இணைகிறோம். அவர்கள் எல்லாம், தாழ்த்தப்பட்ட ஒருவரை, தலைவராக ஏற்று செயல்படுகின்றனர் என்றே அர்த்தம். மேலும், தாழ்த்தப்பட்ட இனத்தினரோடு, பிற இனத்தவர்களை இணைத்து, தாழ்த்தப்பட்ட மக்களுக்கான, கோரிக்கையை வென்றெடுக்க போராடுகிறோம் என்றும் பொருள். எனவே, எங்களது அரசியல் பாதை சரியாகவே சென்று கொண்டிருக்கிறது. திராவிட கட்சிகள் போல, கிராமங்கள்தோறும் கட்சி கட்டமைப்பு உள்ளதா என்கின்றனர். அரசியல் கட்சிகள் பெரும்பாலும், கிளைகளை வைத்துள்ளன. நாங்கள் முகாம்களை அமைத்துள்ளோம். தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிகள்தோறும், முகாம்கள் உள்ளன. மற்ற இடங்களிலும் முகாம்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதன்மூலம், பெரிய அரசியல் கட்சிகளுக்கு இணையாக, கட்சி அமைப்பை நாங்கள் ஏற்படுத்தி உள்ளோம். எனவே, தேர்தல் பணியாற்ற, எங்களிடம் தேவைக்கு ஏற்ப, கட்சி அங்கத்தினர் இருக்கின்றனர். அதனால், எங்களுக்கு கூட்டணியில் கூடுதல் தொகுதி ஒதுக்கினால் தவறில்லை.

வன்னிய அரசு, செய்தித் தொடர்பாளர், விடுதலை சிறுத்தைகள்

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X